×

பாதை வசதியில்லாததால் நீரோடையை கடந்து செல்லும் அங்கன்வாடி குழந்தைகள்

*அருமனை அருகே பரபரப்பு

அருமனை : அருமனை அருகே இடைக்கோடு பேரூராட்சிக்குட்பட்ட கல்லாம் பொற்றை அங்கன்வாடியில் 15 குழந்தைகள் பயின்று வருகின்றனர். மேலும் 9 கர்ப்பிணிப் பெண்கள், 8 பாலூட்டும் தாய்மார்கள், 25 ஊட்டச்சத்து வாங்க வரும் குழந்தைகள் என அதிகமாக மக்கள் இம்மையத்தை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இப்பகுதிக்கு செல்ல சுமார் 20 வருடங்களாக பாதை இல்லாமல் உள்ளது.

தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் துறை நடத்தி வரும் இந்த அங்கன்வாடி மையம் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நிலத்தில் 2013- 14ல் விஜயதரணி எம்எல்ஏவின் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டப்பட்டதாகும். இம்மையத்திற்கு செல்லும் நபர்கள் ஆபத்தான முறையில் வாய்க்காலில் இறங்கி அங்கன்
வாடிக்கு செல்கின்றனர்.

பாதை வசதி கேட்டு பல மனுக்கள் கொடுத்தும் கண்டு கொள்ளப்படவில்லை. மழை காலங்களில் வெள்ளம் அங்கன்வாடி மைய கட்டிடத்தை தொட்டு செல்கின்றது. ஓடையை சார்ந்து முதிர்ச்சி அடைந்த பல வருடங்களான ரப்பர் மரங்களும் ஆபத்தான நிலையில் உள்ளன. தண்ணீரால் மண்அரிக்கப்பட்டு ரப்பர் மரம் எப்போது வேண்டுமானாலும் அங்கன்வாடி கட்டிடத்தின் மேல் சாயும் தருவாயில் ஆபத்தான முறையில் நிற்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் ஓடையில் மிதந்து வரும் விஷ ஜந்துக்கள் குழந்தைகளை விட்டுச் செல்ல வரும் பெற்றோர்களின் கால்களில் கடித்து விடுமோ என்ற அச்சமும் பெற்றோர்களுக்கு உள்ளது. எனவே இந்த அங்கன்வாடி மையத்திற்கு பாதை ஓர் அவசர தேவையாகவே கருதப்படுகிறது. ஆகையால் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் தரப்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

The post பாதை வசதியில்லாததால் நீரோடையை கடந்து செல்லும் அங்கன்வாடி குழந்தைகள் appeared first on Dinakaran.

Tags : Anganwadi ,Arumani ,Arumanai ,Kallam Pottai Anganwadi ,
× RELATED அருமனை அருகே மின்கசிவு ஏற்பட்டு வீடு தீப்பிடித்து எரிந்தது