×

வரும் ஜனவரி மாதம் முதல் டிடி பொதிகை சேனல் டிடி தமிழ் என மாற்றம்: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் தகவல்

சென்னை: டிடி பொதிகை சேனல், வரும் ஜனவரி 14ம் தேதி முதல் ‘டிடி தமிழ்’ என பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளதாக ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். சென்னை சேப்பாக்கத்தில் பத்திரிகை தகவல் பணியகத்தின் புதிய அலுவலகம் திறக்கப்பட்டது. பின்னர் ஒன்றிய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் நிருபர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது: மீண்டும் டிடி தொலைக்காட்சியில், ஒலியும் ஒளியும் மற்றும் சினிமா நிகழ்ச்சிகள் ஒளிபரப்பட உள்ளது.

சென்னை மண்டலத்தில் தமிழ் மொழி நிகழ்ச்சிகளுக்காக 1993 ஏப்ரல் 15ம் தேதி ‘டிடி 5’ என்ற தொலைக்காட்சி சேனலை நிறுவியது. . பின்னர், சேனல் பெயரில் உள்ள எண்களுக்கு மாறாக உள்ளூர் பெயர்களை வைக்க தூர்தர்ஷன் முடிவெடுத்தது. அதன்படி, தொலைக்காட்சி நேயர்களிடமிருந்தே பொருத்தமான பெயர் ஒன்றை பரிந்துரைக்க கோரப்பட்டது. அதன் அடிப்படையில் ‘பொதிகை’ என்ற பெயர் சூட்டப்பட்டது. அகத்திய முனிவருக்கு, சிவபெருமானும், முருகனும் தமிழ் கற்பித்த இடமாக பொதிகை மலை கருதப்படுகிறது.

அதை உணர்த்தும் வகையில், தூர்தர்ஷனின் தமிழ் மொழி சேனலுக்கு டிடி பொதிகை என பெயர் சூட்டப்பட்டது. இந்நிலையில், வரும் ஜனவரி 14ம் தேதி முதல் “டிடி பொதிகை” சேனல் ‘டிடி தமிழ்’ என அழைக்கப்படும். இதன் மூலம், 24 ஆண்டுகால “பொதிகை” பயணம் முடிவுக்கு வரவுள்ளது. வரும் நவம்பர் 15ம் தேதி பாரத பிரதமரின் 9 ஆண்டு சாதனையை விளக்குவதற்கான யாத்திரை தொடங்கப்பட உள்ளது.

இதன் முக்கிய நோக்கம் அரசாங்கத்தின் திட்டங்களை நேரடியாக மக்களிடம் வெளிப்படுத்துவது, பிரதமர் தொடங்கி வைத்த திட்டங்களையும் மக்களிடையே வெளிப்படுத்தும் நிகழ்வாக இருக்கும். இந்த யாத்திரை ஜனவரி 25ம் தேதி வரை நடைபெற உள்ளது. நேரடியாக ஒன்றிய அரசு நலத்திட்டங்களை மக்களிடையே கொண்டு சேர்க்கும் பிரசார பயணமாக இது தொடர்கிறது. பிரசார வேன்கள் மூலம் இந்த பயணம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

The post வரும் ஜனவரி மாதம் முதல் டிடி பொதிகை சேனல் டிடி தமிழ் என மாற்றம்: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் தகவல் appeared first on Dinakaran.

Tags : DD ,Union Minister ,L. Murugan ,Chennai ,DD Package Channel ,DD Tamil ,Dinakaran ,
× RELATED கோவை, நீலகிரி மட்டுமல்ல… தமிழகம்...