×

அடுத்த சுற்று ஆசையில் அதிர்ச்சி அணி ஆப்கான்: தென் ஆப்ரிக்காவுடன் இன்று மோதல்

அகமதாபாத்: ஐசிசி உலக கோப்பை தொடர் இறுதிக் கட்டத்தை நெருங்கி உள்ளது. லீக் சுற்று ஆட்டங்கள் நாளை மறுநாளுடன் முடிகிறது. இப்போது எல்லா அணிகளும் தங்கள் கடைசி லீக் ஆட்டங்களில் விளையாடி வருகின்றன. அடுத்த சுற்றான அரையிறுதிக்கு இந்தியா, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா ஆகியவை முதல் 3 இடங்களை ஏற்கனவே உறுதி செய்து விட்டன. எஞ்சிய ஒரு இடத்துக்கான போட்டியில் நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் உள்ளன. நியூசி நேற்று தனது கடைசி ஆட்டத்தில் களம் கண்ட நிலையில் ஆப்கான் தனது கடைசி ஆட்டத்தில் இன்று தெ.ஆ அணியை எதிர்கொள்கிறது.

அதற்காக அகமதாபாத்தில் நடைபெறும் 42வது லீக் ஆட்டத்தில் இந்த அணிகள் மோதுகின்றன. டெம்பா பவுமா தலைமையிலான தெ.ஆ அணி அரையிறுதியை உறுதி செய்து விட்டது. இனி வெற்றி, தோல்வி என எதை சந்தித்தாலும் புள்ளிப்பட்டியலில் 2அல்லது 3வது இடம் உறுதி. கூடவே அரையிறுதியில் ஆஸியுடன் மோதப் போவதும் உறுதி. எனினும் அதிரடி வீரர்களை வைத்திருக்கும் தெ.ஆ லீக் சுற்றை வெற்றியுடன் முடிக்க முனைப்புக் கட்டும்.

அந்த முனைப்பு வெற்றிப் பெற்றால் அதிர்ச்சி அணியான ஆப்கான் அரையிறுதி ஆசை முடிவுக்கு வந்து விடும். ஆனால் முன்னணி அணிகளுக்கு அதிர்ச்சி தோல்விகளை பரிசளித்த ஹசமத்துல்லா ஷாகிதி தலைமையிலான ஆப்கானை நம்ப முடியாது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, முன்னாள் சாம்பியன்கள் பாகிஸ்தான், இலங்கை அணிகளை வீழ்த்தி அதிர்ச்சி அளித்துள்ளது.

அதுமட்டுமல்ல 5முறை சாம்பியன் ஆஸியையும் வீழ்த்தும் வாய்ப்பையும் ஒற்றை ‘கேட்ச்’சால் தவற விட்டது. இன்று ஆப்கான் அணி வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறது. அதனால் இன்று ஏதாவது அதிர்ச்சி சம்பவங்கள் நடந்தால் ஆப்கான் வெல்லும். அப்படி வென்றாலும் நியூசி, பாக் அணிகளின் வெற்றி தோல்விகள், ரன்ரேட் ஆகியவையும் ஆப்கானின் அரையிறுதி ஆசையை முடிவுச் செய்யும்.

நேருக்கு நேர்
* இந்த 2 அணிகளும் சர்வதேச களத்தில் ஒரே ஒரு முறை தான் நேருக்கு நேர் சந்தித்துள்ளன.

* அது 2019ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பையின் 21வது லீக் ஆட்டம்.

* அந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய ஆப்கான் 34.1ஓவரில் 125ரன்னுக்கு ஆட்டமிழந்தது.

* அடுத்து களமிறங்கிய தெ.ஆ ஒரு விக்கெட் மட்டும் இழந்து 28.4ஓவரில் 131ரன் எடுத்தது. அதனால் 9விக்கெட் வித்தியாசத்தில் தெ.ஆ அபார வெற்றிப் பெற்றது.

அணி விவரம்
* ஆப்கானிஸ்தான்: ஹசமத்துல்லா ஷாகிதி(கேப்டன்), ரஹ்மனுல்லா குர்பாஸ், இக்ரம் அலிஹில்(விக்கெட் கீப்பர்கள்), இப்ராகிம் ஜத்ரன், ரஹமத் ஷா, ரியாஸ் ஹஸ்ஸன், நஜிபுல்லா ஜத்ரன், முகமது நபி, அசமத்துல்லா ஓமர்ஸாய், ரஷீத் கான், அப்துல் ரகுமான், நூர் அகமது, முஜீப் உர் ரகுமான், ஃபசல்லாக் ஃபரூகி, நவீன் உல் ஹக்.

* தென் ஆப்ரிக்கா: டெம்பா பவுமா(கேப்டன்), குயின்டன் டி காக், ஹென்ரிச் கிளாஸன்(விக்கெட் கீப்பர்கள்), ரீசா ஹென்ரிக்ஸ், அய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், ராஸி வான்டர் டுசன், மார்கோ யான்சன், அண்டில் பவுலுக்வாயோ, ஜெரால்டு கோட்சீ, கேசவ் மகராஜ், லுங்கி என்ஜிடி, காகிசோ ரபாடா, தப்ரயாஸ் ஷம்சி, லிசாட் வில்லியம்ஸ்.

அகமதாபாத் ஆட்டங்கள்
* மோடி(படேல்) அரங்கில் தெ.ஆ இதுவரை 2 ஆட்டங்களில் விளையாடி உள்ளது.

* அந்த 2 ஆட்டங்களில் ஒன்றில் இந்தியாவையும், மற்றொன்றில் இலங்கையையும் வீழ்த்தி உள்ளது. அதன் மூலம் அகமதாபாத்தில் இதுவரை தெ.ஆ தோற்றதில்லை என்ற வரலாறை படைத்துள்ளது.

* ஆப்கானிஸ்தான் இங்கு முதல் முறையாக விளையாட உள்ளது.

* தெ.ஆ 13 ஆண்டுகளுக்கு பிறகு இந்த அரங்கில் களம் காண இருக்கிறது.

* அகமதாபாத்தில் இதுவரை 29 சர்வதேச ஒருநாள் ஆட்டங்கள் நடந்துள்ளன. அவற்றில் முதலில் பேட்டிங் செய்த அணி 15லும், 2வது பேட்டிங் செய்த அணி 14லும் வென்றுள்ளன.

The post அடுத்த சுற்று ஆசையில் அதிர்ச்சி அணி ஆப்கான்: தென் ஆப்ரிக்காவுடன் இன்று மோதல் appeared first on Dinakaran.

Tags : Afghanistan ,South Africa ,AHMEDABAD ,ICC World Cup ,Dinakaran ,
× RELATED ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்