×

போலீசார் மீது தாக்குதல் நடத்திய விவகாரம் அமர் பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் பாஜ நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் பனையூரில் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த கொடி கம்பத்தை அகற்றிய காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியதாகவும், பொக்லைன் இயந்திரத்தின் கண்ணாடியை உடைத்தாகவும் கூறி பாஜ மாநில திறன்மேம்பாட்டு பிரிவின் மாநில தலைவராக உள்ள அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேரையும் அக்டோபர் 21ம் தேதி போலீசார் கைது செய்தனர்.

சென்னையில் பதிவாகி இருந்த மேலும் 2 வழக்குகளிலும் அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அமர் பிரசாத் ரெட்டி சார்பில் வழக்கறிஞர் ஆர்.சி.பால்கனகராஜ் ஆஜராகி வாதிட்டார். காவல்துறை சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்ப ராஜ், அமர் பிரசாத் ரெட்டிக்கு ஜாமீன் வழங்கக்கூடாது.

கொடிக்கம்பம் வைக்க ஏற்கனவே அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அதனை மீறி கொடிக்கம்பம் வைத்துள்ளனர் என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, வழக்கின் தற்போதைய நிலை என்ன எனவும் அவர் இன்னும் எத்தனை நாட்கள் சிறையில் இருக்க வேண்டுமென்று நினைக்கிறீர்கள் என்று கேட்டார்.
இதையடுத்து, 2 வாரங்களுக்கு கானாத்தூர் காவல் நிலையத்தில் காலை மற்றும் மாலையில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்டோருக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி பொக்லைன் இயந்திரம் சேதப்படுத்தப்பட்டதற்காக அதன் உரிமையாளருக்கு ஆறு பேரும் தலா ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.12 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். அரசிடம் அனுமதி பெறாமல் சம்பந்தப்பட்ட இடத்தில் கொடிக்கம்பம் வைக்க கூடாது என்று உத்தரவிட்டார்.

* ‘அவ்ளோ உயரத்தில் கொடிக்கம்பம் வச்சா பறவை தான் வந்து உட்காரும்..’
நீதிமன்ற வாதத்தின்போது, ‘‘55 அடி உயரத்தில் கொடிக்கம்பம் வைத்தனர்’’ என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதி, அவ்வளவு உயரத்தில் வைத்தால் எந்த கொடி என்று யாருக்கு தெரியும். இதுபோன்ற செயல் முட்டாள்தனமானது. அவ்வளவு உயரத்தில் கொடி கம்பம் வைத்தால் அதில் பறவைகள்தான் உட்கார முடியும்’’ என்று கருத்து தெரிவித்தார்.

The post போலீசார் மீது தாக்குதல் நடத்திய விவகாரம் அமர் பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Amar Prasad Reddy ,Madras High Court ,Chennai ,BJP ,Chennai High Court ,Dinakaran ,
× RELATED மணமான மகளுக்கு பெற்றோர் செய்யும்...