×

கெலவரப்பள்ளி அணையில் 4,480 கனஅடி நீர் திறப்பு

 

ஓசூர், நவ.11: தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், கரையோர மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.கர்நாடக மாநில தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில், கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி, அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 4,480 கனஅடியாக இருந்தது. பாதுகாப்பு கருதி அந்த தண்ணீர் முழுவதும், தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும், ரசாயன நுரையும் குவியல் குவியலாக ஆற்றில் செல்கிறது. ஆற்றில் அதிக அளவு தண்ணீர் செல்வதால், ஆற்றங்கரை ஓரங்களில் வசிக்கும் கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி, வருவாய்த்துறை சார்பில் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

பொதுமக்கள் இறங்கி குளிக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது, துணிகள் துவைப்பது மற்றும் குழந்தைகளுடன் ஆற்றை கடக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே போல், கெலவரப்பள்ளி அணையில் கூடுதலாக நீர் திறப்பால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் மொத்த உயரமான 52 அடியில், தற்போது 50.40 அடிக்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு நேற்று காலை நிலவரப்படி, 1,290 கனஅடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. அணையில் அந்த நீர் அப்படியே திறந்து விடப்படுகிறது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post கெலவரப்பள்ளி அணையில் 4,480 கனஅடி நீர் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Kelavarapalli dam ,Hosur ,Tenpenna river ,Karnataka ,Dinakaran ,
× RELATED சிறுமியை துரத்தி துரத்தி கடித்த தெருநாய்கள்