×

8 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா: மார்ஷ் 177 ரன் விளாசல்

புனே: ஐசிசி உலக கோப்பை தொடரின் 43வது லீக் ஆட்டத்தில், வங்கதேச அணியுடன் மோதிய ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீசியது. வங்கதேச தொடக்க வீரர்கள் டன்ஸித் ஹசன், லிட்டன் தாஸ் தலா 36 ரன் எடுத்து வெளியேற, கேப்டன் ஷான்டோ 45 ரன், மகமதுல்லா 32 ரன் விளாசி ரன் அவுட்டாகினர்.

பொறுப்புடன் விளையாடிய தவ்ஹித் ஹ்ரிதய் அரை சதம் அடித்தார். முஷ்பிகுர் 21 ரன், தவ்ஹித் 74 ரன் (79 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்), மிராஸ் 29 ரன் விளாசி பெவிலியன் திரும்பினர். நசும் அகமது 7 ரன் எடுத்து ரன் அவுட்டாக, வங்கதேசம் 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 306 ரன் குவித்தது. மஹேதி ஹசன் (2), டஸ்கின் அகமது (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.ஆஸ்திரேலிய பந்துவீச்சில் அப்பாட், ஸம்பா தலா 2, ஸ்டாய்னிஸ் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 307 ரன் எடுத்தால் வெற்றி என்ற சற்றே கடினமான இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. டிராவிஸ் ஹெட், டேவிட் வார்னர் இணைந்து துரத்தலை தொடங்கினர். ஹெட் 10 ரன் எடுத்து டஸ்கின் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். அடுத்து வார்னருடன் ஜோடி சேர்ந்த மிட்செல் மார்ஷ் வங்கதேச பந்துவீச்சை பதம் பார்க்க, ஆஸி. ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

இருவரும் 2வது விக்கெட்டுக்கு 120 ரன் சேர்த்தனர். வார்னர் 53 ரன் (61 பந்து, 6 பவுண்டரி) விளாசி முஸ்டாபிசுர் வேகத்தில் நஜ்முல் வசம் பிடிபட்டார். 3வது விக்கெட்டுக்கு மிட்செல் மார்ஷ் – ஸ்டீவன் ஸ்மித் ஜோடி உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்த, ஆஸ்திரேலியா 44.4 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 307 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. மிட்செல் மார்ஷ் 177 ரன் (132 பந்து, 17 பவுண்டரி, 9 சிக்சர்), ஸ்டீவன் ஸ்மித் 63 ரன்னுடன் (64 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். மார்ஷ் ஆட்ட நாயகன் விருது பெற்றார். ஆஸ்திரேலியா 9 போட்டியில் 7 வெற்றி, 2 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று 3வது இடம் பிடித்தது. வங்கதேசம் 9 போட்டியில் 2 வெற்றி, 7 தோல்வியுடன் 4 புள்ளிகள் மட்டுமே பெற்று 8வது இடத்துடன் திருப்தி அடைந்தது.

The post 8 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா: மார்ஷ் 177 ரன் விளாசல் appeared first on Dinakaran.

Tags : Australia ,Bangladesh ,Marsh ,Pune ,ICC World Cup ,Dinakaran ,
× RELATED நியூசிலாந்துடன் முதல் டி20 கடைசி...