×

ரேக்ளா ரேஸா… ஜல்லிக்கட்டா? தில்லு காட்டும் தேனி மலைமாடு : மலையிலும், நிலத்திலும் வாழ்பவை

தேனி : நம்ம ஊரு பக்கம் சும்மா சுத்திட்டு திரியும் இளந்தாரிகளை, ‘‘ஏன்டா சும்மா மலைமாடு கெனக்கா இங்குட்டும், அங்குட்டுமா திரியுறவன்’’ அப்படின்னு சொல்லுவாங்க. ஆனாலும் பலருக்கும் அந்த மலை மாடுன்னா என்னான்னு தெரியாம போயிடுச்சு. அப்படி மலை மாடுனா என்ன? தேனியில மலைமாடுகள் எவ்வளவு சிறப்பா இருக்குனு நாம தேனிக்கு போய் தெரிஞ்சிக்கப் போறோம்.

மதுரையில் இருந்து சுமார் 77 கிமீ தொலைவில் இருக்கும் இயற்கை எழில் கொஞ்சும் ஊரு தான் தேனி. மதுரையில் இருந்து இரண்டு மணி நேரம் பயணம். பயணத்தின் போதே நம்மிடம் சிலர் மலைமாடுகள் குறித்து பேச தொடங்கினர். ‘‘தமிழ்நாட்டுல 87 வகை நாட்டு மாடுகள் இனம் இருந்ததாக சொல்றாங்க. அதுல இப்போ அழிவின் விளிம்பில் இருக்கக்கூடியவை தேனி மலைமாடுகள் தான். தேனி மாவட்டம் இயற்கை கொடுத்த கொடை, பரிசுனு எல்லாரும் சொல்வாங்க… அந்த சிறப்புக்கே மேலும் சிறப்பு வாங்கி கொடுத்தது தான் இந்த மலை மாடுகள்’’அப்படின்னு விலாவாரியாக பேசிக்கொண்டே வந்தபோது தேனியே வந்துவிட்டது.

தேனியை சுத்தி இருக்குற கூடலூர், கம்பம், போடி, பெரியகுளம், எரசக்கநாயக்கனூர், நாராயணதேவன்பட்டி, கேகே.பட்டி, முத்தம்பட்டி, ஓடம்பட்டி, சுருளிப்பட்டி, அய்யம்பட்டி, பல்லவராயன்பட்டி அப்படின்னு 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இந்த மலை மாடுகள் வளர்க்கப்படுகிறது. இந்த மாடுகள் மேகமலையில் மேய்ச்சலுக்குப் போவதால் மலைமாடுகள்னு பேரு வந்துச்சுனு இப்பகுதி மக்கள் நம்மகிட்ட சொன்னாங்க. இதில் காளைகள் ரேக்ளா ரேஸ், உழவுப் பணி, ஜல்லிக்கட்டு, நீர் பாய்ச்சவும் பயன்படுகிறது. பசுக்கள் கறவை மாடுகளாக இருக்கின்றனர்.

முன்பு லட்சக்கணக்கில் இருந்த தேனி மலை மாடுகள் இப்போ 3 ஆயிரத்திற்கும் குறைவாகத்தான் இருக்கு. இதில் கரும்போர், செம்போர் என உடலில் உள்ள நிறம் இவற்றின் தனிச்சிறப்பு. அதே மாதிரி காடு, மலை, மேடுன்னு சுத்தி திரிவதால் ரேக்ளா ரேசுக்கு பக்காவா பயன்படும். மலையில் வளர்வதால் சீறிப்பாயும் குணம் கொண்டது. அதுனால சமீப காலத்துல நடக்குற ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் இந்த மலைமாடுகள் கலந்துட்டு பரிசுகளை குவிச்சுட்டு வருதுனு இந்த ஊரு இளந்தாரிங்க சொன்னாங்க.

குறிப்பாக, அய்யம்பட்டி, பல்லவராயன்பட்டி காளைகள் மட்டும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு பயிற்சியளிக்கப்படுகிறது. ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற பல ஊர் மாடுகள் தேனி மலைமாடுகளே. இதன் காரணமாக கன்றுகளுக்கு தற்போது நல்ல விலை கிடைக்கிறது. மலையில் மேயும் மாடுகள் மழை பொழிவைப் பொறுத்து கீழிறக்கப்படும். வருடத்தில் பாதி நாட்கள் மலையிலும், மீதிநாட்கள் நிலத்திலும் மேய்கின்றன.

மழையில்லாத காலத்திலும் மலையில் உணவும், சுணைகள் மூலம் நீரும் கிடைத்துவிடும். மலையில் மாடுகள் மேய்ப்பவர்கள் மலையிலேயே சமைத்து ஒருவேளை மட்டுமே உண்டு, இரவிலும் அங்கேயே தொழு அமைத்து சில தினங்கள் தங்கி கீழிறங்குவார்கள். இன்னும் சிலர் அன்றாடம் காலையில் மலைமேல் மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்று மாலையில் திரும்பி விடுவார்கள். காடுகளில் புலி, சிறுத்தை, செந்நாய், நரி போன்ற விலங்குகளை எதிர்த்து போரிடும் குணம் கொண்டவை.

கேரளாவிலிருந்து விவசாயிகள் பலரும் லாரியில் வந்து மலைமாடுகளின் சாணத்தை விலைக்கு வாங்கிச் செல்கின்றனர். லாப நோக்கினை கணக்கில் கொள்ளாமல் இந்த இன மாடுகளை காப்பாற்ற வேண்டும் என்று, செலவுகளை பெரிதாகக் கருதாமல் வளர்க்கின்றனர். இயற்கையாக மேய்ந்து வருவதால் மலை மாடுகளின் பால் ருசிமிக்கதாக கொழுப்புச்சத்துடன் திகழும். இதனை குழந்தைகளுக்கு தரும் சமயம் நல்ல உடல் வளர்ச்சி கிடைக்கும். இந்த மலை மாடுகளின் பாலை காய்ச்சும்போதே நல்ல மணம் தெரியும். கூடுதலான அளவு வெண்ணெயும் கிடைக்கும். அதே போல் கன்று இல்லால் பால் கறக்க விடாது, முட்டிவிடும். இவ்வகை மாடுகள் 25 ஆண்டுகள் வரை வாழும். மலையில் மூலிகைகளை தின்று வளர்வதால் ஆயுள் அதிகம் என்கிறார்கள்.

சுழி பார்த்து வாங்கணும்

மாடுகளில் உள்ள சுழிகளில் நன்மை தரும் சுழிகளும், தீமை தரும் சுழிகளும் இருப்பதாக மாடு வளர்ப்பவர்கள் கூறுகின்றனர். கோபுர சுழி, லட்சுமி சுழி, தாமணி சுழி, விரிசுழி, இரட்டை கவர் சுழி, பாசிங் சுழி, ஏறு புரான் சுழி, விபூதி சுழி, கொம்புதானா சுழி, ஏறு நாகச் சுழி, நீர் சுழி போன்ற சுழிகள் நன்மைகள் கொடுக்குமாம். அதே போல் அக்கினி சுழி, முக்கண் சுழி, குடைமேல் குடை சுழி, விலங்கு சுழி, பாடை சுழி, பெண்டிழந்தான் சுழி, நாகப்பட சுழி, தட்டு சுழி, துடைப்பை சுழி, புட்டாணி சுழி, படைக்கட்டு சுழி, இறங்கு புரான் சுழி, புரான் சௌவல் சுழி, வால்முடங்கி சுழி, இறங்கு நாக சுழி, கருநாகச் சுழி, மென்னிப்பிடி சுழி போன்ற சுழிகள் இருந்தால், அவை தீமை கொடுக்கும் சுழிகள் ஆகும். இந்த சுழிகள் மாடுகளின் உடலில் இருக்கின்ற இடம் அமைப்பு போன்றவற்றை கருத்தில் கொண்டு விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்கள் மாடுகளை வாங்குகின்றனர்.

மாவட்ட நிர்வாகம் விழிப்புணர்வு

கடந்த மாதம் 22ம் தேதி சின்னமனூர் அருகே சின்ன ஓவுலா கிராமத்தில் மலைமாடுகள் கண்காட்சியினை கலெக்டர் ஷஜீவனா தொடங்கி வைத்து பார்வையிட்டார். பாரம்பரிய நாட்டின மலைமாடுகளை பாதுகாப்பதற்கும், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தில் பதி செய்யப்பட இனமாக மலை மாடுகளை அங்கீகரிப்பதற்காகவும், மக்களிடையே மலைமாடுகளின் மகத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, அழிந்து வரும் இனத்தை பாதுகாக்க இந்த கண்காட்சி முன் முயற்சியாக இருக்கும் என்று கலெக்டர் தெரிவித்திருந்தார்.

The post ரேக்ளா ரேஸா… ஜல்லிக்கட்டா? தில்லு காட்டும் தேனி மலைமாடு : மலையிலும், நிலத்திலும் வாழ்பவை appeared first on Dinakaran.

Tags : Rekla Raza ,Jallikata ,HONEY MOUNTAIN ,Theni ,Kenaka ,Ankutuma ,Rekla Reza ,Honey Mountain Cow ,Delhi ,
× RELATED ஜல்லிக்கட்டு குறித்து அமெரிக்கா,...