*கலெக்டர் பேச்சு
திருப்பதி : திருப்பதி அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் மருத்துவ முகாம்களில் சிகிச்சை அளித்து ஆரோக்கியமான கால்நடைகளை உருவாக்க வேண்டும் என்று கலெக்டர் வெங்கடரமணா தெரிவித்தார். திருப்பதி மாவட்டம், ஏர்பேடு அடுத்த பண்டாருப்பள்ளி கிராமத்தில் ஜெகன் அண்ணா கால்நடை பாதுகாப்பு திட்டத்தின்கீழ் பல்வேறு ஸ்டால்கள் மற்றும் மருத்துவ பரிசோதனை முகாம்கள் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதனை கால்நடை பராமரிப்பு துறை இயக்குநர் அமரேந்திரகுமார், கூடுதல் இயக்குநர்கள் வெங்கட் ஆகியோருடன் கலெக்டர் வெங்கடரமணா நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது, கலெக்டர் வெங்கடரமணா பேசியதாவது:
மாநில அரசு செயல்படுத்தி வரும் ஜெகன் அண்ணா ஆரோக்கிய சுரக்ஷா திட்டத்தின் மூலம் தன்னார்வலர்கள் வீடு,வீடாக சென்று 7 வகையான பரிசோதனைகள் செய்து வருகின்றனர். மேலும், டாக்டர்கள் மருத்துவ முகாம் நடத்தி இலவச மருந்துகளை வழங்கி வருகின்றனர். கால்நடைகளுக்கு மருத்துவ பரிசோதனை, சிகிச்சை மற்றும் இலவச மருந்துகளை வழங்கி வருகின்றனர். இதன் மூலம் ஆரோக்கியமான கால்நடைகளுக்கு விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும் திட்டத்தையும் தற்போது மாநில அரசு வடிவமைத்துள்ளது.
மாநிலத்தின் 3 மாவட்டங்களில் முன்னோடி திட்டமாக இது மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக நமது மாவட்டத்தில் உள்ள பண்டாருப்பள்ளியில் கால்நடைகள் அதிகம் உள்ள பின்னணியில் முன்னோடியாக தேர்வு நடத்தப்பட்டுள்ளது. இதில் கால்நடைகள் விவரம், விவசாயிகளின் உடல்நல குறைபாடுகள் குறித்து அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் விரிவான கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
விவசாயிகளின் இல்லத்தில் 4 வகையான பரிசோதனைகள் நடத்தப்பட்டு உள்ளது. டோக்கன்கள் வழங்கி மருத்துவ முகாம் நடைபெறும் தேதிகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு சிகிச்சை அளித்து இலவச மருந்துகளை வழங்குவது, மாநிலத்தில் அனைத்து கால்நடைகளுக்கும் ெஜகன் அண்ணா ஆரோக்கிய சுரக்ஷா திட்டத்தை செயல்படுத்துவது சிறந்த திட்டம். எனவே, விவசாயிகள் அனைவரும் கால்நடைகளுக்கு மருத்துவ முகாம்களில் சிகிச்சை அளித்து ஆரோக்கியமான கால்நடைகளை உருவாக்கிட வேண்டும்.
டோக்கன் இல்லாதவர்களும் கால்நடைகளை மருத்துவ முகாம்களுக்கு அழைத்து வரலாம். இந்த திட்டத்தை செயல்படுத்த விவசாயிகள் தங்களின் மதிப்புமிக்க ஆலோசனைகளை வழங்க வேண்டும். இந்த முன்னோடி திட்டத்தில் கண்டறியப்பட்ட நல்ல ஆலோசனைகளை செயல்படுத்த மாநில அரசுக்கு தெரிவிக்கப்படும். விவசாயிகளுக்கு நிலமும், கால்நடைகளும் மிகவும் முக்கியம். அவை பாதுகாக்கப்பட்டால் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைவார்கள்.
நமது மாநில அரசு விவசாயிகளுக்கு தெளிவான எல்லைகளை நிர்ணயித்து நில உரிமை ஆவணங்களை விநியோகித்து வருகிறது. விவசாயிகளிடம் பேசி பணியாளர்கள் வீடுகளுக்கு வந்து டோக்கன் கொடுத்து மருத்துவ முகாம்கள் குறித்த விபரங்களை கூறுகின்றனர். மேலும், கால்நடைகளின் ஆரோக்கியம் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காணொலி காட்சிகளை காண்பிப்பது நல்லது. கால்நடைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்து இலவச மருந்துகளை வழங்குவது விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நாடு முழுவதும் இதை செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது. இவ்வாறு, அவர் பேசினார்.
The post ஆரோக்கியமான கால்நடைகளை உருவாக்க வேண்டும் appeared first on Dinakaran.

