×

ஒன்றிய அரசின் கதி சக்தி திட்டத்தில் பழநி- ஒட்டன்சத்திரம்- கரூர் இடையே ரயில் சேவை ஏற்படுத்தி தர வேண்டும்

*அனைத்து தரப்பினர் கோரிக்கை

ஒட்டன்சத்திரம் : ஒன்றிய அரசின் கதி சக்தி திட்டத்தில் பழநி- ஒட்டன்சத்திரம்- கரூர் இடையே ரயில் சேவை ஏற்படுத்தி தர வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஒட்டன்சத்திரத்தில் பிரசித்தி பெற்ற காய்கறி மார்க்கெட், தயிர் மார்க்கெட், மாட்டுச்சந்தை, பள்ளி- கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவைகளுக்கு தினமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளியூர்களிலிருந்து வந்து செல்கின்றனர்.

இவர்கள் தங்களது போக்குவரத்து தேவைக்காக பஸ் மற்றும் சொந்த வாகனங்களில் தான் வந்து செல்கின்றனர். மேலும் இந்தியாவிலேயே பிரசித்தி பெற்ற பழநி முருகன் கோயில் தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், கார்த்திகை உள்ளிட்ட விழா காலங்களில் லட்சக்கணக்கானோர் ஆண்டுதோறும் கரூர், பள்ளபட்டி, அரவக்குறிச்சி, ஒட்டன்சத்திரம் வழியாக பழநிக்கு வந்து செல்கின்றனர். தற்போது நாடு முழுவதும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் கதி சக்தி திட்டம் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது.

80 ஊர்கள் அடையாளம்: இத்திட்டத்தின் கீழ் ரயில் தொடர்பு இல்லாத 50 ஆயிரம் மக்கள் வசிக்கும் ஊர்களுக்கு ரயில் சேவையை செய்து தர முடிவு செய்யப்பட்டது. அதன்படி தமிழ்நாடு, ஆந்திரா, குஜராத், அருணாச்சல பிரதேசம், மகாராஷ்ட்ரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள சுமார் 80 ஊர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதில் தமிழகத்தில் கோவை மாவட்டம் வால்பாறை, ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம், சேலம் மாவட்டம் எடப்பாடி, சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை, தேனி மாவட்டம் கம்பம், திருப்பூர் மாவட்டம் தாராபுரம், வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி ஆகிய ஊர்களுக்கு புதிய ரயில் பாதை இணைப்பு அளிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு ரயில்வே மண்டலங்களுக்கு மத்திய ரயில்வே வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் கதி சக்தி திட்டத்தின்படி பழநியிலிருந்து ஒட்டன்சத்திரம் வழியாக கரூர் செல்வதற்கு புதிய ரயில் பாதை அமைத்து ரயில் சேவையை துவக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நாடு முழுவதும் வணிக தொடர்பு: இதுகுறித்து அரசப்பபிள்ளைபட்டியை சேர்ந்த விவசாயி கேசவமூர்த்தி என்பவர் கூறியதாவது: ஒட்டன்சத்திரம், பழநி, கள்ளிமந்தையம், அம்பிளிக்கை, இடையகோட்டை, அரவக்குறிச்சி, பள்ளபட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் வணிகர்களாகவும், பல்வேறு தொழில் நிறுவனங்களை சேர்ந்தவர்களாகவும் நாடு முழுவதும் வணிக தொடர்பில் இருந்து வருகின்றனர்.

அவர்களின் வணிக தொடர்பிற்கு பயன்படும் வகையில் பழநி- ஒட்டன்சத்திரம்- கரூர் வழியாக ரயில் சேவையை துவங்க வேண்டும். இதேபோல் ஒட்டன்சத்திரம் மார்க்கமாக ஏற்கனவே இரவு நேரங்களில் இயக்கப்பட்டு வந்த கோயம்புத்தூர்- ராமேஸ்வரம் செல்லும் ரயில் தற்போது அகல பாதையாக மாற்றியதில் இருந்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் வணிகர்கள், பக்தர்கள் அதிகளவில் ஒட்டன்சத்திரம், பழநி பகுதியிலிருந்து ராமேஸ்வரம் செல்வதற்கு தற்போது திண்டுக்கல் சென்று அங்கிருந்து ரயில் மூலம் செல்ல வேண்டியுள்ளது. அப்படி செல்ல முடியாவிட்டால் பல பஸ்கள் மாறி மாறி ராமேஸ்வரம் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் காலவிரயமும், பண விரயமும் ஏற்படுகிறது. இவ்வாறு கூறினார்.

The post ஒன்றிய அரசின் கதி சக்தி திட்டத்தில் பழநி- ஒட்டன்சத்திரம்- கரூர் இடையே ரயில் சேவை ஏற்படுத்தி தர வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Union Government ,Palani ,Otanchatram ,Karur ,Kadi ,
× RELATED ஒன்றிய அரசை கண்டித்து எடப்பாடியில்...