×

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் உறவினர்களிடம் செல்போன் திருடியவர் கைது: சிசிடிவி பதிவு மூலம் சுற்றிவளைப்பு

தண்டையார்பேட்டை: ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருபவர்களின் உறவினர்களிடம் செல்போன் திருடியவர் கைது செய்யப்பட்டார். சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைக்கு வருகின்றனர். இதில் உடல்நிலை மோசமான நிலையில் அங்கேயே தங்கி சிகிச்சை பெற்று வருபவர்களின் உறவினர்கள், நோயாளிகளுக்கு உதவியாக அங்கேயே தங்கி இருப்பது வழக்கம்.

இந்நிலையில், நோயாளிகளின் உறவினர்கள் அவசர சிகிச்சை பிரிவு அருகே இரவு நேரங்களில் தூங்கும்போது, அவர்களிடமிருந்து செல்போன், மணி பர்ஸ் உள்ளிட்டவை அடிக்கடி திருடுபோனது. இதுகுறித்து பல்வேறு புகார்கள் ஸ்டான்லி மருத்துவமனை காவல் நிலையத்திற்கு வந்தது. அதன்பேரில், வண்ணாரப்பேட்டை குற்றப்பிரிவு போலீசார், மருத்துவமனையில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, லுங்கி அணிந்துகொண்டு, நோயாளிகளின் உறவினர் போல், மருத்துவமனையில் உலா வந்த ஒருவர், அங்கு தூங்கிய நபர் அருகில் அமர்ந்து, நைசாக செல்போன் உள்ளிட்ட உடமைகளை திருடி செல்வது பதிவாகி இருந்தது.

அதை வைத்து விசாரித்தபோது, ராயபுரம் முனியப்பன் செட்டி தெருவை சேர்ந்த வெங்கடேஷ் (50) என்பது தெரிந்தது. அவரை பிடித்து விசாரித்தபோது, மருத்துவமனை வளாகத்தில் இரவு நேரத்தில் தூங்குபவர்களிடம் செல்போன் உள்ளிட்டவற்றை திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அவரை கைது செய்து ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் உறவினர்களிடம் செல்போன் திருடியவர் கைது: சிசிடிவி பதிவு மூலம் சுற்றிவளைப்பு appeared first on Dinakaran.

Tags : Stanley ,Govt Hospital ,Thandaiyarpet ,Stanley Hospital ,Chennai ,Chennai… ,Stanley Govt Hospital ,
× RELATED திருவட்டார் அருகே போதையில் தகராறு...