×

திருச்செந்தூர் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஓடும் பஸ்சில் பெண்களை வீடியோ எடுத்த வடமாநில தொழிலாளர்கள்

*தகவல் தெரிவித்த வாலிபரிடம் செல்போனை பறித்த போலீஸ்காரர்

உடன்குடி : திருச்செந்தூரில் ஓடும் பஸ்சில் பெண்களை வீடியோ எடுத்த வடமாநில தொழிலாளர்கள் குறித்து தகவல் தெரிவித்த வாலிபரிடம் போலீஸ்காரர் செல்போன் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரை தாக்கிய வீடியோ, வைரலாகி வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி கல்லாமொழியில் அனல்மின் நிலையம், துறைமுகம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணிகளில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பலர், திருச்செந்தூர் மற்றும் குலசேகரன்பட்டினம், உடன்குடி பகுதிகளில் வீடு எடுத்து தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் குலசேகரன்பட்டினத்தில் இருந்து திருச்செந்தூர் வந்த அரசு பஸ்சில் பெண்களை வடமாநில தொழிலாளர்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். அப்போது பஸ்சில் இருந்த வாலிபர், இதுகுறித்து திருச்செந்தூர் பஸ் நிலையத்தில் இருந்த போலீஸ்காரர் ரத்தினமுத்துவிடம் தெரிவித்துள்ளார். ஆனால் போலீஸ்காரர், வீடியோ எடுத்த வடமாநிலத்தவர்களை விசாரிக்காமல் தகவல் தெரிவித்த வாலிபரின் செல்போனை பறித்து வைத்துக் கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர், போலீஸ்காரரிடம் ரத்தினமுத்துவிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் பஸ் நிலையத்தில் கூட்டம் கூடியது. தொடர்ந்து வாலிபருக்கு ஆதரவாக அங்கு நின்றிருந்த திருநங்கைகளும் பேச, அவர்களுடனும் போலீஸ்காரருக்கு வாக்குவாதம் ஆனது.

அப்போது பயணிகள் தெரிவித்த தகவலின் பேரில், சிறப்பு எஸ்ஐ பாஸ்கர், ஏட்டு வாசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். ஏட்டு வாசனும் விசாரிக்காமல் வாலிபரை கன்னத்தில் அறைந்து திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையத்திற்கு ஆட்டோவில் அழைத்து சென்றார். பின்னர் அவரை விடுவித்தனர். இந்த சம்பவம், பஸ் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் போலீஸ்காரருக்கும், வாலிபருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்பான வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பும் இதேபோல் வடமாநில தொழிலாளர்கள், திருச்செந்தூர் பஸ் நிலையத்தில் நின்றிருந்த பெண்களை செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். அங்கு நின்றிருந்த திருநங்கைகள், வடமாநில தொழிலாளர்களை கண்டித்து போலீசில் புகார் தெரிவித்தனர். ஆனால் அப்போதும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததாக பயணிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.

The post திருச்செந்தூர் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஓடும் பஸ்சில் பெண்களை வீடியோ எடுத்த வடமாநில தொழிலாளர்கள் appeared first on Dinakaran.

Tags : Tiruchendur bus station ,Northern ,state ,Tiruchendur ,Northern state ,Tiruchendur bus ,
× RELATED குழந்தைகளை கடத்த வந்ததாக சந்தேகம்...