நெல்லை: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் யானை தந்தம் கடத்தப்படுவதாக ஒன்றிய அரசின் தூத்துக்குடி வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ராஜபாளையம் பகுதியை தூத்துக்குடி வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் வில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை கீழடிவாரத்தில் யானை தந்தங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் 10.53 கிலோ எடையுள்ள தந்தமும், 11.098 எடையுள்ள தந்தமும் என மொத்தம் 23 கிலோ எடையுள்ள 2 தந்தங்களை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைப்பற்றினர். இதன் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது.
யானை தந்தங்களை பதுக்கி வைத்தது தொடர்பாக வில்லிபுத்தூரைச் சேர்ந்த கார்த்திகேயன், வினீத்குமார், ராஜபாளையத்தைச் சேர்ந்த முருகன் ஆகிய 3 பேரை பிடித்த வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், அவர்களையும், பறிமுதல் செய்த தந்தங்களையும் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த தந்தம் பதுக்கலில் மேலும் 6 பேருக்கு ெதாடர்பிருப்பது, தெரியவந்தது. அவர்களை தூத்துக்குடி வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனர்.
The post பல லட்சம் மதிப்புள்ள யானை தந்தம் பதுக்கிய 3 பேர் சிக்கினர் appeared first on Dinakaran.
