×

செஞ்சி அருகே பரபரப்பு: தனியார் கேஸ் குடோனில் சிலிண்டர் வெடித்ததால் ஆட்டோ சிதறியது

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் ஊரணி தாங்கல் கிராமத்தின் அருகே தனியாருக்கு சொந்தமான கேஸ் குடோன் உள்ளது. இங்கு லாரிகளில் இருந்து வரும் சிலிண்டர்கள் இறக்கி வைத்து, பின்னர் செஞ்சி மற்றும் சுற்றுப்புற கிராமங்களுக்கு லோடு கேரியர் வாகனங்களில் எடுத்துச் சென்று விநியோகம் செய்வது வழக்கம்.

இந்நிலையில் நேற்று மாலை லாரியில் வந்த சிலிண்டர்கள் குடோனில் இறக்கி வைத்து மீதமுள்ள சிலிண்டர்களை விநியோகம் செய்வதற்காக வேன்கள் மற்றும் ஆட்டோக்களில் இறக்கி வைக்கப்பட்டு குடோன் அருகில் உள்ள வளாகத்தில் நிறுத்திவிட்டு சென்று விட்டனர். இன்று அதிகாலை 4.30 மணி அளவில் ஆட்டோவில் இருந்து கரும் புகை வெளியானது. இதனை கண்ட அருகில் இருந்த டீக்கடை உரிமையாளர் கோபி குடோன் மேலாளருக்கு தகவல் தெரிவித்தார்.

பின்னர் சிறிது நேரத்தில் ஆட்டோ தீப்பிடித்து மளமளவென எரிய தொடங்கியது. உடனடியாக செஞ்சி தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைப்பதற்கு முன்பே ஆட்டோவில் இருந்த சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் அக்கம் பக்கத்தினர் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

பின்னர் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் நீண்டநேரம் போராடி தீயை அணைத்தனர். ஆட்டோவில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் ஆட்டோ சுக்குநூறாகி சின்னா பின்னமானது. அருகில் இருந்த வேன் தீப்பிடித்து எரிந்து சேதம் அடைந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post செஞ்சி அருகே பரபரப்பு: தனியார் கேஸ் குடோனில் சிலிண்டர் வெடித்ததால் ஆட்டோ சிதறியது appeared first on Dinakaran.

Tags : Pandemonium ,Senchi ,Urani Thangal village ,Senchi-Tindivanam ,highway ,Villupuram district.… ,Bustle ,Dinakaran ,
× RELATED செஞ்சி அரசு ஒழுங்குமுறை விற்பனை...