×

தமிழ்நாடு முழுவதும் 7,200 பட்டாசு கடைகளுக்கு அனுமதி: காலை 6-7, இரவு 7-8 மணி வரை மட்டுமே வெடிக்க வேண்டும்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் தீபாவளி பண்டிகைக்கு 7,200 பட்டாசு கடைகள் அமைக்க தீயணைப்பு துறை அனுமதி வழங்கியுள்ளது. சென்னையில் 890 கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம் கட்டுப்பாடுகளை மீறினால் பட்டாசு கடைகளுக்கான அனுமதி ரத்து செய்யப்படும் என்று தீயணைப்பு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேநேரத்தில் தமிழக அரசும் பட்டாசுகள் வெடிக்க கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 12ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பட்டாசுகள், புத்தாடைகள் வாங்க கடைகளுக்கு படையெடுத்துள்ளனர்.

வழக்கமாக தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு விற்பனை செய்ய விரும்புபவர்கள் தீயணைப்புத்துறையிடம் முன் அனுமதி பெற வேண்டும். அந்த வகையில் கடந்த 10 நாட்களாக சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் பட்டாசு கடைகள் அமைக்க விரும்பும் நபர்கள் அந்தந்த மாவட்ட தீயணைப்பு நிலைய அதிகாரிகளிடம் விண்ணப்பங்கள் வழங்கி வந்தனர். பட்டாசு கடைகள் அமைக்க விரும்புவோர் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் படி கடைகள் அமைக்க வேண்டும். கடைகளில் தீயணைப்பு சாதனங்கள் கட்டாயம் இருக்க வேண்டும்.

ஒரு கடைக்கும் மற்றொரு கடைக்கும் கட்டாயம் இடைவெளி இருக்க வேண்டும் என்ற 30 விதிகள் தீயணைப்பு துறை சார்பில் வழங்கப்பட்டுள்ளது. இந்த 30 விதிகளை முறையாக பின்பற்றி பட்டாசு கடைகள் அமைக்க முன் வரும் நபர்களுக்கு மட்டுமே கடைகள் அமைக்க அனுமதி வழங்கப்படும் என தீயணைப்பு துறை தெரிவித்திருந்தது. அதன்படி விண்ணப்பத்தில் பட்டாசு கடைகள் அமைக்கும் இடத்திற்கு தீயணைப்பு அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அதன்படி சென்னை மண்டலத்தில் மட்டும் மொத்தம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதனை ஆய்வு செய்த பிறகு 890 பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பட்டாசு கடைகள் அமைப்பதற்கான மனுக்கள் மாவட்ட வாரியாக பெறப்பட்டுள்ளது. அதனை தீயணைப்பு அலுவலர்கள் ஆய்வுக்கு பிறகு பாதுகாப்பு கருதி மொத்தம் 7,200 கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பட்டாசு கடைகள் முறையாக விதிகளை கடைப்பிடிக்க வேண்டும். அப்படி விதிமுறைகளை கடைப்பிடிக்காத பட்டாசு கடைகள் மீது புகார்கள் வந்தால் உடனே பட்டாசு கடைக்கான உரிமம் ரத்து செய்யப்படும் என்று தீயணைப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளால் ஏதேனும் தீ விபத்து நடந்தால், அவ்வற்றை தடுக்க 42 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. கூடுதலாக மாவட்டங்களில் இருந்து 26 வாகனங்கள் சென்னைக்கு வரழைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் 8,000 தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். சென்னையில் 900 பேர் பணியில் ஈடுபடுவர்கள். வரும் 11 முதல் 13ம் தேதி வரை தீயணைப்பு வீரர்களுக்கு விடுமுறை கிடையாது என்றும் அதற்கான உத்தரவுகளை தீயணைப்பு வீரர்களுக்கு தீயணைப்பு துறை சார்பில் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு சென்னையில் 500 கடைகளுக்கும், தமிழ்நாடு முழுவதும் 6,563 கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு கூடுதலாக ஆயிரம் பட்டாசு கடைகளுக்கு தீயணைப்புத்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேநேரத்தில் பாட்டாசுகள் வெடிப்பது குறித்து தமிழக மாசு கட்டுப்பாடு வாரியம் நேற்று வெளியிட்ட அறிக்கை : தீபாவளி மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் நாளாகும். இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். அதேவேளையில், பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் சிறுகுழந்தைகள், வயதானவர்கள் மற்றும் நோயாளிகள் உடல் அளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு கடந்த 4 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையில் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கியது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை தினத்தன்றும், கடந்த ஆண்டைப் போலவே காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்கவேண்டும்.

மாசு கட்டுப்பாடு வாரியம் மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், தேசிய பசுமை படைகள், பசுமை மன்றங்கள் மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் மூலம் பொதுமக்களிடையே போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி கல்வித்துறை, உயர்கல்வித்துறை மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் ஆகிய துறைகளின் செயலாளர்கள், காவல்துறை இயக்குநர், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், சுற்றுச்சூழல் துறை இயக்குநர், மாநகராட்சி ஆணையர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் ஒத்துழைப்போடு அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மூலம் தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, பொதுமக்கள் சுற்றுச் சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்ட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post தமிழ்நாடு முழுவதும் 7,200 பட்டாசு கடைகளுக்கு அனுமதி: காலை 6-7, இரவு 7-8 மணி வரை மட்டுமே வெடிக்க வேண்டும்: தமிழக அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Tamil Nadu Government ,Chennai ,Diwali festival ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...