×

42 ஆண்டுகளுக்கு பின் சோழவந்தான் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பிரிவு துவக்கம்

சோழவந்தான்: சோழவந்தான் அரசு மருத்துவமனை துவங்கி 42 ஆண்டுகளுக்கு பின்னர் பல்வேறு அறுவை சிகிச்சை பிரிவு துவக்கப்பட்டுள்ளதால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மதுரை மாவட்டம் சோழவந்தானில் கடந்த 1981ம் ஆண்டு ஆக.13ம் தேதி அரசு மருத்துவமனை துவக்கப்பட்டது. இங்கு சோழவந்தான் நகர் மற்றும் சுற்றுப்புற கிராம பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இம்மருத்துவமனை 2009 நவ.21ல் திமுக ஆட்சியில் ரூ.83.74 லட்சத்தில் விரிவுபடுத்தப்பட்டது. தினமும் சுமார் 300 புற நோயாளிகளும், சுமார் 20 உள் நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மகப்பேறுக்கு மட்டுமே இங்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. மற்ற அறுவை சிகிச்சைக்கு மதுரைக்கு செல்ல வேண்டியிருந்தது. இதனால் பொதுமக்களுக்கு தேவையற்ற அலைச்சலும், காலவிரயமும் ஏற்பட்டது.

சோழவந்தான் அரசு மருத்துவமனையில் அனைத்து அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, மருத்துவ துறையில் பல்வேறு சாதனைகள் செய்து வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு இம்மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மருத்துவர்களை நியமித்தது. இதையடுத்து தற்போது பிரசவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு சிகிச்சை, மயக்கவியல், குழந்தை நலம், பொது மருத்துவம் உள்ளிட்ட அனைத்து பிரிவு சிறப்பு மருத்துவர்கள் இங்கு பணியில் உள்ளனர். பிரசவம், குடலிறக்கம், குடல்வால்வு, மார்பக கட்டி, மூலம், பௌத்திரம், வெரிகோஸ், தைராய்டு, கர்ப்பப்பை கட்டி உள்ளிட்ட அனைத்து பொது அறுவை சிகிச்சைகளும் கடந்த ஏப்ரல் முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதேபோல் கை, கால் முறிவு உள்ளிட்ட எலும்பு முறிவுகளுக்கான அறுவைச் சிகிச்சை, முதுகு வலிக்கான சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முள்ளிப்பள்ளம் பெருமாள் (58) கூறுகையில் ‘கடந்த 3ம் தேதி நடந்த விபத்தில் எனது வலது கையில் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். மறுநாளே அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மருத்துவர்களும், செவிலியர்களும் சிறப்பாக கவனித்து வருகின்றனர். நலமாக உள்ளேன். அறுவை சிகிச்சை வசதிக்கு ஏற்பாடு செய்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி’ என்றார். தலைமை மருத்துவர் தீபா கூறுகையில் ‘இங்கு எலும்பு முறிவு மற்றும் பொது அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிகிச்சைக்கு வருபவர்கள் முதலமைச்சர் காப்பீடு அட்டை, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு கொண்டு வர வேண்டும்’ என்றார். சோழவந்தான் அரசு மருத்துவமனையில் பல்வேறு அறுவைச் சிகிச்சை வசதி ஏற்படுத்தி கொடுத்த தமிழ்நாடு அரசுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

The post 42 ஆண்டுகளுக்கு பின் சோழவந்தான் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பிரிவு துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Chowandan Government Hospital ,Chozhavandan ,Chowwanthan Government Hospital ,Government Hospital ,
× RELATED சோழவந்தான் அருகே கலைஞரின் வருமுன்...