×

திரைப்பட துறையினர் நலவாரியம் மூலம் 2,848 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தகவல்

சென்னை: திரைப்பட துறையினர் நலவாரியம் மூலம் 2,848 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சாமிநாதன் கூறினார். செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில், திரைப்படத்துறையினர் நலவாரிய புதிய உறுப்பினர்களின் அறிமுக கூட்டம் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் நேற்று தலைமை செயலகத்தில் நடந்தது.

இதில் அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது: கலைஞர் திரைப்பட துறையினரின் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை தீட்டி அவற்றை சிறப்பான முறையில் செயல்படுத்தினார். திரைப்பட துறையினர் நலனில் அக்கறை கொண்டுள்ள இந்த அரசு திரைப்பட துறையினர் மற்றும் சின்னத்திரை கலைஞர்கள் மென்மேலும் வாழ்வாதாரத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக பல்வேறு நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

இந்நாள் வரை திரைப்பட துறையினர் நலவாரியம் மூலம் திரைப்படத்துறை, சின்னத்திரை, அவை சார்புடைய தொழிலாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் உதவிடும் வகையில் 2,848 பயனாளிகளுக்கு ரூ.95 லட்சத்து 59 ஆயிரத்து 250 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த நலவாரியத்தில் தற்போது 26,792 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். 2022ம் ஆண்டுக்கு நலத்திட்ட உதவி வேண்டி வரப்பெற்ற விண்ணப்பங்களின்படி 122 பேருக்கு ரூ.7,75,500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் விரைவில் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் திரைப்பட தயாரிப்பாளர் முரளி ராமசாமி, நடிகர்கள் எம்.எஸ்.பாஸ்கர், பூச்சி எஸ்.முருகன், போஸ் வெங்கட், திரைப்பட இயக்குநர் மங்கை அரிராஜன், திரைப்பட நடிகர் பிரேம்குமார், தாடி பாலாஜி, திரைப்பட பின்னணி குரல் கலைஞர் ஜெ.மதியழகன், திரைப்பட தயாரிப்பு நிர்வாகி வி.பாக்கியராஜ், ஒலிப்பதிவாளர் பரிமளவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post திரைப்பட துறையினர் நலவாரியம் மூலம் 2,848 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Film Industry Welfare Board ,Minister ,M. P. Saminathan ,Chennai ,Saminathan ,Dinakaran ,
× RELATED பத்திரிகையாளர் வி.என்.சாமிக்கு கலைஞர்...