×

இங்கிலாந்து நெதர்லாந்து மோதல்

புனே: ஐசிசி உலக கோப்பை தொடரின் 40வது லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் இங்கிலாந்து நெதர்லாந்து அணிகள் இன்று மோதுகின்றன. இந்தியா முதல் முறையாக தனித்து நடத்தி வரும் உலக கோப்பை தொடரின் லீக் சுற்று இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நடப்பு சாம்பியன் என்ற பந்தாவுடன் தெம்பாகக் களமிறங்கிய இங்கிலாந்து, அடுத்தடுத்து அதிர்ச்சி தோல்விகளை சந்தித்ததுடன் அரையிறுதி வாய்ப்பையும் பறிகொடுத்தது.

அதுமட்டுமல்ல… கற்றுக்குட்டி அணிகளான ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து அணிகளை விடவும் பின்தங்கி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இங்கிலாந்து இதுவரை விளையாடிய 7 லீக் ஆட்டங்களில் ஒரு வெற்றி, 6 தோல்வியுடன் 2 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ளது. எஞ்சியுள்ள 2 போட்டியில் இன்று நெதர்லாந்து அணியையும், நவ.11ல் பாகிஸ்தானையும் சந்திக்கிறது. இந்த 2 போட்டியிலும் ஆறுதல் வெற்றிகளைப் பதிவு செய்து 6 புள்ளிகளுடன் ஓரளவு கவுரவமாக நாடு திரும்பும் முனைப்புடன் இங்கிலாந்து வீரர்கள் உள்ளனர்.

ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணி, 7 லீக் ஆட்டங்களில் 2 வெற்றி 5 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 9வது இடத்தில் உள்ளது. தென் ஆப்ரிக்கா மற்றும் வங்கதேச அணிகளுக்கு அதிர்ச்சி தோல்விகளைப் பரிசளித்த நெதர்லாந்து, நடப்பு சாம்பியனுக்கும் அதிர்ச்சி கொடுக்க வரிந்துகட்டுகிறது. இரு அணிகளுமே அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில், ஆறுதல் வெற்றிக்காக விளையாடினாலும் ஆட்டத்தில் சுவாரசியத்துக்கு பஞ்சம் இருக்காது என நம்பலாம்.

* இங்கிலாந்து: ஜோஸ் பட்லர் (கேப்டன்), மொயீன் அலி, கஸ் அட்கின்சன், ஜானி பேர்ஸ்டோ, ஹாரி புரூக், பிரைடன் கேர்ஸ், சாம் கரன், லயம் லிவிங்ஸ்டன், டேவிட் மலான், அடில் ரஷித், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட்.

* நெதர்லாந்து: ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன்), கோலின் ஆக்கர்மேன், வெஸ்லி பரேஸி, பாஸ் டி லீட், ஆர்யன் தத், சைப்ரண்ட் எங்கல்பிரெக்ட், ரயன் கிளெய்ன், தேஜா நிடமனுரு, மேக்ஸ் ஓ தாவுத், சகிப் ஸுல்பிகர், ஷரிஸ் அகமது, லோகன் வான் பீக், வாண்டெர் மெர்வ், வான் மீகரன், விக்ரம்ஜித் சிங்.

The post இங்கிலாந்து நெதர்லாந்து மோதல் appeared first on Dinakaran.

Tags : England ,Netherlands ,Pune ,ICC World Cup ,Dinakaran ,
× RELATED இந்தியா – இங்கிலாந்து மோதும் 3வது...