×

டேராடூனில் பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் துணிகரம்; ரிலையன்ஸ் நகைக்கடையில் ரூ.20 கோடி நகைக் கொள்ளை..!!

டேராடூன்: பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்மநபர்கள், நகை கடைக்குள் புகுந்து 20 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். உத்திராக்கண்ட் மாநிலம் டேராடூன் ராஜ்புத் சாலையில் அமைந்துள்ளது ரிலையன்ஸ் நிறுவனத்தின் நகைக்கடை. அந்த கடைக்கு அருகில் சுபாஷ் சாலையில் காவல்துறை தலைமை அலுவலகம் உள்பட முக்கிய அரசு அலுவலகங்கள் உள்ளன. இதனால் அந்த பகுதி எப்போதும் போலீசாரின் அதிக பாதுகாப்புடன் இருக்கும். போலீசாரின் ரோந்து வாகனங்களும் அவ்வப்போது சென்று கொண்டே இருக்கும்.

ராஜ்புத் சாலையில் உள்ள ரிலையன்ஸ் நகைக்கடையை வியாழக்கிழமை காலை 10:20 மணியளவில் ஊழியர்கள் திறந்தனர். நகை வாங்குவதற்காக கடை திறக்கும் முன்பே வாசலில் காத்திருந்த 4 வாடிக்கையாளர்களும் ஊழியர்களுடன் கடைக்குள் சென்றனர். அவர்கள் வாடிக்கையாளர் அமரும் இருக்கையில் அமர, ஊழியர்கள் பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த நகைகளை எடுத்து கவுண்டர்களில் அடுக்கி கொண்டிருந்தனர். சரியாக 10:25 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வந்த 4 இளைஞர்கள் கடைக்கு உள்ளே நுழைந்தனர்.

இருவர் ஹெல்மெட் அணிந்தும், இருவர் மாஸ்க் அணிந்தும் இருந்தனர். வாடிக்கையாளர் என நினைத்து ஊழியர்கள் அவர்களை வரவேற்றனர். கடையின் காவலாளியான ஹயாத் சிங், வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டுக் கொண்டிருந்தார். திடீரென அந்த நால்வரில் ஒருவர் மறைத்து வைத்திருந்த கை துப்பாக்கியை எடுத்து டேபிள் மீது வைத்துள்ளார். இதனால் ஊழியர்கள் அலறியுள்ளனர். வாடிக்கையாளர்கள், ஊழியர்கள், காவலாளிகள் உள்ளிட்ட 15 பேரையும் துப்பாக்கி முனையில் சிறை பிடித்தனர்.

அதன் பின் 3 பெண் ஊழியர்களை தவிர மற்ற அனைவரின் கைகளையும் இரண்டு மர்ம நபர்கள் கட்டினர். வரவேற்பறை அருகே அனைவரையும் அமர வைத்தனர். இருவர் துப்பாக்கி முனையில் அவர்கள் முன்னாள் நிற்க, மற்ற இருவர் 3 பெண் ஊழியர்களை மிரட்டி அலமாரியில் உள்ள நகைகளை எடுத்து தருமாறு கூறினர். அவர்கள் உயிருக்கு பயந்து நகைகளை எடுத்து தர, தாங்கள் கொண்டுவந்த பேகில் அரைகுறையாக மாஸ்க் அணிந்த திருடன் அவசர அவசரமாக அள்ளி போட்டான்.

இதனிடையே பிணைய கைதிகளாக பிடிக்கப்பட்ட ஊழியர்கள், வாடிக்கையாளர்களை ஒவ்வொருவராக துப்பாக்கி முனையில் ஒரு அறைக்குள் போட்டு மற்ற கொள்ளையர்கள் இருவரும் பூட்டும் பணியில் ஈடுபட்டனர். வெளியில் இருந்து வேறு வாடிக்கையாளர்கள் உள்ளே நுழையாமல் தடுக்க காவலாளி போல் ஒரு திருடன் வெளியில் நின்று கொண்டிருந்தான். கடைக்கு வந்த வாடிக்கையாளர்களை கடை திறக்க சற்று நேரமாகும் என்று கூறி திருப்பி அனுப்பி கொண்டிருந்தான். மேலும் போலீசார் யாரும் வருகிறார்களா என கண்காணித்தும் கொண்டிருந்தான்.

20 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்த அந்த கும்பல், அவற்றை 2 பைகளில் அள்ளிக்கொண்டு சரியாக 25 நிமிடத்தில் அங்கிருந்து தப்பினர். இதையடுத்து நகைகளை எடுத்து கொடுத்து கொள்ளையர்களுக்கு உதவி கொண்டிருந்த அந்த 3 பெண்களும், அறைக்குள் அடைக்கப்பட்டிருந்த சக ஊழியர்கள், வாடிக்கையாளர்களை மீட்டு போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் நகரத்தின் நாலாபுறமும் தடுப்புகளை ஏற்படுத்தி அவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பிவிட்டனர்.

சற்று தூரத்தில் கொள்ளைக்கு பயன்படுத்திய இரண்டு பைக்குகளையும் விட்டுவிட்டு வேறு வாகனத்தில் அந்த கும்பல் தப்பியது. இதையடுத்து ரிலையன்ஸ் ஜுவல்லரி நிறுவன ஷோரூம் மேலாளர் சவுரப் அகர்வால் அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், 4 தனிப்படைகள் அமைத்து கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.

நாட்டின் பிரபல நிறுவனமான ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான கடையில் அதுவும் உத்திராக்கண்ட் மாநில தலைநகரில் டிஜிபி அலுவலகம் அருகே முக்கிய சாலையில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் உத்திராக்கண்ட் மாநிலத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இது தொடர்பாக டிஜிபி உள்ளிட்ட உயர் அதிகாரிகளை நேரில் அழைத்து கண்டித்த முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, கொள்ளையர்களை விரைந்து பிடிக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளார்.

The post டேராடூனில் பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் துணிகரம்; ரிலையன்ஸ் நகைக்கடையில் ரூ.20 கோடி நகைக் கொள்ளை..!! appeared first on Dinakaran.

Tags : Dehradun ,Reliance Jewellery ,Bhatapagal ,Dinakaran ,
× RELATED நைனிடாலில் பயங்கர காட்டு தீ