×

தீபாவளிக்கு பிறகு அமல்படுத்தப்பட இருந்த கார் கட்டுப்பாடு திட்டம் திடீர் ஒத்திவைப்பு :உச்ச நீதிமன்றத்தின் கருத்தை அறிந்த பிறகு அமல்படுத்த முடிவு

புதுடெல்லி: வாகன கட்டுப்பாடு திட்டத்தின் தாக்கம் குறித்து உச்ச நீதிமன்றம் மதிப்பாய்வு செய்து தெரிவிக்கும் வரை இத்திட்டம ஒத்தி வைக்கப்படுவதாக மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபரால் ராய் நேற்று தெரிவித்தார். டெல்லியில் அதிகரித்து வரும் காற்றுமாசுவை கட்டுப்படுத்த, மீண்டும் கார் கட்டுப்பாடு திட்டத்தை தீபாவளிக்கு பின்னர் அமல்படுத்தப்படும் என டெல்லி அரசு அறிவித்தது. குறிப்பாக, மாற்று நாட்களில் கார்களை இயக்க அனுமதிக்கும் இந்த கார் கட்டுப்பாடு திட்டம் நவம்பர் 13 முதல் நவம்பர் 20 வரை அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் கோபால் ராய் அறிவித்திருந்தார். ஆனால், இத்திட்டம் ஏற்கனவே நகரில் அமல்படுத்தப்பட்டபோது அதனால் ஏற்பட்ட விளைவுகள், பயன்கள் குறித்து உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் நடைபெற்ற இதுதொடர்பான விசாரணையின்போது கேள்வி எழுப்பியது.

அதோடு, இந்த விவகாரத்தில் காற்றுமாசுபாட்டை குறைக்க இதுவரை எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய டெல்லி, பஞ்சாப், உபி, அரியானா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. இது தொடர்பான வழக்கு நாளை மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. இந்நிலையில், அமைச்சர் கோபால் ராய் நேற்று கூறியதாவது: சிகாகோ பல்கலைக்கழகத்தின் எரிசக்தி கொள்கை நிறுவனம் மற்றும் டெல்லி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் நடத்திய இரண்டு முக்கிய ஆய்வுகளின் முடிவுகளை உச்ச நீதிமன்றம் மதிப்பாய்வு செய்து அதன் செயல்திறனை தீர்மானிக்க டெல்லி அரசு ஆய்வு முடிவுகளை சமர்ப்பிக்கும். எனவே, ஒற்றைப்படை-இரட்டைப்படை கார் கட்டுப்பாடு திட்டத்தை செயல்படுத்துவது குறித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பின்னரே அதை அமல்படுத்துவது பற்றி முடிவு எடுக்கப்படும்.

அதுவரை இத்திட்டம் ஒத்தி வைக்கப்படும். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி ஆப் அடிப்படையிலான டாக்சிகள் டெல்லிக்குள் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கன்னாட் பிளேஸ் புகை கோபுரத்தை முழு அளவில் மீண்டும் தொடங்கவும், மீதமுள்ள நிதியை ஐஐடி கான்பூருக்கு வழங்கவும் டெல்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழுவுக்கு டெல்லி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. டெல்லியில் திறந்தவெளியில் கழிவுகளை எரிப்பதைத் தடுக்க சிறப்பு இயக்கம் நடத்தப்படும். இதற்காக 611 குழுக்கள் அமைக்கப்படும். இவ்வாறு கூறினார்.

ஆய்வு முடிவுகளில் ஏமாற்றம்

சிகாகோ பல்கலைக்கழகத்தில் உள்ள எரிசக்தி கொள்கை நிறுவனம் கடந்த 2016 ஆம் ஆண்டில் ஒற்றைப்படை-இரட்டை படை திட்டத்தின் தாக்கத்தை பகுப்பாய்வு செய்தன. அதில், மேலும் டெல்லியில் அந்த ஆண்டின் ஜனவரியில் பிஎம்2.5 அளவுகளில் 14-16 சதவீதம் மாசுபாடு குறைந்து இருந்ததாக கண்டறிந்தது. இருப்பினும், அந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்தத் திட்டம் மீண்டும் கொண்டுவரப்பட்டபோது மாசுபாடு குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

The post தீபாவளிக்கு பிறகு அமல்படுத்தப்பட இருந்த கார் கட்டுப்பாடு திட்டம் திடீர் ஒத்திவைப்பு :உச்ச நீதிமன்றத்தின் கருத்தை அறிந்த பிறகு அமல்படுத்த முடிவு appeared first on Dinakaran.

Tags : Diwali ,Supreme Court ,New Delhi ,
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக...