×

கர்நாடக மாநில பா.ஜ தலைமை பதவி எனது மகனுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை: எடியூரப்பா வியப்பு

பெங்களூரு: கர்நாடக மாநில தலைமை பதவியில் எனது மகனை கட்சி மேலிடம் நியமிக்கும் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என்று முன்னாள் முதல்வர் எடியூரப்பா வியப்புடன் கூறினார்.கர்நாடக பா.ஜ தலைவராக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மகன் விஜயேந்திரா நியமிக்கப்பட்டுள்ளார். முதல் முறை எம்எல்ஏவான அவருக்கு இந்த பதவி கிடைத்தது பற்றி பெங்களூரு டாலர்ஸ் காலனியிலுள்ள வீட்டில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா நிருபர்களிடம் கூறியதாவது;

மாநில தலைவர் பதவி விஜயேந்திராவுக்கு கட்சி மேலிடம் அளித்துள்ளது. இவ்வளவு பெரிய பதவி அவருக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. டெல்லி சென்று மேலிட தலைவர்களிடம் விஜயேந்திராவுக்கு தலைவர் பதவி வழங்க வேண்டும் என நான் கேட்கவில்லை. பாஜ மேலிட தலைமை , விஜயேந்திரா மீது நம்பிக்கை வைத்து மாநில தலைவர் பதவியை அளித்துள்ளது. கட்சி தலைமையின் நம்பிக்கையை விஜயேந்திரா கண்டிப்பாக காப்பாற்றிக்கொள்வார் . மாநில தலைவர் பதவி அவருக்கு கிடைத்த நிலையில் , சவால்களையும் சந்திக்க வேண்டும். எம்பி தேர்தலில் அதிக இடங்களில் பாஜவுக்கு வெற்றி கிடைப்பதற்கான முயற்சிகளை விஜயேந்திரா மேற்கொள்வார்.

மாநில பாஜ தொண்டர்களிடம் தற்போது உற்சாகம் அதிகரித்துள்ளது.மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு முடிவு செய்துள்ளேன். தற்போது மக்களிடம் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த முறை மக்களவை தேர்தலில் 25 இடங்களில் வெற்றி பெற்றோம். இந்த முறையும் அதே போல் வெற்றி பெறுவோம். மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்பது உறுதி ஆகும்’. இவ்வாறு அவர் கூறினார்.

The post கர்நாடக மாநில பா.ஜ தலைமை பதவி எனது மகனுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை: எடியூரப்பா வியப்பு appeared first on Dinakaran.

Tags : Karnataka ,BJP ,Yeddyurappa ,Bengaluru ,
× RELATED மாநிலங்களவை தேர்தல்… கூட்டணி கட்சி...