×

நக்சல் தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் காயம் மிசோரமில் 77%, சட்டீஸ்கரில் 71% வாக்குப்பதிவு

அய்சால்: ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலின் தொடக்கமாக சட்டீஸ்கர் மாநிலத்தில் 20 தொகுதிகளுக்கு முதற்கட்டமாகவும், மிசோரமில் 40 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகவும் நேற்று வாக்குப்பதிவு நடந்தது. இதில் சட்டீஸ்கரில் 71 சதவீத வாக்குகளும், மிசோரமில் 77 சதவீத வாக்குகளும் பதிவாகின. மத்தியபிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சட்டீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் முடிவதையொட்டி தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டன. சட்டீஸ்கர் மாநிலத்திற்கு மட்டும் 2 கட்டமாகவும், மற்ற 4 மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் வரும் 30ம் தேதி வரை வெவ்வேறு தேதிகளில் வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது.

அடுத்த ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்பாக நடக்கும் சட்டப்பேரவை தேர்தல் என்பதால், 5 மாநில தேர்தல் முடிவு தேசிய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளன. இந்நிலையில், 90 தொகுதிகளை கொண்ட சட்டீஸ்கர் மாநிலத்தில் 20 தொகுதிகளுக்கு முதற்கட்டமாகவும், மிசோரமில் 40 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகவும் நேற்று வாக்குப்பதிவு நடந்தது. மிசோரமில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றினர். 8.57 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள இம்மாநிலத்தில் 1,276 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 174 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

துணை ராணுவத்தினர், மாநில போலீசார் உட்பட 7,200 வீரர்கள் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மாநில முதல்வரும் ஆளும் மிசோ தேசிய முன்னணி (எம்என்எப்) கட்சி தலைவருமான சோரம் தங்கா அய்சால் தொகுதியில் வாக்களிக்க காலையிலேயே வந்தார். ஆனால் வாக்குப்பதிவு இயந்திரக் கோளாறு காரணமாக வாக்களிக்க முடியாத அவர் மீண்டும் காலை 9.40 மணி அளவில் வந்து வாக்களித்தார். மாநில காங்கிரஸ் தலைவர் லால்சாதா அய்சால் மேற்கு-3 தொகுதிகளில் காலை 7.40 மணிக்கே வந்து வாக்களித்தார். எந்த அசம்பாவிதமும் இல்லாமல் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்ததாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாலை 6 மணியுடன் முடிவடைந்த வாக்குப்பதிவில் மொத்தம் 77.39 சதவீத வாக்குகள் பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொலை தூர மாவட்டங்களில் பதிவான வாக்குகள் விவரம் உடனடியாக தெரியவில்லை என்பதால், 80 சதவீதத்திற்கும் அதிகமாக வாக்குகள் பதிவாகி இருக்கலாம் என்றும் அவர்கள் கூறி உள்ளனர். இங்கு கடந்த 2018ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் 81.61 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இம்முறை, மிசோரமில் ஆளும் மிசோ தேசிய முன்னணி (எம்என்எப்), எதிர்க்கட்சியான சோரம் மக்கள் இயக்கம் (இசட்பிஎம்), காங்கிரஸ் ஆகிய கட்சிகள் 40 தொகுதிகளிலும் போட்டியிட்டுள்ளன.

பாஜ 27 வேட்பாளர்களையும், ஆம் ஆத்மி 4 வேட்பாளர்களையும் களமிறக்கியுள்ளது. இதில் மீண்டும் எம்என்எப் கட்சியே ஆட்சியை தக்க வைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. நக்சலைட் அச்சுறுத்தல் உள்ள சட்டீஸ்கர் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. துணை ராணுவத்தினர் உட்பட 1 லட்சம் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டினர். பாதுகாப்பு காரணங்களுக்காக 10 தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரையிலும், 10 தொகுதிகளில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.

சில இடங்களில் நக்சலைட்களின் வன்முறை மற்றும் தேர்தலை புறக்கணிக்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், தேர்தல் நடந்த 20 தொகுதிகளில் 71 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், ‘‘மாலை 5 மணி நிலவரப்படி 70.89 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. தொலைதூர பகுதிகளின் வாக்கு எண்ணிக்கை விவரங்கள் தெரியவரும் போது, மொத்த சதவீதம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது’’ என்றனர். இம்மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் மற்றும் பாஜ இடையே நேரடி போட்டி நிலவுகிறது. 15 ஆண்டாக சட்டீஸ்கரில் ஆட்சி செய்த பாஜவை கடந்த 2018 தேர்தலில் காங்கிரஸ் வென்றது.

இம்முறை தொடர்ந்து 2வது முறையாக காங்கிரஸ் ஆட்சியை தக்க வைக்கும் என தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் கூறி உள்ளன. இம்மாநிலத்தில் மீதமுள்ள 70 தொகுதிகளுக்கு வரும் 17ம் தேதி 2ம் கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது. சட்டீஸ்கரின் நக்சல் பாதிப்புள்ள சுக்மா மாவட்டத்தில் நேற்று முதற்கட்ட தேர்தல் நடந்த நிலையில், மின்பா, துலெட் ஆகிய கிராமங்களின் வனப்பகுதியில் நக்சலைட்களுக்கும் கோப்ரா கமாண்டோ படை வீரர்களுக்கும் இடையே நேற்று பிற்பகலில் துப்பாக்கி சண்டை நடந்தது.

தேர்தல் பாதுகாப்புக்காக ரோந்து பணிக்கு சென்ற வீரர்களுக்கும் நக்சலைட்களுக்கும் நடந்த இந்த துப்பாக்கி சண்டையில், 4 பாதுகாப்பு படையினர் காயமடைந்தனர். இதே போல, சுக்மா மாவட்டத்தின் டோன்டமர்கா முகாமில் இருந்து எல்மகுண்டா கிராமம் வரை கோப்ரா படையினர் ரோந்து சென்ற போது ஐஇடி வகை குண்டுவெடித்தது. இதில் கமாண்டோ வீரர் ஒருவர் காயமடைந்தார். 5 மாநிலத்திலும் பதிவான வாக்குகள் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் வெளியிடப்படும்.

* 126 கிராமங்களில் முதல் முறை தேர்தல்
சட்டீஸ்கரில் நக்சலைட் தீவிரவாத்தால் பாதிக்கப்பட்ட பஸ்தர் பகுதியில் உள்ள 126 கிராமங்களில் முதல் முறையாக வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டன. அந்த கிராமங்களை சேர்ந்த மக்கள், சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக தங்கள் சொந்த கிராமத்திலேயே வாக்களித்ததாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மக்கள் வசிக்கும் பகுதியிலிருந்து 2 கிமீ தொலைவுக்குள் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட வேண்டுமென தேர்தல் ஆணையம் தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.

இதனால் அடர்ந்த காடு, மலைப் பகுதிகளிலும், கிராம மக்கள் வாக்களிக்க வெகு தொலைவுக்கு செல்லாத வகையில், அவரவர் கிராமங்களிலேயே இம்முறை வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டன. இதனால் கிராமமக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். நாராயண்பூரில் நக்சலைட் அமைப்பிலிருந்து விலகி வந்த சுமித்ரா சாஹு முதல் முறையாக வாக்களித்தார். 2018ல் விலகி வந்த அவர் தற்போது காவல் துறையில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருகிறார்.
‘நம்பகமான அரசை தேர்ந்தெடுங்கள்’

தேர்தலையொட்டி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பதிவில், ‘‘நீங்கள் உங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தும்போது, சட்டீஸ்கரில் மீண்டும் காங்கிரசின் நம்பகமான ஆட்சியை நினைவில் கொள்ளுங்கள். சட்டீஸ்கருக்கு காங்கிரஸ் தரும் உத்தரவாதம்: விவசாய கடன் தள்ளுபடி, தலா ஒரு ஏக்கருக்கு 20 குவிண்டால் நெல் கொள்முதல், நிலமற்றவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 நிதி உதவி, நெல்லுக்கு ரூ.3,200 குறைந்தபட்ச ஆதரவு விலை, 200 யூனிட் மின்சாரம் இலவசம், காஸ் சிலிண்டருக்கு ரூ.500 மானியம், எல்கேஜி முதல் முதுகலை வரை இலவசக் கல்வி, ரூ.10 லட்சம் வரை இலவச சிகிச்சை, 17.5 லட்சம் குடும்பங்களுக்கு வீடு, சாதிவாரி கணக்கெடுப்பு. நாங்கள் தரும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்’’ என கூறி உள்ளார்.

The post நக்சல் தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் காயம் மிசோரமில் 77%, சட்டீஸ்கரில் 71% வாக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : CRPF ,Naxal ,Mizoram ,Chhattisgarh ,Aizawl ,Dinakaran ,
× RELATED மணிப்பூர் சிஆர்பிஎப் முகாமில் தீவிரவாதிகள் தாக்குதல்; 2 வீரர்கள் பலி