×

தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பால் பவானி ஆற்றங்கரை பகுதிகளில் ஐஜி ஆய்வு: பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

மேட்டுப்பாளையம்: பவானி ஆற்றங்கரையோரம் மக்கள் வசிக்கும் பகுதிகளில் மேற்கு மண்டல ஐஜி நேற்று ஆய்வு மேற்கொண்டு மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தினார். கோவை மேட்டுப்பாளையம் அதன் சுற்றுவட்டாரப்பகுதியில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் பல இடங்களில் வீடுகள் சேதம் அடைந்தும், சில வீடுகளை வெள்ளம் சூழ்ந்தும் உள்ளது.

இதனால் மேட்டுப்பாளையம் நகரில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் 100 அடி உயரம் உள்ள அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வதால் பவானி ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

விரைவில் அணை தனது முழு கொள்ளளவை எட்ட உள்ள நிலையில் அணையின் பாதுகாப்பு கருதி பவானி ஆற்றில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீர் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் நேற்று மேற்கு மண்டல ஐஜி பவானீஸ்வரி மேட்டுப்பாளையம் பவானி ஆற்றின் கரை ஓர பகுதிகளான தேக்கம்பட்டி, நெல்லித்துறை, ஓடந்துறை,சிறுமுகை, ஆலாங்கொம்பு, லிங்கபுரம்,காந்த வயல் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களை நேரில் சென்று அவர்களின் குறைகளை கேட்டு இருந்து கேட்டறிந்தார். மேலும்,பவானி ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது எனவும் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது கோவை எஸ்பி பத்ரி நாராயணன்,டிஎஸ்பி பாலாஜி,இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

The post தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பால் பவானி ஆற்றங்கரை பகுதிகளில் ஐஜி ஆய்வு: பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : IG ,Bhavani ,Mettupalayam ,Bhavani river ,
× RELATED நடிகர் பாக்யராஜ் மீது போலீசில் புகார்