×

இந்து மதத்தை சேர்ந்தவர்கள் என்று கூறுபவர்கள்தான் கோயிலுக்கு சொந்தமான கோடிக்கணக்கான மதிப்புள்ள நிலங்களை ஆக்கிரமித்துள்ளனர்

* ரூ.162 கோடியிலான சொத்து மீட்பு
* ஐகோர்ட்டில் அமைச்சர் சேகர் பாபு காரசார வாதம்

சென்னை: ‘‘இந்து மதத்தை சேர்ந்தவர்கள் என்று கூறி கொண்டு கோயில் நிலத்தை ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததால் உள்நோக்கத்துடன் தனக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது’’ என்று அமைச்சர் சேகர்பாபு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. சனாதனத்தை ஒழிப்பதாக பேசியதாக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பி.கே.சேகர்பாபு மற்றும் திமுக எம்.பி. அ.ராசா ஆகியோர் எந்த தகுதியின் அடிப்படையில் பதவியில் நீடிக்கிறார்கள் என்று விளக்கமளிக்குமாறு உத்தரவிடக் கோரி இந்து முன்னணி அமைப்பின் நிர்வாகிகள் தாக்கல் செய்த கோ-வாரண்டோ வழக்குகள் நீதிபதி அனிதா சுமந்த் முன் விசாரணைக்கு வந்தன.

அப்போது, அமைச்சர் உதயநிதி தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, ‘‘இந்த வழக்கில் சட்டமன்ற சிறப்பு செயலாளருக்கு பதிலாக சட்டமன்ற செயலாளரை எதிர்மனுதாரராக சேர்க்கவும், சனாதன ஒழிப்பு மாநாட்டின் வீடியோ பதிவுகளை சமர்ப்பிக்க தனியார் டிவி மற்றும் யுடியூப் சேனலுக்கு உத்தரவிடக் கோரியும் தாக்கல் செய்த மனுக்கள் மீது உடனடியாக முடிவெடுக்க வேண்டும். சரியான எதிர்மனுதாரரைச் சேர்க்காததால் இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல. எனவே, இந்த வழக்கு தள்ளுபடி செய்யத்தக்கது’’ என்று வாதிட்டார்.

இந்த இரு மனுக்கள் மீதும் எந்த உத்தரவும் பிறப்பிக்கப் போவதில்லை என்று நீதிபதி தெரிவித்தார். இதையடுத்து, மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், நான் இன்னும் வாதத்தை முடிக்கவில்லை. அமைச்சர் சேகர்பாபு தரப்பு வாதிட்ட பின்னர் தொடர்ந்து வாதிட அனுமதிக்க வேண்டும் என்றார். இதை தொடர்ந்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஜோதி ஆஜராகி வாதிட்டார். அவர் வாதிடும்போது, இந்து மதத்தை சேர்ந்தவர்கள் என்று கூறி கொண்டு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கோயில்களின் நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர். இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததால் உள்நோக்கத்துடன் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவுக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டதாக குற்றம் சாட்டி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சனாதனம் என்பதும் இந்து மதம் என்பதும் ஒன்று தான் எனக் கூறுவதை ஏற்க முடியாது. அன்பு காட்டுவது, சகோதரத்துவம், பசித்தவருக்கு உணவளிப்பதே சனாதன தர்மம். இதை இந்து மதம் என்று குறிப்பிடுவதை ஏற்க முடியாது. இந்து மதம் மிகப் பழமையான மதம் தான். தஞ்சை பெரிய கோயிலை கட்டிய ராஜராஜ சோழன் இந்துதான். ஆனால் அவர் சனாதனத்தை ஏற்கவில்லை. இந்து மதம் தோன்றிய பிறகே, சனாதன தர்மம் உருவாக்கப்பட்டது. பரந்து விரிந்த இந்து மதத்தை சனாதனம் என்ற சிறிய வட்டத்துக்குள் சுருக்க முடியாது.அமைச்சர் ஒரு தீவிர ஐயப்ப பக்தர். இந்துவாக இருப்பதில் பெருமையடைபவர். ஆனால், ஒரு போதும் மனிதனால் உருவாக்கப்பட்ட சனாதனத்தை ஏற்க முடியாது. சனாதனத்தை விலக்கினால் மட்டுமே இந்து மதத்தை மக்கள் ஏற்பார்கள்.

மனுஸ்மிருதி அடிப்படையாக கொண்டுள்ள சனாதன தர்மத்துக்கு எதிராக பேசியதில் எந்த தவறும் இல்லை. இது ஆரியர்களின் சட்டம். அது ஆரியர்களுக்கான சட்டமே தவிர தமிழர்களுக்கு அல்ல. சனாதன கோட்பாடு அடிக்கடி மாற்றக்கூடியது. திருத்தம் செய்யப்படக்கூடிய எந்த சட்டத்தையும் விமர்சிக்க முடியும். அதன் அடிப்படையில்தான் சனாதன கோட்பாட்டை ஒழிக்க வேண்டும் என்று கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் எந்த தவறும் இல்லை. சாதிய நடைமுறைகள் மக்களை சீரழித்திருக்கிறது. இந்து ஒருவர் கோயிலுக்கு சென்று சாமி கும்பிடுவதற்கு கூட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நடைமுறைகள் இன்னும் உள்ளது. இதை ஒழிக்கவே விரும்புகிறோம். இந்த கட்டுப்பாடுகளுக்கு காரணமே சனாதன கோட்பாடுகள்தான்.

தோழமை கட்சியான மார்க்சிஸ்ட் கட்சியை கவுரவப்படுத்தும் வகையில், அது நடத்திய சனாதன ஒழிப்பு மாநாட்டில் திமுக மாவட்ட செயலாளர் என்ற முறையில் சேகர்பாபு பங்கேற்றார். அரசியல் சாசனத்துக்கு விரோதமான இந்த வழக்கை தாக்கல் செய்தவருக்கு அதிக அபராதம் விதிக்க வேண்டும். சாதிய பாகுபாட்டையும், தீண்டாமையையும் ஊக்குவிக்கும் சனாதன தர்மத்தை ஏற்கச் செய்யும் வகையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சனாதன தர்மத்தை ஏற்றுக் கொள்வது, அரசியல் சாசனத்தை மதிக்காமல் இருக்கச் செய்வதைப் போன்றது.

மனு ஸ்மிருதிக்கு எதிராக பேசுவது எப்படி நாட்டின் இறையாண்மைக்கு எதிரானதாக அமையும். சதுர்மறை ஆகம சாத்திரமெல்லாம் சந்தைப் படிப்பு, நம் சொந்த படிப்பு? என்று கேள்வி எழுப்பிய வள்ளலாரும் இந்து தான். நிர்வாகம் மதச்சார்பற்றது. நிர்வாகமும், மதமும் வெவ்வேறானவை என்று வாதிட்டார். இதையடுத்து, திமுக எம்.பி. ராசா தரப்பு வாதத்துக்காக விசாரணை நாளை (இன்று) தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

* ரூ.162.41 கோடி கோயில் சொத்துக்கள் மீட்பு

சனாதன எதிர்ப்பு தொடர்பான வழக்கில் அமைச்சர் சேகர்பாபு தாக்கல் செய்த பதில் மனுவில், இந்துத்துவ இயக்கங்களை சேர்ந்த நபர்களிடம் இருந்து ரூ.162 கோடியே 42 லட்சம் மதிப்புள்ள கோயில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது திருவண்ணாமலை அம்மணி அம்மாள் மடத்திற்கு சொந்தமான ரூ.30 கோடி மதிப்புள்ள கட்டிடங்களும், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான ரூ.3.84 கோடி மதிப்புள்ள நிலமும், கன்னியாகுமரி மாவட்டம் கோதேஸ்வரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு சொந்தமான ரூ. 25 லட்சம் மதிப்புள்ள நிலத்தை சேவாபாரதி அமைப்பிடமிருந்தும், கன்னியாகுமரி வெள்ளிமலை பாலசுப்பிரமணிய சாமி கோயிலுக்கு சொந்தமான நிலத்தை ஆலய முன்னேற்ற சங்கத்திடமிருந்தும், கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரம் பகவதி அம்மன் கோயிலுக்கு சொந்தமான ரூ.18 கோடி மதிப்புள்ள நிலத்தை வேதாந்தம் என்பவரிடம் இருந்தும் மீட்கப்பட்டுள்ளது. இதேபோல், முத்துகுமாரசாமி கோயில், தஞ்சை திருவிடைமருதூர் பசுபதீஸ்வர் கோயில், பண்ருட்டி குருலட்சுமி அம்மாள் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலம் என மொத்தம் ரூ.162 கோடியை 42 லட்சம் மதிப்புள்ள கோயில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. இந்த சொத்துக்கள் எல்லாம் இந்துத்துவ அமைப்பை சேர்ந்தவர்களிடம் ஆக்கிரமிப்பில் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post இந்து மதத்தை சேர்ந்தவர்கள் என்று கூறுபவர்கள்தான் கோயிலுக்கு சொந்தமான கோடிக்கணக்கான மதிப்புள்ள நிலங்களை ஆக்கிரமித்துள்ளனர் appeared first on Dinakaran.

Tags : Minister ,Shekhar Babu Karashara ,ICourt ,Chennai ,
× RELATED காப்பீட்டு நிறுவனங்கள் நிபந்தனை: ஐகோர்ட் கருத்து