×

கல்யாண மன்னனிடம் ரூ.65 லட்சம் நகை, பணம் இழந்த 5வது மனைவி: திரும்ப கேட்டதால் ஆபாச புகைப்படம், செல்போன் எண் வெளியிட்டு அட்டூழியம்

வேலூர்: மோசடி செய்த ரூ.65 லட்சம் மதிப்பு நகை, பணத்தை திரும்ப கேட்ட 5வது மனைவியின் செல்போன் எண், புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்ட கல்யாண மன்னன் மீது வேலூர் எஸ்பி அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார். mவேலூர் எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் சைபர் கிரைம் பிரிவு ஏடிஎஸ்பி கோட்டீஸ்வரன் தலைமையில் நேற்று நடந்தது. இதில் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன. அதில், ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் நாகலாபுரத்தை சேர்ந்த 38 வயது பெண் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: எனக்கு, சென்னையை சேர்ந்தவருடன் 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. 14 வயதில் மகள் உள்ளார். எனது கணவர் 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். எனது தாய் வீட்டில் மறுமணத்துக்கு ஏற்பாடு செய்தனர். இதில் திருமண செயலி மூலம் திருப்பதியை சேர்ந்த வினோத்குமார் என்பவர் அறிமுகமானார். அவர் வேலூரில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக உள்ளதாக கூறினார். அவருடன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் திருமணம் நடந்தது. தொடர்ந்து அரியூரில் வசித்து வந்தோம்.

திருமணத்திற்கு பிறகு செலவுக்காக என்னிடம் ரூ.65 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை பெற்றுக்கொண்டார். இதுகுறித்து கேட்டால் சரிவர பதிலளிக்கவில்லை. சில நாட்களில் எனது கணவருக்கு ஏற்கனவே 4 பெண்களுடன் திருமணம் நடந்திருப்பது தெரிந்து நானும், எனது மகளும் அதிர்ச்சியடைந்தோம். இதுகுறித்து கேட்டபோது, எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இதுதொடர்பாக வேலூர் மகளிர் போலீசில் புகார் அளித்தேன். விசாரணையில் எனது கணவர் மீது ஏற்கனவே பல மோசடி வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. போலீசில் நான் அளித்த புகாரை வாபஸ் வாங்கக்கோரி எனது கணவர் மிரட்டி வருகிறார்.

ஆனாலும் வாபஸ் பெற மறுத்ததால் பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதங்களில் எனது புகைப்படம் மற்றும் செல்போன் எண்களை பதிவிட்டு வருகிறார். அதன்பேரில் பலர் என்னிடம் ஆபாசமாக பேசியும், உல்லாசமாக இருக்கவும் அழைக்கின்றனர். இதனால் நானும், மகளும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம். எனவே அவர் மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். எனக்கும் எனது மகளுக்கும் பாதுகாப்பு அளிக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார். மனுவை பெற்றுக்கொண்ட ஏடிஎஸ்பி கோட்டீஸ்வரன், சமூக வலைதங்களில் பதிவு செய்யப்பட்ட புகைப்படம், செல்போன் எண்களை உடனடியாக நீக்கவும், மேலும் மோசடியாக திருமணம் செய்தவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

The post கல்யாண மன்னனிடம் ரூ.65 லட்சம் நகை, பணம் இழந்த 5வது மனைவி: திரும்ப கேட்டதால் ஆபாச புகைப்படம், செல்போன் எண் வெளியிட்டு அட்டூழியம் appeared first on Dinakaran.

Tags : Kalyana ,
× RELATED மழலை வரமருளும் பத்மநாப பெருமாள்