×

பணியின்போது இறக்கும் ஊழியரின் குடும்பத்திற்கு கருணை வேலை வழங்குவது சமூக பாதுகாப்பு நடவடிக்கை: ஐகோர்ட் மதுரை கிளை கருத்து : 6 வாரத்தில் வழங்க உத்தரவு

மதுரை: நெல்லையைச் சேர்ந்த பி.அம்பிகா ஐகோர்ட் மதுரை கிளையில் 2015ல் தாக்கல் செய்த மனு:என் கணவர் ஜெகமோகன், எல்ஐசியில் பணி புரிந்தார். 1999ல் பணி நீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து மத்திய அரசு பணியாளர் நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில் 2002ல் இறந்தார். அவர் பணி நீக்கம் செய்யப்பட்டது சரியல்ல. அனைத்து பணப்பலன்களையும் வழங்க வேண்டும் என நிர்வாக தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து எல்ஐசி தாக்கல் செய்த மேல்முறையீடு தள்ளுபடியானது. இதையடுத்து என் மகன் மதன்மேகனுக்கு கருணை வேலை கேட்டு 2005ல் மனு அளித்தோம். எல்ஐசி கோட்ட மேலாளர் உள்ளிட்டோர் 2012ல் நிராகரித்து உத்தரவிட்டனர். இதை ரத்து செய்து கருணை வேலை வழங்க உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி பட்டு தேவானந்த் பிறப்பித்த உத்தரவு: மனுதாரரின் மூத்த மகன் வெளிநாட்டில் வேலை செய்து நல்ல ஊதியம் பெறுவதால், மனுதாரர் குடும்பத்துக்கு கருணை வேலை தேவையில்லை என்று கூறி கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்தில் ஒருவர் நல்ல வேலையில் இருந்தால் தன் மனைவி, குழந்தைகளை கவனிப்பார். குடும்பத்தை சேர்ந்த அனைவரையும் கவனிப்பார் என எதிர்பார்க்க முடியாது. மனுதாரர் மூத்த மகனுடன் வசிப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அப்படியிருக்கும்போது வெளிநாட்டில் வேலை பார்க்கும் மூத்த மகன், மனுதாரருக்கு நிதி உதவி செய்கிறார் என்ற முடிவுக்கு அதிகாரிகள் எப்படி வந்தார்கள் என்பது தெரியவில்லை.
இந்த வழக்கு 2015 முதல் நிலுவையில் உள்ளது. ரிட் வழக்குகளில் 8 வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற விதியில் கூறப்பட்டுள்ளது. ஆனால், எல்ஐசி அதிகாரிகள் 8 ஆண்டுகளாக பதில் மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் மனுதாரரால் உரிய காலத்தில் கருணை வேலை பெற முடியவில்லை.

மனுதாரர் தனது கணவர் இறந்த நாளில் இருந்து மகனுக்கு கருணை வேலை பெற சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார். ஊழியர் இறந்து நீண்ட காலம் ஆகிவிட்டதால் தற்போது கருணை வேலை கேட்க முடியாது என எல்ஐசி கூறுகிறது. இந்த தாமதத்துக்கு மனுதாரர் காரணம் அல்ல. எல்ஐசி அதிகாரிகள் தான் காரணம். கருணை வேலை என்பது பணியின் போது இறந்த ஊழியரின் குடும்பத்தில் ஒருவருக்கு பணி வழங்கும் சமூக பாதுகாப்பு நடவடிக்கை. தேவையற்ற, பொருந்தா காரணங்களை கூறி கருணை வேலை வழங்க மறுக்கக்கூடாது. அவ்வாறு செய்வது கருணை வேலைக்கான நோக்கத்தை தோல்வியடைச் செய்யும். இதனால் மனுதாரரின் மகனுக்கு கருணை வேலை வழங்க மறுத்து பிறப்பித்த உத்தரவுகள் ரத்து செய்யப்படுகிறது. மனுதாரரின் மகனுக்கு 6 வாரத்தில் கருணை வேலை வழங்க வேண்டும்.

The post பணியின்போது இறக்கும் ஊழியரின் குடும்பத்திற்கு கருணை வேலை வழங்குவது சமூக பாதுகாப்பு நடவடிக்கை: ஐகோர்ட் மதுரை கிளை கருத்து : 6 வாரத்தில் வழங்க உத்தரவு appeared first on Dinakaran.

Tags : ICOURT MADURAI BRANCH ,Madurai ,P.Ambika ,Nellai ,ICourt Madurai ,Jegamohan ,LIC ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் எந்த கிராமத்தில் மண்...