×

ஹமாசுக்கு எதிரான போருக்கு பிறகு இஸ்ரேலின் பாதுகாப்பில் காசா இருக்கும்: சிறந்த எதிர்காலத்தை தருவதாக பிரதமர் நெதன்யாகு அறிவிப்பு

ஜெருசலேம்: ‘ஹமாசுக்கு எதிரான போருக்கு பிறகு இஸ்ரேலின் பாதுகாப்பில் காசா இருக்கும். பாலஸ்தீன மக்களுக்கு நாங்கள் உண்மையான எதிர்காலத்தை தருவோம்’ என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாலஸ்தீனத்தின் காசாவில் ஹமாஸ் படையினரை அழிக்க இஸ்ரேல் ராணுவம் நடத்தும் போர் ஒரு மாதத்தை தாண்டி தொடர்கிறது. இதில், காசாவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் பலியாகி உள்ளனர். 4,000 குழந்தைகள் இறந்துள்ளனர். அங்கு சுகாதார பேரழிவு ஏற்படும் முன்பாக உடனடியாக போர் நிறுத்தம் அறிவிக்க வேண்டுமென இஸ்ரேலுக்கு உலக நாடுகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன.

இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஏபிசி செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: நாங்கள் ஹமாசை வீழ்த்துவோம், முற்றிலும் ஒழித்து கட்டுவோம். காசா மக்களுக்கும், மத்திய கிழக்கு மக்களுக்கும் உண்மையான எதிர்காலத்தை வழங்குவோம். அதற்கு இப்போரில் நாங்கள் வெற்றி பெற வேண்டும். போருக்கு பிறகும் காசா இஸ்ரேலின் பாதுகாப்பில் தான் இருக்கும். இது காலவரையற்றதாக இருக்கும். ஏனெனில் இவ்வாறு செய்யாவிட்டால் என்ன நடக்கும் என்பதை நாங்கள் ஏற்கனவே பார்த்துள்ளோம். பாதுகாப்பிற்கு நாங்கள் பொறுப்பேற்காவிட்டால், ஹமாஸ் தீவிரவாதம் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு வெடிக்கும்.

எனவே, ஹமாசின் பாதையை தொடர விரும்பாதவர்களிடம் காசாவை ஆளும் பொறுப்பு தரப்படும். தற்போதைய சூழலில், மனிதாபிமான உதவிகள் கொண்டு செல்வதற்கும், வெளிநாட்டவர்கள் காசாவில் இருந்து வெளியேறுவதற்கும் சில மணி நேர குறுகிய கால போர் நிறுத்தம் செய்ய தயாராக இருக்கிறோம். மற்றபடி, இஸ்ரேலில் இருந்து ஹமாஸ் பிடித்துச் சென்ற 240 பணயக் கைதிகளையும் விடுவிக்காத வரையிலும் போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை.1967ல் நடந்த அரபு நாடுகளுக்கு எதிரான போருக்குப் பிறகு கிழக்கு ஜெருசலேம், காசா, மேற்கு கரை என 3 பகுதிகளையும் இஸ்ரேல் கைப்பற்றியது.

இந்த 3 பகுதிகளையும் திருப்பித் தர வேண்டுமென பாலஸ்தீனர்கள் வலியுறுத்தினர். ஆனால் ஜெருசலேமை கைப்பற்றிய இஸ்ரேல் அதை தனது தலைநகராக அறிவித்தது. இதனை பல உலக நாடுகள் அங்கீகரிக்கவில்லை. 2005க்குப் பிறகு காசாவில் இருந்து தனது படையை முழுவதுமாக இஸ்ரேல் வாபஸ் பெற்றது. தற்போதைய போருக்குப் பிறகு மீண்டும் காசாவை இஸ்ரேல் ஆக்கிரமிக்க கூடாது என ஏற்கனவே அமெரிக்கா எச்சரித்துள்ளது.

* ஈரான், ஹிஸ்புல்லாவுக்கு எச்சரிக்கை
ஹமாசுக்கு ஆதரவாக ஈரான் ஆதரவு பெற்ற லெபனானின் ஹிஸ்புல்லா படையினர் இஸ்ரேலுடன் எல்லையில் அவ்வப்போது சண்டையிட்டு வருகின்றனர். இது குறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறுகையில், ‘‘ஈரானும், ஹிஸ்புல்லாவும் இப்போரில் முழுமையாக தலையிட்டால், அதற்கான பதிலடி மிக மிக சக்திவாய்ந்ததாக இருக்கும் என்பதை அவர்கள் அவர்கள் என நினைக்கிறேன். எனவே அந்த தவறை அவர்கள் ஒருபோதும் செய்ய மாட்டார்கள்’’ என்றார்.

The post ஹமாசுக்கு எதிரான போருக்கு பிறகு இஸ்ரேலின் பாதுகாப்பில் காசா இருக்கும்: சிறந்த எதிர்காலத்தை தருவதாக பிரதமர் நெதன்யாகு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Gaza ,Israel ,Hamas ,Netanyahu ,Jerusalem ,Hamas' ,PM ,Dinakaran ,
× RELATED ஒளிபரப்பு தடை செய்யப்பட்ட நிலையில்...