×

5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது நியூசி.: அரையிறுதி வாய்ப்பில் நீடிப்பு

பெங்களூரு: ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் 41வது லீக் ஆட்டத்தில் இலங்கை அணியுடன் நேற்று மோதிய நியூசிலாந்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கிறது. எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச முடிவு செய்தார். பதும் நிசங்கா, குசால் பெரேரா இணைந்து இலங்கை இன்னிங்சை தொடங்கினர்.  நிசங்கா 2 ரன் எடுத்து சவுத்தீ வேகத்தில் வெளியேற, அடுத்து வந்த கேப்டன் குசால் மெண்டிஸ் 6 ரன், சதீரா சமரவிக்ரமா 1 ரன், சரித் அசலங்கா 8 ரன் எடுத்து பேல்ட் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், அதிரடியாக அரை சதம் அடித்த குசால் பெரேரா 51 ரன் (28 பந்து, 9 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி பெர்குசன் பந்துவீச்சில் சாண்ட்னர் வசம் பிடிபட்டார். இலங்கை 9.3 ஓவரில் 70 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து திணறியது. இந்த நிலையில், ஏஞ்சலோ மேத்யூஸ் தனஞ்செயா டி சில்வா இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்கப் போராடினர். மேத்யூஸ் 16, தனஞ்செயா 19 ரன் எடுத்து சாண்ட்னர் சுழலில் மிட்செல்லிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தனர்.

சமிகா கருணரத்னே 6, துஷ்மந்த சமீரா 1 ரன்னில் வெளியேற, இலங்கை 32.1 ஓவரில் 128 ரன்னுக்கு 9 விக்கெட் இழந்து மீண்டும் சரிவை சந்தித்தது. கடைசி விக்கெட்டுக்கு மஹீஷ் தீக்‌ஷனா தில்ஷன் மதுஷங்கா ஜோடி 43 ரன் சேர்க்க, இலங்கை 46.4 ஓவரில் 171 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. மதுஷங்கா 19 ரன் (48 பந்து, 2 பவுண்டரி) எடுத்து ரச்சின் பந்துவீச்சில் லாதம் வசம் பிடிபட்டார். தீக்‌ஷனா 38 ரன்னுடன் (91 பந்து, 3 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூசி. பந்துவீச்சில் போல்ட் 3, பெர்குசன், சாண்ட்னர், சச்சின் தலா 2, சவுத்தீ 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து, 50 ஓவரில் 172 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு, கான்வே ரச்சின் ஜோடி 12.2 ஓவரில் 86 ரன் சேர்த்து அதிரடி தொடக்கத்தை கொடுத்தது. கான்வே 45 ரன் (42 பந்து, 9 பவுண்டரி), ரச்சின் 42 ரன் (34 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தனர். ரன் ரேட்டை அதிகரிக்கும் முயற்சியில் வில்லியம்சன் 14, சாப்மேன் 7 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். டேரில் மிட்செல் 43 ரன் (31 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி மேத்யூஸ் பந்துவீச்சில் அசலங்கா வசம் பிடிபட்டார். நியூசிலாந்து 23.2 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன் எடுத்து வெற்றியை வசப்படுத்தியது. பிலிப்ஸ் 17, லாதம் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இலங்கை பந்துவீச்சில் மேத்யூஸ் 2, தீக்‌ஷனா, சமீரா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். போல்ட் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இலங்கை 9 போட்டியில் 7 தோல்வியுடன் 4 புள்ளிகள் மட்டுமே பெற்று வெளியேறிய நிலையில், நியூசிலாந்து 10 புள்ளிகளுடன் (5 வெற்றி, 4 தோல்வி) அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கிறது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகளும் 10 புள்ளிகள் பெற வாய்ப்புள்ள நிலையில், மொத்த ரன் ரேட் அடிப்படையில் முன்னிலை வகிக்கும் நியூசிலாந்துக்கு வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறினால், மும்பையில் இந்தியாவை சந்திக்க வேண்டியிருக்கும்.

* உலக கோப்பைகளில் இலங்கைக்காக அதிவேகமாக அரைசதம் விளாசியவர்கள் பட்டியலில் குசால் பெரேரா(22பந்துகள்) நேற்று 2வது இடம் பிடித்தார். முதல் இடத்தில் டைம் அவுட் நாயகர் ஏஞ்சலோ மேத்யூஸ்(20பந்துகள், 2015) இருக்கிறார்.

* நியூசிலாந்துக்காக டி20, ஒருநாள், டெஸ்ட் என 3வகையான சர்வதேச போட்டிகளிலும் 600 விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் போல்ட் நேற்று இணைந்தார். அவர் நேற்று சமரவிக்ரமா விக்கெட்டை கைப்பற்றிய போது இந்த சாதனையை நிகழ்த்தினார்.் ஏற்கனவே டிம் சவுத்தீ-732, டேனியல் வெட்டோரி-705 விக்கெட்களை வீழ்த்தி முதல் 2 இடங்களில் உள்ளனர்.

* குறைந்த இன்னிங்சில் உலக கோப்பையில் வேகமாக 50வது விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் போல்ட் 3வது இடம் பிடித்தார். அந்த இன்னிங்ஸ் பட்டியல்…
* மிட்செட்ல் ஸ்டார்க்(ஆஸி) -19
* லசித் மலிங்கா(இலங்கை)-25
* டிரென்ட் போல்ட்(நியூசி)-28
* கிளென் மெக்ரத்(ஆஸி)-30
* முத்தையா முரளிதரன்(இலங்கை)-30
* வாசிம் அக்ரம்(பாக்)-33

* ஒருநாள் ஆட்டங்களில் இலங்கைக்காக கடைசி விக்கெட்டுக்கு அதிக பந்துகளை சந்தித்தவர்கள் என்ற சாதனையை மதுஷங்கா-தீக்‌ஷனா இணை(87பந்துகள்) நேற்று படைத்தது. அதுமட்டுமல்ல உலக கோப்பை ஆட்டங்களிலும் கடைசி விக்கெட்டுக்கு அதிக பந்துகளை சந்தித்தவர்கள் என்ற சாதனையையும் இவர்கள் படைத்தனர்.

* ஒருநாள் ஆட்டங்களில் 9வதாக களமிறங்கி அதிக பந்துகளை சந்தித்த வீரர்கள் பட்டியலில் தீக்‌ஷனா(91பந்துகள்) நேற்று 2வது இடத்தை பிடித்தார். முதல் இடத்தில் உள்ள இந்தியாவின் ஜே.பி.யாதவ் 2005ம் ஆண்டு நியூசிக்கு எதிராக 92பந்துகளை சந்தித்துள்ளார்.

* இலங்கை அணி 8ஓவர் வரை 3விக்கெட் இழப்புக்கு 70ரன் எடுத்தது. ரன் ரேட் 8.75. அதன் பிறகு 9முதல் 46.4வது ஓவர் வரை எஞ்சிய 7 விக்கெட்களை இழந்து 101ரன் எடுத்துள்ளது. ரன் ரேட் 2.61.

* இலங்கை அணியின் குசால் பெரேரா 28பந்துகளில் 51ரன் எடுக்க, மற்ற 9 வீரர்கள் சேர்ந்து 252பந்துகளில் 117ரன் எடுத்தனர்.

The post 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது நியூசி.: அரையிறுதி வாய்ப்பில் நீடிப்பு appeared first on Dinakaran.

Tags : New Zealand ,Sri Lanka ,Bengaluru ,ICC World Cup ODI ,
× RELATED சாந்தனின் உடலை இலங்கைக்கு கொண்டு...