×

வடமாநில கூலி தொழிலாளர்கள் போல் சென்னையில் ஊடுருவிய வங்கதேச வாலிபர்கள் உள்பட 4 பேர் அதிரடி கைது: நாடு முழுவதும் என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனை

சென்னை: வடமாநில கூலி தொழிலாளர்கள்போல, சென்னை உட்பட நாடு முழுவதும் தீவிரவாத செயல்களில் ஈடுபடும் வகையில் தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 2 வாலிபர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவு அளித்த மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 4 பேரை என்ஐஏ அதிகாரிகள் நேற்று அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இந்தியாவின் போலி ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வங்கதேசம், மியான்மர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக கூலி தொழிலாளிகள்போல், மேற்கு வங்க மாநிலம் வழியாக இந்தியாவிற்குள் தீவிரவாத செயல்களில் ஈடுபடும் வகையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் ஊடுருவி இருப்பதாக ஒன்றிய உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அது தொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சகத்துக்கு சில தகவல்களை உளவுத்துறை அளித்து இருந்தது.

அதை உறுதி செய்யும் வகையில் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தீவிரவாத செயல்களில் ஈடுபடும் வகையில் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் நேரடியாக தொடர்பு கொண்டு, அவர்களுடன் இணைந்து சதி திட்டம் தீட்டி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு முறியடிக்கப்பட்டது. அது தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில் வங்கதேச நாட்டை சேர்ந்தவர்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபடும் வகையில், இந்தியாவில் வடமாநில தொழிலாளர்கள் போல் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை போலியாக தயாரித்து சென்னை உட்பட நாடு முழுவதும் கட்டிட வேலை, ஜூஸ் கடைகள், ஓட்டல்கள், பனியன் தொழிற்சாலைகள் என பல்வேறு கூலி வேலைகளில் தொழிலாளர்கள் போர்வையில் ஊடுருவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதை உறுதி செய்யும் வகையில், இலங்கையைச் சேர்ந்த இம்ரான் கான் என்பவரை என்ஐஏ அதிகாரிகள் கடந்த மாதம் பெங்களூருவில் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பலர் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இந்தியாவுக்குள் ஊடுருவி இருப்பது தெரிய வந்துள்ளது. பிறகு இம்ரான் கான் அளித்த தகவலின் படி, போலி ஆவணங்கள் மூலம் சட்டவிரோதமாக இந்தியாவில் ஊடுருவியதாக தினகரன் (எ) அய்யா, காசி விஸ்வநாதன், ரசூல், சதாம் ஹூசேன், அப்துல் அமீது என 5 பேர் மீது என்ஐஏ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக, என்ஐஏ அதிகாரிகள் தமிழ்நாடு, திரிபுரா, மேற்கு வங்கம், கர்நாடகா, தெலுங்கானா, அசாம், அரியானா, புதுச்சேரி, ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர் ஆகிய 10 மாநிலங்களில் ஒரு நேரத்தில் சட்டவிரோதமாக நாட்டிற்குள் ஊடுருவி உள்ள நபர்கள் மற்றும் தீவிரவாத செயல்களுக்கு ஆதரவாக அடைக்கலம் கொடுத்த நபர்களின் தொடர்புடைய இடங்களில் நேற்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக தமிழ்நாட்டில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள், திருப்பூர் என 4 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில், சென்னை புறநகர் பகுதியான செங்கல்பட்டு மாவட்டத்தின் மறைமலைநகர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள படப்பை பகுதிகளில் வடமாநில தொழிலாளர்கள் அதிகளவில் வசித்து வரும் இடங்களில் உள்ளூர் போலீசார் உதவியுடன் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் மறைமலைநகர் கரூநீலம் கோவிந்தாபுரம் பகுதியில் ஜூஸ் மற்றும் டீக்கடையில் தங்கி வேலை செய்து வந்த திரிபுரா மாநிலத்தை சேர்ந்த எம்.டி.முன்னா(30) மற்றும் அவருடன் தங்கி இருந்த கொல்கத்தாவை சேர்ந்த மியான் (28) ஆகிய 2 பேரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

இவர்கள் இருவரும், இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ள பாப்புலர் ப்ரண்ட்ஸ் அப் இந்தியா அமைப்பில் நேரடியாக தொடர்பில் இருந்தது தெரியவந்தது. அதில் எம்.டி.முன்னா வங்கதேச நாட்டை சேர்ந்தவர் என்றும், இவர், திரிபுரா மாநிலத்தில் பிறந்தவர் போன்று போலியான ஆதார் அட்டை தயாரித்து அதன் மூலம் கூலி தொழிலாளி போல் ஜூஸ் கடையில் பணியாற்றி வந்தது தெரியவந்தது. இவர் தனது கூட்டாளியான கொல்கத்தாவை சேர்ந்த மியான் என்பவருடன் சேர்ந்து கடந்த 2 மாதங்களாக ஜூஸ் கடையில் வேலை செய்து வந்துள்ளார்.

அதோடு இல்லாமல், எம்.டி.முன்னா சட்டவிரோதமாக வங்கதேச நாட்டை சேர்ந்தவர்களுக்கு திரிபுரா மாநிலத்தை சேர்ந்தவர் போல் போலியாக ஆதார் அட்டை தயாரித்து கொடுத்து, அதன் மூலம் இந்திய குடியுரிமை பெற்ற நபர் போல் சென்னை, புதுச்சேரி பகுதியில் கூலி தொழிலாளிகள் போல் பணியாற்ற உதவி செய்து இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. விசாரணைக்கு பிறகு வங்க தேசத்தை சேர்ந்த எம்.டி.முன்னா மற்றும் அவரது நண்பரான மியான் ஆகியோரை கைது செய்தனர். எம்.டி.முன்னா தங்கி இருந்த அறையில் இருந்து வழக்கு தொடர்பான பல முக்கிய ஆவணங்களை என்ஐஏ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும், எம்.டி.முன்னா அளித்த தகவலின் படி, ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள படப்பை பகுதியில் வங்கதேச நாட்டை சேர்ந்த ஒரு வாலிபர் போலி முகவரி மூலம் தங்கியிருப்பதாக என்ஐஏ அதிகாரிகளுக்கு தெரியவந்தது. அதனை தொடர்ந்து, என்ஐஏ அதிகாரிகள் குழு ஒன்று படப்பை பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில், வண்டலூர்-வாலாஜாபாத் சாலை, கீழ்படப்பை பகுதியில் ஒரு தனியார் விடுதியில் சகாபுதீன்(30) என்பவர் தங்கி, அதே பகுதியில் உள்ள ஒரு ஓட்டல் ஒன்றில் தொழிலாளியாக வேலை செய்து வருவதை என்ஐஏ அதிகாரிகள் கண்டறிந்தனர்.

அதை தொடர்ந்து, அந்த விடுதிக்கு சென்று சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த சகாபுதீன் என்பவரை என்ஐஏ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். விசாரணையில், அவர் கடந்த 2 மாதங்களாக இவ்விடுதியில் போலி முகவரி மூலம் தங்கி தனியார் ஓட்டலில் வேலை பார்த்து வந்தது உறுதியானது. அவர் தங்கியிருந்த அறையை சோதனை செய்த போது பல்வேறு நபர்களின் போலியான ஆதார் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட சகாபுதீன், எப்படி வங்க தேசத்தில் இருந்து இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக வந்தார், இந்தியாவில் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடத்த திட்டமிட்டு உள்ளாரா, இவருக்கு பல்வேறு தீவிரவாத இயக்கங்களுடன் ஏதேனும் தொடர்பு உள்ளதா என பல்வேறு கோணங்களில் என்ஐஏ அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மேலும், சகாபுதீன் கொடுத்த தகவலின் படி என்ஐஏ அதிகாரிகள் திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட துராபள்ளம் கிராமம் பிள்ளையார் கோயில் தெருவில் சட்டவிரோதமாக வங்கதேசத்தை சேர்ந்த சப்ரான் என்பவர் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்படி என்ஐஏ அதிகாரிகள் நேற்று ஆரம்பாக்கம் போலீசார் உதவியுடன் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்ட நபர், அந்த இடத்தை விட்டு சில நாட்களுக்கு முன்பு இடம் பெயர்ந்துவிட்டது தெரியவந்தது. இருந்தாலும், அவர் தங்க இடம் கொடுத்த வீட்டின் உரிமையாளரிடம் என்ஐஏ அதிகாரிகள் அரை மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் அளித்த சில தகவலின் படி என்ஐஏ அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர்.

மேலும், கைது செய்யப்பட்ட வங்கதேச நாட்டை சேர்ந்த எம்.டி.முன்னா, சகாபுதீன் மற்றும் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா பகுதியை சேர்ந்த மியான் ஆகியோர் அளித்த தகவலின் படி, சென்னையில் பள்ளிக்கரணை, படப்பை, பெரும்பாக்கம், மறைமலைநகர், கருநீலம், ஆரம்பாக்கம் பகுதியில் சோதனை நடத்தினர். அதேபோல், புதுச்சேரி மாநிலத்திலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, புதுச்சேரி 100-அடி சாலையில் உள்ள எல்லை பிள்ளைச்சாவடி பகுதியில் தனியாருக்கு சொந்தமான குடோனில் புதுச்சேரி மாநில போலீசார் உதவியுடன் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 5 அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

மக்களோடு மக்களாக வசித்து வந்த, தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருந்த மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த பாபு என்பவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். அவனிடம் இருந்து வழக்கு தொடர்பான பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றினர். தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் அதிகளவில் பணியாற்றி வரும் திருப்பூர் மாவட்டத்தில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இந்த சோதனையில் திருப்பூரில் உள்ள பனியன் தயாரிப்பு தொழிற்சாலைகளில் வங்கதேச நாட்டை சேர்ந்தவர்கள் யாரேனும் போலி ஆதார் அட்டைகள் மூலம் பணியாற்றி வருகின்றனரா என சோதனை நடத்தினர்.

குறிப்பாக திருப்பூரை பல்லடம் அருகே உள்ள அருள்புரம் குமரன் நகர், வளையங்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள 3 பனியன் தொழிற்சாலைகளில் என்ஐஏ அதிகாரிகள் வடமாநில தொழிலாளர்களின் ஆவணங்களை சரிபார்க்கும் வகையில் சோதனை மேற்கொண்டனர். கடந்த மாதம் இறுதியில் சென்னை அடுத்த அம்பத்தூர் பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் சிலர் தகராறில் ஈடுபட்டு விசாரணைக்கு சென்ற காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக நடத்திய விசாரணையில் வடமாநில தொழிலார்கள் போல், சிலர் தீவிரவாதத்தை பரப்பும் செயல்களில் ஈடுபடும் வகையில் ஊடுருவி இருப்பதாக என்ஐஏ அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன்படியே சென்னை மற்றும் புறநகர் பகுதியில் சோதனை நடத்தியதாக என்ஐஏ தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் 10 மாநிலங்களில் இந்த இந்த சோதனை நடந்து வருகிறது. இந்த சோதனை முடிந்தால் தான் கட்டிட வேலை என கூலி தொழிலாளர்கள் போல் வங்கதேசம் உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்தவர்கன் எத்தனை பேர் இந்தியாவில் சட்ட விரோதமாக ஊடுருவி உள்ளனர் என்ற தகவல் முழுமையாக தெரியவரும் என என்ஐஏ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* என்ஐஏ ரெய்டு 44 பேர் கைது
நாடு முழுவதும் என்ஐஏ நடத்திய சோதனையில் ஆள்கடத்தலில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த 44 பேர் கைது செய்யப்பட்டனர். திரிபுரா, அசாம், மேற்கு வங்காளம், கர்நாடகா, தமிழ்நாடு, தெலுங்கானா, அரியானா, ராஜஸ்தான் மற்றும் ஜம்மு காஷ்மீர் மற்றும் புதுச்சேரி யூனியன்ஆகிய பகுதிகளில் 55 இடங்களில் இந்த சோதனை நடந்தது. இதில் 21 பேர் திரிபுராவில், 10 பேர் கர்நாடகாவில், 5 பேர் அசாமில், 3 பேர் மேற்கு வங்கத்தில், தமிழ்நாட்டில் 2 பேர் , புதுச்சேரி, தெலுங்கானா, அரியானாவில் தலா ஒருவர் கைது செய்யப்பட்டனர். ஜம்மு மற்றும் சம்பா மாவட்டங்களில் நடத்தப்பட்ட சோதனையின் போது ஜாபர் ஆலம் என அடையாளம் காணப்பட்ட மியான்மரை சேர்ந்த ரோஹிங்கியா முஸ்லிம் உட்பட மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த சோதனையில் ஏராளமான டிஜிட்டல் சாதனங்கள், ஆதார் மற்றும் பான் கார்டுகள் உள்ளிட்ட போலி அடையாள ஆவணங்கள், ரூ.20 லட்சத்திற்கும் அதிகமான ரொக்கப் பணம் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ.4 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலரும் பறிமுதல் செய்யப்பட்டன.

The post வடமாநில கூலி தொழிலாளர்கள் போல் சென்னையில் ஊடுருவிய வங்கதேச வாலிபர்கள் உள்பட 4 பேர் அதிரடி கைது: நாடு முழுவதும் என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனை appeared first on Dinakaran.

Tags : Chennai ,northern state ,NIA ,Bangladesh ,northern ,Dinakaran ,
× RELATED சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இளம்பெண்...