திருப்புத்தூர்: தீபாவளி போன்ற பண்டிகை, சில சடங்குகளின் போதும் வெடி வெடிக்காமல் வனத்துறைக்கும், பறவைகளின் வாழ்வியல் முறைக்கும் ஒத்துழைப்பு கொடுத்து வரும் கிராம மக்களுக்கு வனத்துறையினர் பாராட்டு தெரிவித்தனர். தமிழ்நாடு அரசு வனத்துறையின் 3வது பறவைகள் சரணாலயமான வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் 1977ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இந்த பறவைகள் சரணாலயத்தில் சைனா, பாகிஸ்தான், நேபாளம், ஸ்ரீலங்கா, ஐரோப்பா நாடுகள் மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளிலிருந்து சுமார் 37 வகையான 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் வலசை செய்யும் காலங்களான நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் வந்து தங்கி இனப்பெருக்கம் செய்து செல்கின்றன.
இக்காலங்களில் குறிப்பாக நத்தை கொக்கி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், ஆற்று உள்ளான், சீல சிறகி, மஞ்சள் மூக்கு நாரை, சின்ன சீழ்கை சிறகி, பாம்பு தாரா பறவையினங்கள் வலசை வந்து செல்கின்றன. கொள்ளுகுடிப்பட்டி, சின்னகொள்ளுகுடிப்பட்டி, வேட்டங்குடி கிராமங்களில் விவசாயம் செய்யும் மக்கள் பறவைகளை வரவேற்கும் விதமாக தீபாவளி போன்ற பண்டிகை நாட்களிலும், சில சடங்குகளின் போதும் வெடி வெடிக்காமல் வனத்துறைக்கும், பறவைகளின் வாழ்வியல் முறைக்கும் ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர்.
இந்த பண்பினை வாழ்த்தும் வகையில் ஒவ்வொரு வருடமும் தீபாவளி தினத்தன்று வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இனிப்பு வழங்கி கிராம மக்களை பாராட்டி வருகிறது. இந்த ஆண்டும் மாவட்ட வன அலுவலர் பிரபா இனிப்புகளை வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை கிராம மக்களுக்கு தெரிவித்தார். இதில் திருப்புத்தூர் அறுமுகம்பிள்ளை சீதை அம்மாள் கல்லூரி துணை முதல்வர் டாக்டர் கோபிநாத், வனச்சரக அலுவலர்கள் கார்த்திகேயன், சுபாஷ், வனவர்கள் பிரவீன்ராஜ், உதயகுமார், சக்திவேல் உள்ளிட்ட வன அலுவலர்கள் பங்கேற்றனர்.
The post பறவைகளுக்காக பட்டாசு இல்லாத தீபாவளி: கிராமத்தினருக்கு வனத்துறை பாராட்டு appeared first on Dinakaran.
