×

கூட்டுறவு, பொதுத்துறை சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு 20% போனஸ்

சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: தமிழ்நாட்டில் 16 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் உள்ளன. கரும்பு விவசாயிகள் நலனில் அக்கறை கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் 2022-23 அரவை பருவத்திற்கு கூட்டுறவு, பொதுத்துறை மற்றும் தனியார் துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய தகுதிவாய்ந்த விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.195 விகிதம் வழங்குவதற்கு ஏதுவாக மொத்தம் ரூ.253.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார்.

மேலும் கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் முதல்வர் 2022-23ம் ஆண்டிற்கான மிகை ஊதியம் மற்றும் கருணை தொகை வழங்க உத்தரவிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில் ஒதுக்கீட்டு உபரி உள்ள சுப்ரமணிய சிவா மற்றும் கள்ளக்குறிச்சி – II ஆகிய இரு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கும் மிகை ஊதியமாக 8.33% மற்றும் கருணை தொகையாக 11.67% என மொத்தம் 20% போனஸ் வழங்கவும், மீதமுள்ள 14 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு மிகை ஊதியமாக 8.33% மற்றும் கருணை தொகையாக 1.67% என மொத்தம் 10% போனஸ் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

இதன்மூலம் தமிழ்நாட்டில் உள்ள 16 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் சுமார் 6,103 தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 2022-23ம் ஆண்டிற்கான மிகை ஊதியம் மற்றும் கருணை தொகை வழங்க ரூ.415.30 லட்சங்கள் செலவினம் ஏற்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post கூட்டுறவு, பொதுத்துறை சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு 20% போனஸ் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu government ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு அரசு அறிவிப்பு: அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள வசதி அறிமுகம்