×

உரிமைகோராத 10 சடலங்களை அடக்கம் செய்த போலீஸ்

தஞ்சை: தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தஞ்சை மட்டுமின்றி அரியலூர், திருவாரூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானவர்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இங்குள்ள பிணவறையில் அடையாளம் தெரியாதவர்களின் சடலங்கள் குறிப்பிட்ட நாட்கள் வைத்து பாதுகாக்கப்படுவது வழக்கம். அந்த குறிப்பிட்ட நாட்களில் இறந்தவர்களின் உடல்களை உரியவர்கள் வந்து தகுந்த ஆதாரத்துடன் உரிமை கோர வேண்டும். இல்லாவிடில் இறந்தவர்களின் உடல்கள் ஆதரவற்ற சடலங்களாக கணக்கில் எடுத்துகொள்ளப்பட்டு மருத்துவமனை சார்பில் அருகில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்யப்படும்.

இந்நிலையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி எஸ்எஸ்ஐ மனோகரன், ஏட்டு ரகுநாதன் ஆகியோர் சேர்ந்து ஆதரவற்று இறந்த உடல்களை தங்களது சொந்த செலவில் அடக்கம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி நேற்று தஞ்சை அரசு மருத்துவமனைக்கு சென்று உரிமைகோராமல் வைக்கப்பட்டுள்ள இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்து கேட்டறிந்தனர். இதில் 10 இறந்தவர்களின் உடல்கள் உரிமை கோராமல் பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அந்த 10 பேரின் சடலங்களை போலீசார் தங்களது சொந்த செலவில் அடக்கம் செய்ய உள்ளதாக மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் தெரிவித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட மருத்துவமனை நிர்வாகம், உரிய சான்றிதழ்களில் போலீசாரிடம் கையெழுத்து பெற்று இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய கொண்டு செல்ல அனுமதித்தனர். இதையடுத்து போலீசார் 10 பேரின் சடலங்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அருகே உள்ள சுடுகாட்டிற்கு கொண்டு சென்றனர். அங்கு இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்தனர்.

The post உரிமைகோராத 10 சடலங்களை அடக்கம் செய்த போலீஸ் appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Ariyalur ,Tiruvarur ,Thanjavur Government Medical College Hospital ,
× RELATED தஞ்சாவூர் கல்லணை கால்வாயில் தண்ணீர்...