×

வணிகர்களின் சிறு தவறுகளுக்கு அபராதம் விதிக்க வேண்டாம்: அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்

கோவை: வணிகர்களின் சிறு தவறுகளுக்கு அபராதம் விதிக்க வேண்டாம் என அதிகாரிகளிடம் அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் மூர்த்தி கூறினார். கோவை மாநகராட்சி கலையரங்கில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும் ஒசூர் கோட்டங்களை சார்ந்த வணிகர்களுக்கான சமாதானத் திட்டம் விழிப்புணர்வு மற்றும் திட்ட விளக்கக் கூட்டம் நேற்று நடந்தது. வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமை வகித்து பேசியதாவது:

ரூ.50 ஆயிரத்துக்கு கீழ் வணிக வரி நிலுவைகள் வைத்துள்ள 95 ஆயிரம் வணிகர்களுக்கு வரிகள் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம்ரூ.50 ஆயிரத்துக்கு மேல் 10 லட்சம் வரையிலும்,ரூ.10 லட்சத்துக்கு மேல்ரூ.1 கோடி வரையிலும், ஒரு கோடிக்கு மேல்ரூ.10 கோடி வரையிலும்,ரூ.10 கோடிக்கு மேல் என்ற 4 கட்டமாக செயல்படுத்தப்படுகிறது. சிறு, குறு வணிகர்கள், பெரும் வணிகர்கள் என அனைவருக்கும் தகுந்தாற்போல் தள்ளுபடி செய்யப்படுகின்றது.

7,500 கோடிக்கு விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதற்கு தமிழ்நாடு மக்கள் அனைவரும் பாராட்டினார்கள். அதுபோல இத்திட்டமும் வணிகர்களுக்கு பயனுள்ளதாக அமையும். வணிகர்களிடம் இத்திட்டம் குறித்து விளக்கமளித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த துறை சார்ந்த அலுவலர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. வரி விதிப்பை ஏற்றுக் கொள்ளாமல் மேல் முறையீடு செய்துள்ளவர்கள் அதனை திரும்ப பெற வேண்டும். ஒன்றிய அரசு அரிசிக்கு ஜிஎஸ்டி வழங்கும் நடவடிக்கையில் தமிழ்நாட்டை மறந்து விட்டனர்.

அரிசிக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்க ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி உள்ளோம். 90 சதவீதம் வணிகர்கள் நேர்மையாக இருந்தாலும் 10 சதவீதம் பேர் போலியாக உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் இது போன்ற குளறுபடி உள்ளது. வணிக வரியின் மூலம் 87 சதவீதம் வருவாய் வைத்துதான் அரசு செயல்பட்டு வருகிறது. எனவே, வணிகர்கள் வரியினை நிலுவையின்றி அரசுக்கு செலுத்த வேண்டும். ஒன்றிய அரசு மாநிலத்தில் ஐஜிஎஸ்டியை முறைப்படுத்த வேண்டும். வணிகர்களின் சிறு தவறுகளுக்கு அபராதம் விதிக்க வேண்டாம் என அதிகாரிகளிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

The post வணிகர்களின் சிறு தவறுகளுக்கு அபராதம் விதிக்க வேண்டாம்: அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Minister ,Murthy ,Coimbatore Corporation… ,Dinakaran ,
× RELATED பதிவுத்துறையில் ஆவணங்கள் பதிவு...