×

சின்னசேலத்தில் இரட்டிப்பு பணம் தருவதாக ஓய்வுபெற்ற கல்வி அதிகாரியிடம் ரூ.81 லட்சம் மோசடி

சின்னசேலம், நவ. 8: சின்னசேலம் அருகே கல்வி அதிகாரியிடம் இரட்டிப்பு பணம் தருவதாக கூறி ரூ.81 லட்சம் பெற்று மோசடி செய்த கணவன், மனைவி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சின்னசேலம் செங்குந்தர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி(75). ஓய்வு பெற்ற வட்டார உதவி கல்வி அலுவலர். இவருக்கு கல்லாநத்தம் கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் மூலம் பெரம்பலூர் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் மற்றும் அவரது மனைவி கற்பகம் ஆகியோர் அறிமுகமாகி உள்ளனர். இந்நிலையில் ரவிச்சந்திரன் அவரது மனைவி கற்பகம் ஆகியோர் கோவிந்தசாமியிடம், கடந்த 2020ல் தாங்கள் பணம் தந்தால் பெரிய நிறுவனத்தில் முதலீடு செய்து, இரட்டிப்பு பணம் பெற்று தருவதாக ஆசைவார்த்தை கூறியதாக தெரிகிறது.

அதன்பேரில் கோவிந்தசாமி ரூ.81 லட்சம் பணத்தை நேரடியாகவும், வங்கி கணக்கு மூலமும் கொடுத்துள்ளார். இதற்கு நம்பிக்கையாக காசோலைகளையும், பதிவில்லாத பத்திரங்களையும் கோவிந்தசாமியிடம் அவர்கள் கொடுத்துவிட்டு சென்றதாகவும் தெரிகிறது. அதன்பிறகு இதுநாள் வரையில் ரவிச்சந்திரன் கோவிந்தசாமியிடம் பெற்ற அசல் பணத்தையும் தரவில்லை. லாப தொகையையும் தரவில்லை. இதனால் அவர்கள் இருவரும் கோவிந்தசாமியை ஏமாற்றி நம்பிக்கை மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து கோவிந்தசாமி சின்னசேலம் காவல் நிலையத்தில் புகார் செய்ததன்பேரில் சின்னசேலம் போலீசாரும், மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ரவிச்சந்திரன் மற்றும் அவரது மனைவி கற்பகம் ஆகிய இருவரும் இதுபோல் திட்டக்குடி உள்ளிட்ட பகுதியிலும் மோசடி செய்ததாக திட்டக்குடி நீதிமன்றத்திலும் வழக்கு உள்ளதாக கூறப்படுகிறது.

The post சின்னசேலத்தில் இரட்டிப்பு பணம் தருவதாக ஓய்வுபெற்ற கல்வி அதிகாரியிடம் ரூ.81 லட்சம் மோசடி appeared first on Dinakaran.

Tags : Sinnesalam ,SINNSALAM ,Dinakaran ,
× RELATED சிசிடிவியில் பதிவான காட்சிகள் ஏன்...