×

ஆறுதல் வெற்றி ஆசையில் இலங்கை: அரையிறுதிக்கு முன்னேறுமா நியூசி

பெங்களூர்: ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று பெங்களூரில் நடைபெறும் 41வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இலங்கையும், நடப்பு பைனலிஸ்ட் நியூசிலாந்து அணியும் களம் காணுகின்றன. இரு அணிகளுக்கும் இது கடைசி ஆட்டம். ஆரம்பம் முதலே அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்புள்ள அணியாக நியூசிலாந்து உள்ளது. அதற்கேற்ப புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதல் 4 இடங்களில் இன்று வரை தொடர்கிறது.

இருந்தாலும் நியூசி அரையிறுதிக்கு முன்னேறுமா என்பது இன்னும் உறுதி செய்ய முடியாத நிலை. இது வரை விளையாடிய 8 ஆட்டங்களில் தலா 4 ஆட்டங்களில் வெற்றி, தோல்வியை சந்தித்து 8 வெற்றிப் புள்ளிகளை பெற்றுள்ளது. கூடவே அதே நிலையில் 5, 6வது இடங்களில் உள்ள பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகளும் தலா 8 புள்ளிகளுடன் உள்ளன. ரன் ரேட் அடிப்படையில் நியூசி இந்த அணிகளை முந்தி இருக்கிறது. எனினும் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசி இந்த கடைசி ஆட்டத்தில் வென்றால்தான் அரையிறுதி வாய்ப்பில் நீடிக்க முடியும்.

இந்த இக்கட்டான சூழலில்தான் இலங்கை அணியுடன் நியூசி இன்று களம் காணுகிறது. குசால் மெண்டிஸ் தலைமையிலான இலங்கை இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை. இலங்கை கிரிக்கெட் வாரியத்தையே கலைக்கும் அளவுக்கு அந்த அணி இதுவரை சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறது.

அதனால் ஏற்கனவே போட்டியில் இருந்து இலங்கை வெளியேறி விட்டது. இன்றைய ஆட்டம் முடிந்ததும், சொந்த ஊர் திரும்ப டிக்கெட் எடுத்து தயாராக இருக்கிறது. ஆனால் ஊருக்கு திரும்பும் போது ஆறுதல் வெற்றியுடன் திரும்ப முயற்சி செய்தால் நியூசியும் உடனே டிக்கெட் எடுக்க வேண்டியதுதான். அதே நேரத்தில் நியூசி வெற்றிப் பெற்றாலும், நாளை நடைபெற உள்ள தென் ஆப்ரிக்கா-ஆப்கானிஸ்தான், நாளை மறுநாள் நடைபெற உள்ள இங்கிலாந்து-பாகிஸ்தான் இடையிலான ஆட்டங்களின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும். ஒருவேளை நியூசி, ஆப்கான், பாக் என 3 அணிகளும் வெற்றிப் பெற்றாலும் அவற்றின் ரன் ரேட்தான் அரையிறுதிக்கான 4வது அணியை முடிவு செய்யும். அதனால் நியூசி இன்று பெரும் ரன்/விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற வேண்டியது அவசியம்.

* சர்வதேச களத்தில் இந்த 2 அணிகளும் இதுவரை 101 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. அவற்றில் நியூசி 51 ஆட்டங்களிலும், இலங்கை 41 ஆட்டங்களிலும் வெற்றிப் பெற்றுள்ளன. கூடவே ஒரு ஆட்டம் சரிநிகர் சமனில் முடிய, எஞ்சிய 8 ஆட்டம் கைவிடப்பட்டன. இந்த 2 நாடுகளிலும் இல்லாமல் பொதுவான நாடுகளில் இந்த 2 அணிகளும் 27முறை மோதியிருக்கின்றன. அதில் நியூசி 15-12 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

* இந்த 2 அணிகளும் கடைசியாக விளையாடிய 5 ஆட்டங்களில் 4 ஆட்டங்களில் நியூசிதான் வென்றுள்ளது. ஒரு ஆட்டம் ரத்து. உலக கோப்பை தொடர்களில் 11ஆட்டங்களில் இரு அணிகளும் களம் கண்டுள்ளன. அவற்றில் இலங்கை 6-5 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. பெங்களூர் சின்னசாமி அரங்கில் இதுவரை 29 ஒருநாள் சர்வதேச ஆட்டங்கள் நடந்துள்ளன.

* அவற்றில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் 12 ஆட்டங்களிலும், 2வது பேட்டிங் செய்த அணிகள் தலா 13 ஆட்டங்களிலும் வென்றுள்ளன. எஞ்சிய 3 ஆட்டங்கள் மழையால் ரத்தாகின. சமீபத்தில் நியூசி-பாக் இடையிலான ஒரு ஆட்டம், மழை காரணமாக பாக் வெற்றியில் முடிந்தது. நடப்பு உலக கோப்பையில் நியூசிலாந்து, இலங்கை என 2 அணிகளும் 2வது முறையாக பெங்களூரில் களம் காணுகின்றன. மொத்ததில் நியூசி 4 ஆட்டங்களில் இங்கு விளையாடி 3ல் இந்தியாவிடமும், ஒன்றில் பாகிஸ்தானிடமும் தோல்வியை தழுவியது. இலங்கை இங்கு 2 ஆட்டங்களில் விளையாடி இருக்கிறது. பெங்களூர் அரங்கின் முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்தியாவிடம் தோற்றது. இலங்கை 2வது ஆட்டத்தில் சில நாட்களுக்கு முன்பு நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை வீழ்த்தியது.

The post ஆறுதல் வெற்றி ஆசையில் இலங்கை: அரையிறுதிக்கு முன்னேறுமா நியூசி appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Bangalore ,ICC World Cup cricket match ,
× RELATED சாந்தனின் உடலை இலங்கைக்கு கொண்டு...