×

பாஜ பிரமுகரின் துணிக்கடையில் 3 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு:  மேலும் 3 சிறுவர்கள் ஓட்டம்  உரிமையாளர் மீது புகார்

தண்டையார்பேட்டை, நவ. 9: தீபாவளி விற்பனை களைகட்ட தொடங்கிய நிலையில், வண்ணாரப்பேட்டையில் பாஜ பிரமுகருக்கு சொந்தமான துணிக்கடையில் 3 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 3 சிறுவர்கள் தப்பி ஓடிவிட்டனர். கடை உரிமையாளர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. வண்ணாரப்பேட்டை ஜிஏ ரோடு, எம்.சி. ரோடு பகுதிகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துணிக் கடைகள் உள்ளன. இங்கு தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடை வாங்குவதற்காக ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் வண்ணாரப்பேட்டை எம்சி ரோடு, என்என் கார்டன் பகுதிகளில் 3 துணிக் கடைகள் ‘கேஜிஎப்’ என்ற பெயரில் நடத்தப்பட்டு வருகின்றன. இங்கு ஆண்களுக்கு தேவையான அனைத்து வகையான துணிகளும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த கடையில் 10க்கும் மேற்பட்ட 16, 17 வயதுடைய சிறுவர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக குழந்தை தொழிலாளர் ஆணையத்திற்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, தொழிலாளர் ஆணைய உதவி ஆணையர் ஜெயலட்சுமி தலைமையிலான அதிகாரிகள் என்.என். கார்டன் பகுதியில் உள்ள ‘கேஜிஎப்’ துணிக்கடையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது 16, 17 வயதுடைய 5 சிறுவர்கள் பணியில் இருந்ததும், இவர்களுக்கு குறைந்த சம்பளம் வழங்கி 10 மணி நேரத்துக்கும் மேலாக வேலை வாங்கியதும் தெரியவந்தது.

இதை தொடர்ந்து 3 சிறுவர்களை அதிகாரிகள் மீட்டனர். மேலும் 2 பேர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து அதிகாரிகள் வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் கடை உரிமையாளர் மீது புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். துணிக் கடையின் உரிமையாளர் கேஜிஎப் விக்கி என்பது தெரிய வந்தது. இவர் சென்னை பாஜ கிழக்கு மாவட்டம், ராயபுரம் மத்திய பகுதி இளைஞரணி தலைவராக உள்ளார். இவருக்கு சொந்தமான 3 கடைகளில் 10க்கும் மேற்பட்ட குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்தி குறைந்த சம்பளத்தில், 10 மணி நேரத்துக்கும் மேலாக வேலை வாங்கியுள்ளார். தீபாவளியையொட்டி துணிக்கடையில் வேலை பார்த்த குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்ட சம்பவம் வண்ணாரப்பேட்டை, எம்சி ரோடு, என்.என். கார்டன் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post பாஜ பிரமுகரின் துணிக்கடையில் 3 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு:  மேலும் 3 சிறுவர்கள் ஓட்டம்  உரிமையாளர் மீது புகார் appeared first on Dinakaran.

Tags : BJP ,Thandaiyarpet ,Diwali ,Vannarpettai ,
× RELATED வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து...