சென்னை :சென்னையில் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை புறநகர் பகுதிகளில் இன்று காலை 6 மணி முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர். குறிப்பாக பெரும்பாக்கம், பள்ளிக்கரணை, படப்பை, செங்கல்பட்டு மாவட்டத்தில் கோவிந்தாபுரம் ஆகிய பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியில் டீ கார்னர் என்ற ஜூஸ் கடையில் பணியாற்றி வந்த முன்னா மற்றும் அவருடன் தங்கி இருந்த மியான் ஆகிய 2 பேரிடம் இன்று காலை முதல் 10 பேர் கொண்ட அதிகாரிகள் குழு விசாரணையில் ஈடுபட்டது. இந்த விசாரணையில் அவர்கள் வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும் திரிபுரா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் போன்று போலி ஆதார் அட்டை தயாரித்து இந்தியாவில் சட்ட விரோதமாக ஊடுருவி பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.
இதே போன்று சென்னை அடுத்த படப்பையில் சபாபுதின் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.இவரும் வங்கதேசத்தை சேர்ந்தவர் என்பதும் போலி ஆதார் அட்டை தயாரித்து இந்தியாவில் ஊடுருவி பணியாற்றி வந்ததும் விசாரணையில் அம்பலம் ஆகியுள்ளது. தொடர்ந்து, பெரும்பாக்கம், பள்ளிக்கரணை ஆகிய பகுதியில் சோதனை நடைபெற்று வருகிறது. கைது செய்யப்பட்ட 3 பேரும் கார் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். 3 பேரிடமும் விசாரணை நடைபெற உள்ளது. இதே போல், திருப்பூர் மாவட்டம் பல்லடம் பனியன் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் குறித்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post போலி ஆதார் அட்டை தயாரித்து இந்தியாவில் ஊடுருவி வேலை.. வங்கதேசத்தைச் சேர்ந்த 3 பேர் கைது : என்ஐஏ அதிரடி appeared first on Dinakaran.
