×

அப்போலோ புரோட்டான் மருத்துவமனையில் தலை மற்றும் கழுத்து புற்றுநோய்க்கு சிறப்பு சிகிச்சை பிரிவு தொடக்கம்

சென்னை: தரமணியில் உள்ள அப்போலோ புரோட்டான் புற்றுநோய் மருத்துவமனையில், தலை மற்றும் கழுத்து புற்று நோய்க்கான சிறப்பு சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டது. அப்போலோ குழுமம் சார்பில் சென்னை தரமணியில் அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர் இயங்கி வருகிறது. இது, தெற்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் முதல் புரோட்டான் தெரபி சென்டர் என்ற பெருமையை பெற்றுள்ளது. இங்கு புற்றுநோய்க்கு புரோட்டான் பீம் தெரப்பி என்ற உயர் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்நிலையில், உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு இந்த மருத்துவமனையில், தலை மற்றும் கழுத்து புற்றுநோய்க்கான தனி சிகிச்சை பிரிவு நேற்று தொடங்கப்பட்டது. நிகழ்ச்சியில், மருத்துவமனையின் மார்பகம், தலை மற்றும் கழுத்து கதிர்வீச்சு புற்று நோயியல் துறை இயக்குனர் சப்னா நாங்கியா, தலை மற்றும் கழுத்து அறுவை சிகிச்சை புற்று நோயியல் முதுநிலை நிபுணர்கள் சந்திப் துவாரக், நவீன் ஹெட்னே, பிரசாத் ஈஸ்வரன் ஆகியோர் பங்கேற்று, மருத்துவமனை சார்பில் தலை மற்றும் கழுத்து புற்றுநோய்க்கு அளிக்கப்படும் நவீன மருத்துவ சிகிச்சை முறை குறித்து விளக்கினர்.

அப்போது புகை பிடிப்பதாலும், புகையிலை பொருட்களை உபயோகிப்பதாலும் பெரும்பாலானவர்கள் கழுத்து, தலை புற்று நோயால் பாதிக்கப்படுகிறார்கள். இந்த நோயினை ஆரம்பகாலத்தில் கண்டறிந்து நவீன உயரிய சிகிச்சை அளித்தால் புற்று நோயில் இருந்து பூரண குணமடையலாம்.

மேலும், இந்த மையத்தின் குழுவில் கதிர்வீச்சு புற்று நோயியல் நிபுணர்கள், ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள், மருத்துவ புற்றுநோயியல் நிபுணர்கள், நோயியல் நிபுணர்கள், கதிரியக்க வல்லுனர்கள், அணு மருத்துவ நிபுணர்கள் மற்றும் மயக்க மருந்து நிபுணர்கள் உள்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் கூட்டாக ஒன்றிணைந்து நோயாளிகளுக்கு விரிவான மற்றும் தனிப்பட்ட சிகிச்சை திட்டத்தை வழங்குகின்றனர் என தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், மருத்துவமனை மருத்துவர்கள் ராகேஷ் ஜலாலி, ஆனந்த் முருகேசன், ஜெயகாந்த், மற்றும் மருத்துவ நிபுனர்கள், செவிலியர்கள் மற்றும் அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

The post அப்போலோ புரோட்டான் மருத்துவமனையில் தலை மற்றும் கழுத்து புற்றுநோய்க்கு சிறப்பு சிகிச்சை பிரிவு தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Apollo Proton Hospital ,Chennai ,Apollo Proton Cancer Hospital ,Taramani ,Dinakaran ,
× RELATED புதுப்பேட்டையில் பயிற்சி பள்ளி இன்று...