×

அனகாபுத்தூர் மக்களின் வாழ்விட உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்

சென்னை: அனகாபுத்தூர் மக்களின் வாழ்விட உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை:

அனகாபுத்தூர் பகுதியில் அமைதியாக வாழ்ந்து வந்த குடும்பங்கள் எப்படி ஆக்கிரமிப்பு குடும்பங்கள் என வகைப்படுத்தப்பட்டன? இந்தப் பகுதியின் நில ஆவணங்களில் உண்மை தன்மை உரிய முறையில் மாண்பமை நீதிமன்றங்களின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதா? இது தொடர்பான வழக்குகளில் நில வியாபார நிறுவனங்களின் செல்வாக்கும், அழுத்தமும் இருக்கிறதா? அவ்வப்போது அரசின் நகராட்சி துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் ஆவணங்களை முறையாக கையாண்டும், பராமரித்தும் வந்துள்ளனரா? என்ற பல கேள்விகள் எழுகின்றன என்பதை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு அரசின் கவனத்துக்கு சுட்டிக் காட்டுவதுடன் அனகாபுத்தூர் பகுதி மக்களின் வாழ்விட உரிமையை பாதுகாக்கும் முறையில் கீழ்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அனகாபுத்தூர் பகுதியில் வசித்து வரும் குடும்பங்கள் அனைத்துக்கும் மனைப்பட்டா வழங்க வேண்டும். அண்மையில் ஆக்கிரமிப்பு அகற்றுதல் என்ற பெயரில் இடிக்கப்பட்ட வீடுகள் முழுமையாக அரசு செலவில் கட்டித் தரப்பட வேண்டும். நீதிமன்ற தீர்ப்புகள் நிர்பந்திக்கும் எனில் உரிய முறையில் மேல் முறையீடு செய்து, பல பத்தாண்டுகளாக வாழ்ந்து வரும் குடும்பங்களின் வாழ்வுரிமை, வசிப்பிட உரிமை நிலைநாட்டப்பட வேண்டும்.
நில ஆவணங்கள் பதிவு மற்றும் வகை மாற்றம் போன்றவைகளை மறு ஆய்வு செய்து, தவறுகள் கண்டறியப்பட வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகள் மீது தமிழ்நாடு அரசின் நகர்புற வளர்ச்சித் துறை உள்ளிட்ட தொடர்புடைய துறைகள் உரிய நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் தக்க உத்தரவு வழங்க வேண்டும்.

The post அனகாபுத்தூர் மக்களின் வாழ்விட உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Anagaputhur ,Mutharasan ,Chennai ,Communist Party of India ,Dinakaran ,
× RELATED அரசியல் ஆதாயம் தேடும் மலிவான செயலில்...