×

மாநில தலைவர் பதவி என்பது பொறுப்பு அதை யாரும் கேட்டு பெற முடியாது

பெங்களூரு : பாஜ மாநில தலைவர் பதவி என்பது அதிகாரம் அல்ல. அதுவொரு பொறுப்பு என்றும், அந்த பொறுப்பை யாரும் கேட்டு பெற முடியாது என்பதுடன், பதவியை எதிர்பார்த்து கட்சியில் நான் இல்லை என்றும் சி.டி.ரவி தெரிவித்துள்ளார். கர்நாடக மாநில பாஜ தலைவராக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சட்டப்பேரவை தேர்தல் தோல்வி எதிரொலியாக, அதற்கு பொறுப்பேற்று பாஜ மாநில தலைவர் பதவியிலிருந்து நளின் குமார் கட்டீல் விலகினார். அதன்பின்னர் 6 மாதங்களாக கட்சியின் மாநில தலைவர் நியமிக்கப்படாமல் காலம் தாழ்த்தப்பட்ட நிலையில், கடந்த வெள்ளிக்கிழமையன்று, விஜயேந்திரா கட்சியின் மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். சி.டி.ரவி, ஷோபா கரந்தலாஜே ஆகிய இருவரில் ஒருவர் மாநில தலைவராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யாரும் எதிர்பார்த்திராத வகையில் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா தலைவராக நியமிக்கப்பட்டார்.

முதல் முறையாக எம்.எல்.ஏ ஆகியுள்ள, இளம் தலைவரான விஜயேந்திரா மீது நம்பிக்கை வைத்து பாஜ மேலிடம் மாநில தலைவர் என்ற மிகப்பெரிய பொறுப்பை அவருக்கு வழங்கியிருக்கிறது. மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், மக்களவை தேர்தலில் கர்நாடகாவில் பாஜவிற்கு வெற்றி பெற்றுத்தரும் மிகப்பெரிய பொறுப்பும் கடமையும் விஜயேந்திராவுக்கு உள்ளது.

கர்நாடக மாநிலத்தின் கட்சியின் மூத்த தலைவர்களை புறக்கணித்துவிட்டு, விஜயேந்திராவுக்கு மாநில தலைவர் பதவி வழங்கப்பட்டதால் சி.டி.ரவி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் அதிருப்தியில் இருப்பதாகவும், அதனால் விஜயேந்திராவுக்கு சீனியர்கள் ஒத்துழைப்பு கொடுக்கமாட்டார்கள் என்றும் பேசப்பட்டது. இந்நிலையில், பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய சி.டி.ரவியிடம் இதுதொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்து பேசிய சி.டி.ரவி, விஜயேந்திராவுக்கு நான் எனது வாழ்த்துகளை தெரிவித்தேன். கட்சியின் மாநில தலைவர் பதவி என்பது அதிகாரம் அல்ல; அதுவொரு பொறுப்பு. அந்த பொறுப்பை யாரும் கேட்டு பெற
முடியாது. நான் எந்த பதவியையும் எதிர்பார்த்து கட்சியில் இருக்கவில்லை. 25 ஆண்டுகளாக கட்சி தலைமை எனக்கு எந்த பொறுப்பு கொடுத்தாலும், என் பணியை செவ்வனே செய்திருக்கிறேன்.

நான் எந்த பதவியும் கேட்கவில்லை என்பதால் அதிருப்தி என்ற பேச்சுக்கே இடமில்லை. கட்சியை பலப்படுத்தும் மற்றும் மக்களவை தேர்தல் உள்ளிட்ட எதிர்கால தேர்தல்களில் கட்சிக்கு வெற்றியை பெற்றுக்கொடுக்கும் பொறுப்பு விஜயேந்திராவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அவர் சிறப்பாக செயல்பட எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அவருடன் இணைந்து பணியாற்றுவேன் என்று கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடியும், சி.டி.ரவியும் கடந்த காலங்களில் வாரிசு அரசியலுக்கு எதிராக உரத்த குரல் கொடுத்த நிலையில், இப்போது எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவிற்கு மாநில தலைவர் பதவி வழங்கப்பட்டிருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த சி.டி.ரவி, இதற்கு நான் பதில் சொன்னால் அதற்கு தவறான அர்த்தம் கர்ப்பித்து விடுவீர்கள். எனது வீடியோவை காட்டி அதை பல்வேறு விஷயங்களுடன் இணைத்துவிடுவீர்கள்.

அதனால் இந்த சூழலில் இதுதொடர்பாக நான் கருத்து கூற விரும்பவில்லை. இதுமாதிரியான கேள்விகள் ஆட்டிப்படைக்கின்றன. கட்சியின் நலனுக்கு எதிராக ஒருபோதும் சிந்தித்ததில்லை. இனி எப்போதும் கூட கட்சிக்கு எதிராக இருக்கமாட்டேன். நான் இப்போது இதுகுறித்து ஏதாவது சொன்னால் உங்களுக்கு (ஊடகங்கள்) நான் பரபரப்பு செய்தியாகிவிடுவேன். கொண்டாட்ட மனநிலையில் அனைவரும் இருக்கும்போது எதையாவது சொல்லி வருத்தமடைய செய்பவன் நான் அல்ல என்றார்.

எடியூரப்பாவின் மகனான விஜயேந்திராவை பாஜ மாநில தலைவராக நியமித்ததால், வாரிசு அரசியல் செய்வதாக காங்கிரஸ் கட்சியை விமர்சிக்க இனிமேல் பாஜவிற்கு தார்மீக தகுதி இருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த சி.டி.ரவி, இதுதொடர்பாக பொதுவெளியில் நான் பேசுவது சரியாக இருக்காது. பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் மத்தியில் ஆட்சியை அமைப்பது ஒன்றே இப்போதைக்கு எங்கள் நோக்கம். அதிலிருந்து வேறு எதிலும் கவனத்தை திசைதிருப்ப நாங்கள் விரும்பவில்லை. எனது தனிப்பட்ட அரசியலை மக்களவை தேர்தலுக்கு பின் பார்த்துக்கொள்ளலாம். கட்சியின் மாநில தலைவரை நியமிப்பதெல்லாம், கட்சி மேலிடத்தின் பணி. அதுதொடர்பாக ஊடகங்களிடம் பேச முடியாது என்றார்.

விஜயேந்திரா தலைவரானது பற்றி சி.டி.ரவி கருத்து : 

ஹாசனில் ஹாசனம்பா கோயிலில் தரிசனம் செய்த பிறகு சி.டி.ரவி கூறுகையில், ‘நானாக எதையும் கேட்டு பெற மாட்டேன். கேட்கவும் மாட்டேன். கொடுப்பதை செய்வேன் அவ்வளவு தான். மேலிட தலைவர்கள் கொடுத்த பணியை செய்வேன். அடுத்து வரும் நாட்களில் கட்சி எனக்கு பொறுப்பை கொடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதிக நாட்கள் என்னை சும்மா உட்கார வைக்கமாட்டார்கள். உட்கார வைக்கவும் முடியாது என்றார். இதை தொடர்ந்து, பாஜ கட்சியின் சில எம்எல்ஏக்களை காங்கிரஸ் கட்சி இழுப்பதாக பேசப்படுவது குறித்து அவர் பதிலளிக்கையில், காங்கிரசில் இருப்பவர்களையே சமாதானமாக வைத்து கொள்ள முடியவில்லை. இதில், மற்ற கட்சியினரை அழைத்து சென்று என்ன கொடுப்பார்கள். அரசு வரும் போது இன் கம்மிங். அரசு செல்லும் போது அவுட் கோயிங் சாதாரணம். மீண்டும் பாஜ மீண்டும் மோடி என்பதே கட்சியின் முக்கிய அஜெண்டா. இப்போதைய காலகட்டத்தில் நூறு பேரை கேட்டால் 90 பேர் பிரதமாராக மோடியை பார்க்கவே இஷ்டப்படுகிறார்கள்’ என்றார்.

The post மாநில தலைவர் பதவி என்பது பொறுப்பு அதை யாரும் கேட்டு பெற முடியாது appeared first on Dinakaran.

Tags : Bengaluru ,BJP ,
× RELATED முதல்வர் சித்தராமையா பதவி விலககோரி...