×

காலை 6-7 மணி, இரவு 7-8 மணி வரை அனுமதி நீதிமன்ற அனுமதி நேரத்தை மீறி பட்டாசுகள் வெடித்தால் வழக்கு: கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா எச்சரிக்கை

சென்னை, நவ.9: தீபாவளி பண்டிகையின் போது நீதிமன்றம் அனுமதி அளித்த நேரத்தை மீறி பட்டாசுகள் வெடித்தால் காவல்துறை சார்பில் வழக்கு பதிவு செய்யப்படும் என்று மாநகர கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று மாநகர தெற்கு கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா மற்றும் போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர் ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் பேசியதாவது: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை மாநகர காவல் எல்லையில் போலீஸ் கமிஷனர் உத்தரவுப்படி, 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். குற்றங்களை தடுக்க பைக், நான்கு சக்கர வாகனங்கள் மூலம் ரோந்து பணி மேற்கொள்ளப்படும். டிரோன்கள் பயன்படுத்தப்படும். குற்றவாளிகளை அடையாளம் காட்டும் செயலி மூலம் கண்காணிக்கப்படும். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும். இந்த சட்டத்தை யாரேனும் மீறினால் வழக்கு பதிவு செய்யப்படும். பொதுமக்கள் தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாட வேண்டும். அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டும்தான் பட்டாசுகள் வெடிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க கூடாது. பாதுகாப்பான இடங்களில் மட்டும் பட்டாசுகள் வெடிக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர் கூறியதாவது: போக்குவரத்தை பொறுத்தமட்டில் இரண்டு விதமாக பாதுகாப்பு வழங்கப்படுகிறது. ஒன்று வெளியூர்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள். இரண்டாவது சென்னை மாநகரத்திற்குள் வர்த்தக பகுதிகள் என இரண்டு விதமாக பிரித்து வைத்துள்ளோம். வெளியூர் செல்பவர்களுக்கு வசதியாக போக்குவரத்துக்கழக அதிகாரிகளுடன் பேசினோம். தீபாவளிக்கு 10ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகிறது. வழக்கமான நாட்களில் 4 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படும். கூடுதலாக 6 ஆயிரம் பேருந்துகள் என 9, 10, 11 ஆகிய தேதிகளில் மொத்தம் ஒவ்வொரு நாளும் 10 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

தீபாவளி போன்ற முக்கிய பண்டிகையின் போது ஒரே இடத்தில் இருந்து பேருந்துகள் இயக்குவது இல்லை. கோயம்பேடு, மாதவரம், கே.ேக.நகர், தாம்பரம், பூந்தமல்லி போன்ற இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது. கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும் பேருந்துகள் அனைத்தும் கே.கே.நகரில் இருந்து இயக்கப்படும். திண்டிவனம் வழியாக செல்லும் பேருந்துகள் தாம்பரத்தில் இருந்து செல்லும், கிருஷ்ணகிரி, ஓசூர் பகுதிக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் பூந்தமல்லியில் இருந்து இயக்கப்படும். ஆந்திரா பகுதிகளை நோக்கி செல்லும் பேருந்துகள் மாதவரம் பகுதியில் இருந்து இயக்கப்படும். திருநெல்வேலி, நாகர்கோவில் போன்ற பல்வேறு இடங்களுக்கு கோயம்பேடு பகுதியில் இருந்து இயக்கப்படும். அதற்கு ஏற்றப்படி பொதுமக்கள் திட்டமிட்டு பயணத்தை வகுத்து கொள்ளவேண்டும்.

வழக்கமான நாட்களில் கனரக வாகனங்கள் சென்னைக்குள் 2 மணி முதல் 4 மணி வரை அனுமதிக்கப்படும். ஆனால் தீபாவளி பாண்டிகையால் கனரக வாகனங்கள் மாதவரம் ரவுண்டானா பகுதியில் இருந்து மாநகரத்திற்குள் செல்ல அனுமதிக்க மாட்டோம். வானகரம் சந்திப்புக்கு பிறகு அனுமதிக்க மாட்டோம். அண்ணாநகர் ஆர்ச்சுக்கு பிறகு அனுமதி இல்லை. இது தீபாவளி முன்பும் பின்பும் இந்த நடைமுறை அமலில் இருக்கும். புதிதாக அமைக்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்குவது குறித்து தற்போது பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதனால் அங்கிருந்து தற்போது பேருந்துகள் இயக்கப்படவில்லை. கோயம்பேடு பகுதியில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் மதுரவாயல் பகுதி வழியாகத்தான செல்லும், வடபழனி வழியாக செல்லாது. ஆம்னி பேருந்துகள் சங்க நிர்வாகிகளை அழைத்து பேசி இருக்கோம். இதனால் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். அப்படி பேருந்துகள் சாலையில் நிறுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூடுதல் கமிஷனர்கள் கூறினார்.

The post காலை 6-7 மணி, இரவு 7-8 மணி வரை அனுமதி நீதிமன்ற அனுமதி நேரத்தை மீறி பட்டாசுகள் வெடித்தால் வழக்கு: கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Prem Anand Sinha ,Chennai ,Diwali festival ,
× RELATED அண்ணாமலைக்கு எதிரான வழக்கில் விசாரணை...