×

எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர் கொலை வழக்கு பெண் உள்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை: கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: எழும்பூர் வழக்கறிஞர் கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு கடந்த 2015 ஜனவரி 30ம் தேதி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் அன்று மாலை வாக்கு என்ணிக்கை நடந்தது. மறுநாள் காலை முடிவுகள் அறிவிக்கப்பட்டது. தேர்தலில் சங்க தலைவராக சந்தன்பாபு வெற்றி பெற்றார். இதையடுத்து, அவரது ஆதரவாளர்கள் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதையடுத்து, அங்கு வந்த வழக்கறிஞர்கள் அவர்கள் மீது கற்களை வீசி தாக்கியுள்ளனர்.

இதில் இரு தரப்புக்கும் பிரச்னை ஏற்பட்டது. அப்போது, சந்தன்பாபுவின் ஜூனியரான ஸ்டாலின் பாபுவை சிலர் கத்தியால் குத்தியுள்ளனர். இதையடுத்து, உடனடியாக ஸ்டாலின் பாபுவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் எழும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மைக்கேல், லோகேஸ்வரி, சார்லஸ், ராஜேஷ், நடராஜ், நரேஷ்குமார், முனியாண்டி, ராஜேஷ் கண்ணா, அசோக், பூபாலன், கார்த்திக், பிரசன்னா, சந்தானகிருஷ்ணன், செல்வா, பிரபா, ரஞ்சித், வினோத்குமார் ஆகிய 17 பேர் மீது சட்டவிரோதமாக கூடுதல், கூட்டுசதி, கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி டி.லிங்கேஸ்வரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஏ.கோவிந்தராஜன் ஆஜராகி வாதிட்டார். விசாரணை காலத்தில் மைக்கேல் மற்றும் ராஜேஷ் ஆகியோர் மரணமடைந்ததால் அவர்கள் மீதான வழக்கு முடித்துவைக்கப்பட்டது. மற்ற 15 பேர் மீதான வழக்கை விசாரித்த நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார். தீர்ப்பில், லோகேஸ்வரி, சார்லஸ் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. லோகேஷ்வரிக்கு ரூ.31 ஆயிரம் அபராதமும், சார்லசுக்கு ரூ.65 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. மற்ற 13 பேர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் அவர்கள் விடுதலை செய்யப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

The post எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர் கொலை வழக்கு பெண் உள்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை: கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Egmore court ,CHENNAI ,Egmore ,Dinakaran ,
× RELATED பொதுமக்கள் வசதிக்காக சூளை வழியாக...