×

கனமழையால் நீர் கசிவு கோதையாறு இடதுகரை சானல் உடையும் அபாயம்

*ரப்பர் தோட்டத்தை மூழ்கடித்த வெள்ளம்

குலசேகரம் : பேச்சிப்பாறை அணையில் இருந்து பாசனத்துக்குக்காக திறந்துவிடப்படும் தண்ணீர் கோதையாறு இடதுகரை கால்வாய் வழியாகத்தான் செல்கிறது.
பிரதான கால்வாயான இந்த கால்வாயில் பாய்ந்தோடும் தண்ணீர், பெருஞ்சாணி பகுதியில் உள்ள புத்தன் அணைக்கு செல்கிறது. இதே போன்று பெருஞ்சாணி அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரும் புத்தன் அணைக்கு வந்து பின்னர் பல்வேறு கால்வாய்களில் பிரித்து அனுப்பப்படுகிறது.

இதே போன்று சிற்றாறு1 அணையில் இருந்து பாசனத்துக்காக திறக்கப்படும் தண்ணீர் ேகாதையாறு இடதுகரை கால்வாயுடன் ேவட்டி முறிகச்சான் பகுதியில் இணைகிறது. இதனால் கோதையாறு இடதுகரை கால்வாயில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். தற்போது குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக பேச்சிப்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் மதியம் முதல் இரவு 7 மணிவரை கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் பேச்சிப்பாறை அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரும், மழை வெள்ளமும் சேர்ந்து கோதையாறு இடதுகரை கால்வாயில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் வெட்டிமுறிச்சான் அஞ்சுகண்டரை பகுதிக்கு இடைப்பட்ட பகுதியில் இந்த கால்வாயில் திடீரென நீர்க்கசிவு ஏற்பட்டது. சிறிதுநேரத்தில் கசிவு அதிகமாகவே, சாலையின் அடிப்பகுதி வழியாக வெள்ளம் பாய்ந்தோடி பள்ளமான் பகுதியில் உள்ள ரப்பர் தோட்டத்தில் புகுந்தது.
இதனால் ரப்பர் தோட்டம் முழுவதும் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. சாலையும் சிறிது சிறிதாக அரிக்கப்பட்டது. கோதையாறு இடதுகரை கால்வாயில் உடைப்பு ஏற்பட்டால் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகள் மூழ்கி பெரும் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதனால் பயந்துபோன பொதுமக்கள் உடனடியாக பொதுப்பணித்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அதிகாரிகள் விரைந்து வந்து கோதையாறு இடதுகரை கால்வாயில் நீர்க்கசிவு ஏற்பட்ட இடத்தை பார்வையிட்டனர். பின்னர் துரிதமாக செயல்பட்ட அதிகாரிகள், பேச்சிப்பாறை, சிற்றாறு1 ஆகிய அணைகளில் இருந்து பாசனத்துக்காக திறந்துவிடப்பட்ட தண்ணீரை அடைத்தனர். இதனால் கோதையாறு இடதுகரை கால்வாயில் தண்ணீரின் அளவு குறைந்தது.அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதால் கால்வாயில் உடைப்பு ஏற்படும் அபாயம் தடுக்கப்பட்டது.

போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு

கோதையாறு இடதுகரை சானலில் நீர்க்கசிவு ஏற்பட்ட இடத்தை உடனடியாக சரி செய்ய அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். இனிவரும் நாட்களில் அடைமழை பெய்ய வாய்ப்புள்ளது என்பதால் போர்க்கால அடிப்படையில் கோதையாறு இடதுகரை கால்வாயை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கனமழையால் நீர் கசிவு கோதையாறு இடதுகரை சானல் உடையும் அபாயம் appeared first on Dinakaran.

Tags : Kodaiyar ,Kulasekaram ,Pachiparai dam ,Kotaiyar ,Dinakaran ,
× RELATED பேச்சிப்பாறையில் படகில் பயணித்து வாக்களித்த மலைவாழ் மக்கள்