×

வாண்டெர் டுஸன் – பெலுக்வாயோ பொறுப்பான ஆட்டம்: தென் ஆப்ரிக்காவுக்கு 7வது வெற்றி

அகமதாபாத்: ஐசிசி உலக கோப்பை தொடரின் 42வது லீக் ஆட்டத்தில், ஆப்கானிஸ்தானுடன் நேற்று மோதிய தென் ஆப்ரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது.மோடி ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்களாக குர்பாஸ், இப்ராகிம் களமிறங்கினர். குர்பாஸ் 25, இப்ராகிம் 15 ரன்னில் வெளியேற, கேப்டன் ஹஷ்மதுல்லா 2 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். ரகமத் ஷா அஸ்மதுல்லா உமர்ஸாய் ஜோடி 4வது விக்கெட்டுக்கு 49 ரன் சேர்த்தது. ரகமத் 26 ரன் எடுத்து என்ஜிடி வேகத்தில் மில்லர் வசம் பிடிபட்டார்.

அடுத்து வந்த இக்ரம் அலிகில் 12, முகமது நபி 2, ரஷித் கான் 14 ரன்னில் ஆட்டமிழந்து அணிவகுக்க, ஆப்கான் 37,5 ஓவரில் 160 ரன்னுக்கு 7 விக்கெட் இழந்து திணறியது. ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், உறுதியுடன் போராடிய உமர்ஸாய் அரை சதம் அடித்தார். உமர்ஸாய் நூர் அகமது ஜோடி 8வது விக்கெட்டுக்கு 44 ரன் சேர்த்தது. நூர் அகமது 26 ரன், முஜீப் உர் ரகுமான் 8 ரன் எடுத்து கோட்ஸீ பந்துவீச்சில் வெளியேறினர். நவீன் உல் ஹக் 2 ரன் எடுத்து கடைசி பந்தில் ரன் அவுட்டாக, ஆப்கானிஸ்தான் 50 ஓவரில் 244 ரன் குவித்து ஆல் அவுட்டானது. உமர்ஸாய் 97 ரன்னுடன் (107 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார்.

தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் கோட்ஸீ 4, என்ஜிடி, மகராஜ் தலா 2, பெலுக்வாயோ 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 245 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணிக்கு, டி காக் கேப்டன் பவுமா ஜோடி 11 ஓவரில் 64 ரன் சேர்த்து நல்ல தொடக்கத்தை கொடுத்தது. பவுமா 23 ரன், டி காக் 41 ரன் (47 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினர். வாண்டெர் டுஸன் மார்க்ரம் 3வது விக்கெட்டுக்கு 50 ரன் சேர்த்து நம்பிக்கை அளித்தனர். மார்க்ரம் 25 ரன், கிளாஸன் 10 ரன் எடுத்து ரஷித் சுழலில் விக்கெட்டை பறிகொடுக்க, ஆப்கான் தரப்பு உற்சாகம் அடைந்தது. கடுமையாகப் போராடிய வாண்டெர் டுஸன் – மில்லர் ஜோடி 5வது விக்கெட்டுக்கு 43 ரன் சேர்த்தது.

ஆப்கான் வீரர்கள் சில கேட்ச் வாய்ப்புகளை கோட்டைவிட்டதும் தென் ஆப்ரிக்காவுக்கு சாதகமாக அமைந்தது. மில்லர் 24 ரன் எடுத்து முகமது நபி பந்துவீச்சில் அவரிடமே பிடிபட, ஆட்டம் பரபரப்பானது. இந்த நிலையில், வாண்டெர் டுஸன் பெலுக்வாயோ ஜோடியின் உறுதியான ஆட்டம், தென் ஆப்ரிக்காவை வெற்றிப் பாதையில் வழி நடத்தியது. நவீன் உல் ஹக் வீசிய 48வது ஓவரில் பெலுக்வாயோ 6, 4, 6 என விளாசித் தள்ள… தென் ஆப்ரிக்கா 48.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 247 ரன் எடுத்து வென்றது. வாண்டெர் டுஸன் 76 ரன் (95 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்), பெலுக்வாயோ 39 ரன்னுடன் (37 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆப்கான் பந்துவீச்சி ரஷித் கான், முகமது நபி தலா 2, முஜீப் உர் ரகுமான் 1 விக்கெட் வீழ்த்தினர். தென் ஆப்ரிக்கா 7வது வெற்றியுடன் 14 புள்ளிகள் பெற்று 2வது இடத்தில் நீடிக்கும் நிலையில், ஆப்கானிஸ்தான் (8 புள்ளி) கடைசி வரை போராடிய திருப்தியுடன் உலக கோப்பையில் இருந்து வெளியேறியது.

The post வாண்டெர் டுஸன் – பெலுக்வாயோ பொறுப்பான ஆட்டம்: தென் ஆப்ரிக்காவுக்கு 7வது வெற்றி appeared first on Dinakaran.

Tags : Vander Dussen ,Beluquayo ,South Africa ,Ahmedabad ,ICC World Cup ,Afghanistan ,Belukwayo ,Dinakaran ,
× RELATED சிக்சர் மழையில் சாதனை