×

சூளகிரி அருகே 13 டன் ரேஷன் அரிசி லாரியுடன் பறிமுதல்

*வருவாய்த்துறையினர் அதிரடி

கிருஷ்ணகிரி : சூளகிரி அருகே, கர்நாடகாவிற்கு கடத்திய 13 டன் ரேஷன் அரிசியுடன், லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு பறக்கும்படை தாசில்தார் சின்னசாமி தலைமையில், வருவாய் ஆய்வாளர் துரைமுருகன் மற்றும் சூளகிரி தனி வருவாய் ஆய்வாளர் சூர்யா ஆகியோர் அடங்கிய குழுவினர், நேற்று அதிகாலை சூளகிரி அடுத்த நெரிகம் பகுதியில், வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தினர்.

லாரியை நிறுத்திய டிரைவர், அதில் இருந்து இறங்கி தப்பி ஓடி விட்டார். இதையடுத்து, அந்த லாரியை அதிகாரிகள் சோதனை செய்த போது, அதில் 50 கிலோ அளவில் 256 சாக்கு பைகளில், 13 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. பின்னர், லாரியுடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த அதிகாரிகள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்து உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

விசாரணையில், லாரியை ஓட்டி வந்தவர் கெலமங்கலத்தைச் சேர்ந்த சலீம் என்பதும், ராயக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில், பொதுமக்களிடம் ரேஷன் அரிசி வாங்கி கர்நாடக மாநிலம் பங்காருப்பேட்டைக்கு விற்பனைக்காக கடத்த முயன்றது தெரிந்தது. தப்பியோடிய டிரைவர் சலீம், கடத்தலில் ஈடுபட்ட மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

The post சூளகிரி அருகே 13 டன் ரேஷன் அரிசி லாரியுடன் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Chulagiri ,Krishnagiri ,Karnataka ,Dinakaran ,
× RELATED கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த...