×

புழல் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து அரங்கேறி வரும் ஆன்லைன் மோசடி: பொதுமக்கள் பீதி; போலீசார் தீவிர விசாரணை

புழல்: சென்னை புழலை அடுத்த புத்தகரம் சிங்காரவேலன் நகர் 2வது தெருவைச் சேர்ந்தவர் பாபு ஆனந்த் (57). இவர் வீட்டில் இருந்தபடியே வேலை பார்க்கும் வகையில் இணையத்தில் வேலை தேடி வந்துள்ளார். அப்போது ஒரு நிறுவனத்தைக் கண்ட பாபு ஆனந்த், அங்கு தொடர்பு கொண்டதில் முதலில் 100 ரூபாய் கொடுத்து விவரங்களை பதிவு செய்யுமாறு கூறியுள்ளனர். இதில், ஆன்லைன் வணிக ரீதியில் செயல்படும் டீலர்கள் தங்களது விற்பனையை அதிகரித்து காட்ட வேண்டும் என்பதற்காக பொருட்களை வாங்க வேண்டும்.

அந்த பொருட்களை பணம் செலுத்தி வாங்கினாலும், விற்பனை செய்தது போல அவர்களது கணக்கில் சேர்ந்து விடும். ஆனால் பொருள் உங்களுக்கு வராமல் நீங்கள் செலுத்திய பணம் மற்றும் அதற்கான கமிஷன் உங்களது கணக்கில் சிறிது நேரத்தில் வரவு வைக்கப்படும் என பாபு ஆனந்திடம் கூறியுள்ளனர். முதற்கட்டமாக 200 ரூபாயில் ஒரு பொருளை வாங்கியபோது 50 ரூபாய் கமிஷனுடன் பாபு ஆனந்த்துக்கு 250 ரூபாய் திரும்ப கிடைத்துள்ளது. அதற்கடுத்து சிறிது சிறிதாக அடுத்தடுத்து பொருட்களை வாங்குமாறு பாபுஆனந்த் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

தம்மிடம் இருந்த பணம் மட்டுமின்றி, தனிப்பட்ட நபர் கடன், மக்களிடம் இருந்தும் சிறிது தொகை என அடுத்தடுத்து பாபுஆனந்த் ரூ.79,582 முதலீடு செய்துள்ளார். அடுத்தடுத்து அவரது கணக்கில் முதலீட்டுடன், கமிஷன் தொகை சேர்ந்த போதிலும் தொடர்ந்து அவரது பணத்தை எடுக்க முடியாமல் அடுத்தடுத்த பிராஜெக்ட்டுகளை முடித்தால் மட்டுமே உங்களது கமிஷனுடன் சேர்த்து முதலீட்டை எடுக்க முடியும் என கூறப்பட்டுள்ளது. ஒரு கட்டத்திற்கு மேல் அதிர்ச்சியடைந்த பாபுஆனந்த், இது ஒரு மோசடி கும்பல் என உணர்ந்து புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதேபோல் புழல் அடுத்த புத்தகரம் பகுதியைச் சேர்ந்தவர் சசிகலா (39) என்பவருக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில், நீங்கள் மின் கட்டணம் செலுத்தவில்லை. எனவே உங்களது இணைப்பு துண்டிக்கப்படும் என வந்துள்ளது. மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்பதால் சசிகலா மின் கட்டணம் செலுத்திய தம்முடைய ரசீதை வாட்சப்பில் அனுப்பி வைத்துள்ளார். அதனை தொடர்ந்து மீண்டும் ஒரு லிங்க்கை அனுப்பி, அதில் அப்டேட் செய்ய வேண்டும் என முதற்கட்டமாக 10 ரூபாய் பிடித்துள்ளனர். சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து 2 ஆயிரம் ரூபாயை மோசடி கும்பல் சுருட்டியுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த சசிகலா இதுகுறித்து புகார் அளித்துள்ளார். புழல் அடுத்த காவாங்கரை கண்ணப்பசாமி நகரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான ராஜேசுக்கும் இதேபோன்ற சம்பவம் நடந்துள்ளது. சமீபத்தில் அவர் தனியார் வங்கியில் கிரெடிட் கார்டிற்காக விண்ணப்பித்திருந்தார். அவருக்கு கிரெடிட் கார்டு 3 நாளில் வரவுள்ளதாக அவரது செல்போனிற்கு முதலில் குறுஞ்செய்தி வந்துள்ளது. திடீரென அவரது டெபிட் கார்டில் இருந்து அடுத்தடுத்து 3 தவணையில் ரூ.1,54,422 எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ராஜேஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதேபோல் புழல் அடுத்த லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அபிராமி (30). இவருக்கு தனியார் வங்கியில் வேலைக்கான நேர்காணல் அழைப்பு வந்துள்ளது. தொடர்ந்து வங்கியின் செயலியை பதிவிறக்கம் செய்து அதில் சுய விவரங்களை பதிவேற்ற அறிவுறுத்தியுள்ளனர். பின்னர் பதிவு கட்டணமாக 25 ரூபாய் செலுத்த வேண்டும் என வந்துள்ளது. அப்போது தம்முடைய வங்கி விவரங்களை பதிவிட்டபோது OTP எண்ணைப் பெற்று ரூ.9,775 பணத்தை எடுத்துள்ளனர். உடனடியாக அபிராமி தம்முடைய போனை ஏர்பிளான் மோடில் மாற்றி பின்னர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகார்களின் பேரில் ஐபிசி 420 மோசடி, தொழில்நுட்ப சட்டப்பிரிவு என 2 பிரிவுகளில் தனித்தனியே வழக்குகளை பதிவு செய்து புழல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மோசடி மற்றும் இணைய வழி குற்றம் என்பதால் குற்றப்பிரிவு மற்றும் சைபர் பிரிவு என அனைத்து பிரிவு போலீசாரும் மோசடி தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். புழல் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து இதேபோன்று 20க்கும் மேற்பட்ட ஆன்லைன் மோசடி சம்பவங்கள் நடந்துள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் பீதி அடைந்துள்ளனர்.

The post புழல் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து அரங்கேறி வரும் ஆன்லைன் மோசடி: பொதுமக்கள் பீதி; போலீசார் தீவிர விசாரணை appeared first on Dinakaran.

Tags : Puzhal district ,Puzhal ,Babu Anand ,2nd Street, Budhagaram Singaravelan Nagar ,Puzhal, Chennai ,Dinakaran ,
× RELATED புழல் சிறையில் கைதியிடம் செல்போன் பறிமுதல்..!!