பொன்னேரி: மீஞ்சூர் அருகே ரயில் பயணிகளை குறிவைத்து வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். ஆவடி காவல் சரகத்தில் மீஞ்சூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மீஞ்சூர், நந்தியம்பாக்கம், அத்திப்பட்டு, அத்திப்பட்டு புதுநகர் ரயில் நிலைய பகுதிகளில் ரயில் பயணிகளை குறிவைத்து இரவு நேரத்தில் வழிப்பறி கொள்ளையர்கள் செயின், செல்போன் பறிப்பதில் ஈடுபட்டு வந்தனர். இதனைத் தடுக்க ஆவடி சரக ஆணையர் சங்கர் அதிரடி உத்தரவிட்டார். அதன்பேரில் துணை ஆணையர் பாலகிருஷ்ணன், உதவி ஆணையர் ராஜா ராபர்ட் மேற்பார்வையில் மீஞ்சூர் இன்ஸ்பெக்டர் சுதாகர் தலைமையில் குற்றப்பிரிவு எஸ்ஐ பழனிவேல் உள்ளிட்ட போலீசார் அத்திப்பட்டு புதுநகரில் நேற்று முன்தினம் மாறுவேடத்தில் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது 2 வாலிபர்கள் செயின் மற்றும் செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவர்களைப் பிடித்து மீஞ்சூர் காவல் நிலையம் கொண்டுவந்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள், அப்பகுதியைச் சேர்ந்த வாசு (25) மற்றும் சத்யா (22) ஆகியோர் என்பது தெரிய வந்தது. இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து, பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post ரயில் பயணிகளை குறிவைத்து வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.
