×

பேச்சிப்பாறையில் படகில் பயணித்து வாக்களித்த மலைவாழ் மக்கள்

*வாக்குச்சாவடியை மாற்ற கோரிக்கை

குலசேகரம் : பேச்சிப்பாறை சுற்றுவட்டார மலைவாழ் பகுதியில் வசிக்கும் மக்கள் வாக்களிப்பதற்காக படகில் பயணம் செய்து வாக்குசாவடிக்கு வந்தனர்.குமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அணையை சுற்றிலும் தச்சமலை, களப்பாறை, முடவன்பொற்றை, பின்னம் மூட்டுதேரி, நடனம்பொற்றை, தோட்டமலை, எட்டாங்குன்று, மாறாமலை, விலாமலை போன்ற மலைவாழ் கிராமங்கள் உள்ளன. இவையனைத்தும் பேச்சிப்பாறை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் ஆகும். இங்கு வசிக்கும் பொதுமக்கள் அன்றாட தேவைக்கு பேச்சிப்பாறை அணை வழியாக படகு மூலம் பயணித்து பேச்சிப்பாறை பகுதிக்கு வந்து செல்கிறார்கள்.

இந்த பகுதி மக்கள் வாக்களிப்பதற்காக பேச்சிப்பாறை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மலைவாழ் கிராமங்களில் வசிக்கும் மக்கள் பலரும் நேற்று காலை முதலே படகு மூலம் பேச்சிப்பாறை அணையை கடந்து பின்னர் 1 கி.மீ. நடந்து சென்று பேச்சிப்பாறையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க ஆர்வத்துடன் வந்த வண்ணம் இருந்தனர். படகில் வருவதற்கு, செல்வதற்கு என E40 கட்டணம் செலுத்தி பயணித்தனர்.
இதில் பெரும்பாலும் முதியோர், புதிய வாக்காளர்கள் தென்பட்டனர்.

இதுகுறித்து மக்கள் கூறுகையில், ஒவ்வொரு முறையும் தேர்தல் காலத்தில் படகில் சென்று அதிக பணம் செலவழித்து வாக்களிக்க வேண்டியுள்ளது. தச்சமலை, தோட்டமலை போன்ற பகுதியில் அரசு பள்ளிகள் உள்ளது. எனவே இங்கு மலைவாழ் பகுதியை ஒன்றிணைத்து வாக்குச்சாவடி அமைக்க வேண்டும். இல்லையெனில் தேர்தல் ஆணையம் பாதுகாப்பு வசதியுடன் இலவசமாக படகுகளை இயக்க வேண்டும் என்றனர்.

The post பேச்சிப்பாறையில் படகில் பயணித்து வாக்களித்த மலைவாழ் மக்கள் appeared first on Dinakaran.

Tags : Pachiparai ,Kulasekaram ,Kumari district ,Pachiparai Dam ,Thachamalai ,Kalaparai ,Mudavanpotai ,Binnam Litutheri ,Nanampotai ,Thotamalai ,Etangun ,Maramalai ,
× RELATED பேச்சிப்பாறை அருகே இறந்து கிடந்தது...