×

ஆந்திராவில் மக்களுக்காக போராடினால் பொய் வழக்கு

*தெலுங்கு தேசம் கட்சி தேசிய பொதுச்செயலாளர் பேட்டி

திருமலை : ஆந்திராவில் மக்களுக்காக போராடினால் பொய் வழக்கு போடுகிறார்கள் என்று தெலுங்கு தேசம் கட்சி தேசிய பொதுச்செயலாளர் பேட்டி அளித்தார்.
தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் நாராலோகேஷ் தலைமையில் அக்கட்சியின் மாநில தலைவர் அச்சன், முன்னாள் அமைச்சர்கள் கொள்ளுரவீந்திரா, பீட்டலசுஜாதா உள்ளிட்டோர் விஜயவாடாவில் உள்ள ராஜ்பவனில் கவர்னர் அப்துல்நசீரை நேற்று சந்தித்து மனு அளித்தனர். அந்த, மனுவில் கூறியிருப்பதாவது:

ஆந்திர மாநிலத்தில் கடந்த 53 மாதங்களாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்தபோது பிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தன்னார்வ அமைப்பை தவறாக பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்துள்ளது. எந்த ஆதாரமும் இல்லாமல் முன்னாள் முதல்வர் சந்திரபாபுவை கைது செய்து 53 நாட்கள் சிறையில் அடைத்துள்ளனர். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசின் செயல்பாடுகளை கவனித்து அரசியல் சாசனத்தின் 355வது பிரிவின்கீழ் மாநிலத்தில் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டிருந்தது.

பின்னர், ராஜ்பவன் வெளியே நிருபர்களிடம் நாராலோகேஷ் அளித்த பேட்டி: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் ஆந்திரா தென்னிந்தியாவின் பீகாராக மாறிவிட்டது. தெலுங்கு தேசம் கட்சி ஆதரவாளர்கள் மீது 60 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சந்திரபாபு மீது ஆதாரம் இல்லாமல் வழக்குகள் போடப்பட்டுள்ளன. அரசியல் சாசனத்தை பாதுகாக்க வேண்டும் என்று ஆளுநரிடம் கேட்டுக்கொண்டோம். ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாணை மாநிலத்திற்கு வரவிடாமல் தடுத்தது குறித்தும் கவர்னரின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். மக்களுக்காக போராடினால் பொய் வழக்குகள் போடுகிறார்கள்.

பயம் என்பது எனது பயோடேட்டாவில் இல்லை. பொய் வாக்குகளுக்கு எதிரான எங்கள் போராட்டம் தொடரும். முதல்வர் பெயரிலும் கள்ள ஓட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநில தலைவர் அச்சன் தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியினர் நாளை(இன்று) தேர்தல் ஆணையத்தை சந்திக்க உள்ளனர். ஜனசேனாவுடன் ஆலோசனை நடத்தியுள்ளோம். விரைவில் கூட்டாக தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். மாநிலத்தில் வறட்சியால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். குடிநீர் பிரச்னை உள்ளது. இந்த பிரச்னைகள் குறித்து ஜனசேனாவுடன் இணைந்து பொது மக்களுடன் இணைந்து போராடுவோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

The post ஆந்திராவில் மக்களுக்காக போராடினால் பொய் வழக்கு appeared first on Dinakaran.

Tags : Andhra ,Telugu Desam Party ,National General Secretary ,Thirumalai ,
× RELATED ஆந்திராவில் நடுரோட்டில் வழிமறித்து...