×

‘கண் தானம்’ செய்பவர் மறுபிறவியில் பார்வையற்றவராகப் பிறப்பார் என்கிறார்களே, சரியா?

வாழ்க்கையின் குறிக்கோள் யாது?
– ராகவி, சின்னாளம்பட்டு.

சம்ஸ்க்ருதத்தில் விலங்கிற்கு பசு எனப்பெயர். ‘பஸ்யதி இதி பசு’. அதாவது எது பொருள்களின் உண்மையான மதிப்பைப் பற்றி சிந்தியாமல் தோற்றத்தை மட்டும் கண்டு மதிப்பிடுகிறதோ அத்தகைய ஜீவன், பசு என்று அழைக்கப்படும். விலங்குகளுக்கு எந்தவித ஆராய்ச்சியும் தேவையில்லை. உண்ணத் தகுந்தவை மட்டுமே அவற்றிற்கு பயன்படும் பொருளாக இருக்கும். மனிதன் என்ற சொல் சம்ஸ்க்ருத சொல்லான `மனுஷ்யா’ என்பதிலிருந்து பெறப்பட்டது.

மனுஷ்யாவின் மூலமான ‘மன்’ என்றால் ‘சிந்திக்க’ என்று பொருள். அதாவது, மனிதன் ஒரு பொருளை ஸ்தூல உருவத்தில் பார்த்தால் மட்டும் போதாது. அவன் அப்பொருளின் உண்மையான தன்மை என்ன என்பதைச் சிந்தித்து அறிய வேண்டும். உண்மையைப் பற்றிய ஞானம், வாழ்க்கையில் உண்மையான வெற்றியை அளிக்கிறது. நம் மனதை வெற்றி கொள்வதுதான் அந்த வெற்றி. மனித வாழ்க்கையின் முக்கிய குறிக்கோள் உண்மையை அறிவது, இன்ப நுகர்ச்சிக்காக மட்டும் அல்ல.

மந்திரங்களையோ, சுலோகங்களையோ, பூஜை முறைகளையோ அறியாத பாமரர்கள் நிறைய இருக்கிறார்கள். அத்தகைய எளிய மக்கள் பக்தி வழிபாட்டில் ஈடுபடுவது எப்படி?
– சூர்யகலா, திருத்தணி.

வழிபாடு நடக்கும் இடங்களுக்கு முதலில் அவர்களை அழைத்துச் சென்று அவர்கள் கேட்கும்படியாகச் செய்ய வேண்டும். கேட்டுக் கொண்டேயிருந்தால் மந்திரங்களையும், சுலோகங்களையும், பூஜை முறைகளையும் தாங்களும் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் அவர்களுக்கு ஏற்படும். அப்படி ஆர்வத்துடன் வருபவர்களுக்குத் தகுந்தவர்கள் மூலம் சொல்லிக் கொடுக்க வேண்டும். இலவசமாய் ஸ்தோத்ர புஸ்தகங்களை அளித்து உற்சாகப்படுத்த வேண்டும். நாளடைவில் அவர்கள் சிறந்த பக்திமான்கள் ஆகிவிடுவார்கள். பூஜைகளையும் செய்து மகிழ்ந்திருப்பார்கள்.

‘கண் தானம்’ செய்பவர் மறுபிறவியில் பார்வையற்றவராகப் பிறப்பார் என்கிறார்களே, சரியா?
– என்.கமலா நந்தகுமார், விசாகப்பட்டினம்.

முந்தின பிறவியில் நீங்கள் யாராக அல்லது எதுவாக இருந்தீர்கள்? உங்களுக்கே தெரியாது. இப்படியிருக்க, அடுத்த பிறவியில் ஊனம் ஏற்படலாம் என்று நீங்களாகக் கற்பனை செய்துகொள்வது எப்படிச் சரியாகும்? இது மிகவும் தவறான கருத்து. உங்கள் கண்கள் மூலம் இந்தப் பிறவியில் பார்வையற்றவர் ஒருவரால் பார்க்க முடிகிறது என்றால் அது ‘கண்ணப்ப நாயனார்’ பாக்கியம் என்று கருதுங்கள். இத்தனைக்கும் உங்கள் மறைவுக்குப் பிறகு, உங்களால் வலியையோ, சுற்றுச்சூழலையோ உணரமுடியாதபோது செய்யப்படும் தானம் அது.

அப்படி தானமளிப்பதாக உயிருடன் இருக்கும்போதே மனமுவந்து எழுத்து மூலமாக நீங்கள் சம்மதித்திருக்கிறீர்கள். ஆகவே மறுபிறவியோ, இந்த தானத்தால் அப்போது ஊனமாக வாழ்வீர்கள் என்றோ மிகமிகத் தவறாகக் கற்பனை பண்ணிக்கொள்ளாதீர்கள். உங்களால் பார்வை பெற்றவர் மனம் அடையும் மகிழ்ச்சி, அவருடைய வாழ்த்துகள் எல்லாமும் உங்களை அடுத்த ஜன்மமல்ல, அடுத்தடுத்த ஜன்மங்களிலும் எந்தக் குறையும் இல்லாமல் வாழ வைக்கும்.

குடும்பத்தில் பிறந்த மூத்த பெண் அல்லது மூத்த பிள்ளைக்கு ஆனி மாதம் திருமணம் செய்யக்கூடாது என்கிறார்களே… இது சரியானதா?
ப.த.தங்கவேலு, பண்ருட்டி.

ஆனி மாதத்தில் பிறந்த மூத்த குமாரனுக்கு (ஜேஷ்ட குமாரன்), அதே ஆனி மாதத்தில் பிறந்த மூத்த குமாரத்திக்கும் (ஜேஷ்ட குமாரத்தி), ஜேஷ்டமாதம் என்றழைக்கப்படும் ஆனி மாதத்தில் திருமணம் செய்யக்கூடாது, சந்நதி பாதிக்கப்படும் என்று உரைக்கிறது “காலாமிருதம்’’ என்கிற ஜோதிட நூல். இதனை ‘த்ரிஜேஷ்டை’ என்று ஜோதிட அறிஞர்கள் சொல்வார்கள். ஆனால் பொதுவாக, மூத்த பெண்ணிற்கோ அல்லது ஆணுக்கோ ஆணி மாதத்தில் செய்யக் கூடாது என்று சொல்லக் கூடாது.

தலைச்சன் பிள்ளையாகப் பிறந்தவனுக்கு (ஜேஷ்ட குமாரன்) அதே போன்று தலைச்சனாகப் பிறந்தவளுக்கும் (ஜேஷ்ட குமாரத்தி) ஆனி மாதத்தில் (ஜேஷ்ட மாதத்தில்) திருமணம் செய்வதுகூடாது. மற்ற மாதங்களில் இதே ஜோடிக்குத் திருமணம் செய்யலாம்.

தொகுப்பு: அருள்ஜோதி

The post ‘கண் தானம்’ செய்பவர் மறுபிறவியில் பார்வையற்றவராகப் பிறப்பார் என்கிறார்களே, சரியா? appeared first on Dinakaran.

Tags : Raghavi ,Sinnalampattu ,Samskrit ,Idi Pasu ,
× RELATED அனந்தனுக்கு 1000 நாமங்கள்