×

மதுரை வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

மதுரை: தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே 71 அடி உயரமுள்ள வைகை அணை தனது முழுக் கொள்ளளவை எட்டியதையடுத்து, உபரிநீர் நேற்று முதல் திறந்து விடப்படுகிறது. மதுரை, தேனி மாவட்டங்களில் பெய்து வரும் மழையால், வைகையாற்றுப் படுகையில் உள்ள துணை ஆறுகளிலும் தற்போது நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால், வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மதுரையில் செல்லும் வைகையாற்று பகுதியில் உள்ள யானைக்கல் தரைப்பாலம், ஆழ்வார்புரம் தடுப்பணை, ஓபுளாபடித்துறை, ஆரப்பாளையம் வைகையாற்று பகுதிகளில் இருகரைகளை தொட்டு வெள்ளநீர் ஓடுகிறது.

இதனிடையே வைகையாற்று கரையோரங்களில் பொதுமக்கள் செல்லவோ ஆற்றில் குளிக்கவோ, கால்நடைகளை மேய்க்கவோ கூடாது என மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், வருவாய், பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார், தீயணைப்பு வீரர்கள் வைகையாற்று கரையோரப் பகுதிகளில் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

வீடு இடிந்தது

மதுரை ஹார்வி நகரைச் சேர்ந்தவர் நாகராஜன். இவருக்கு சொந்தமான வீடு எஸ்.எஸ் காலனி வடக்குவாசல் பகுதியில் உள்ளது. இந்த வீடு அருகே உள்ள உணவகத்தினர் தங்களுக்கு தேவையான பொருட்களை வைக்க வீட்டை பயன்படுத்தி வந்தனர். நேற்றிரவு மழை பெய்த நிலையில், உணவக ஊழியர் பிரசாத், இன்று அதிகாலையில் வீட்டின் கதவை திறக்க முயன்றபோது, வீட்டுச்சுவர் இடிந்து விழுந்தது. இதில் பிரசாத்துக்கு சிறு காயம் ஏற்பட்டது. இது குறித்து எஸ்எஸ் காலனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மதுரை வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு: பொதுமக்களுக்கு எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Madurai ,Vaigai Dam ,Andipathi, Theni District ,Vaigaiathri Floods ,Dinakaran ,
× RELATED வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்